Pages

Saturday 16 January, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -3



!! மணம் நிகழ் முறை
(அ) முற்பகுதி
1. மணமகன் மணமகளுக்கு நலங்கு!
மணநாள் காலை, மணமகனைப் பந்தலில் அமரச் செய்து, பெண் வீட்டு, பிள்ளை வீட்டு வாழ்வரசியார் நலங்கு வைப்பர். பிறகு மணமகளுக்கு அப்படியே நலங்கு வைப்புர். மணமகனை மாப்பிள்ளைத் தோழர் அழைத்து வருவார். மணமகளை தோழி அழைத்துவருவார்.

2. மண ஆடை படைத்தல்

மணமகனும் மணமகளும் உடுத்திக் கொள்ள வேண்டிய மண ஆடைகளையும், பாமாலைகளையும் ஒரு தட்டில் வைத்து அம்மையப்பர் குடங்களின் முன் வைத்து மண ஆசிரியர் படைப்பார்.

3. மண ஆடைக்கு அவையினர் வாழ்த்து

பிறகு அத்தட்டை அவையினரிடம் எடுத்துச் சென்று அவையில் மூத்தவர்கள் ஆடையைத் தொட்டு வாழ்த்துப் பெறுவர்.

4. மண ஆடை வழங்கல்

மணமகனை மணப் பந்தலுக்கு மாப்பிள்ளைத் தோழர் அழைத்து வருவார். அவருக்குரிய மண ஆடை, மாலைகளை அவருக்கு வாழ்த்தி அளிப்பார் ஆசிரியர். தோழி அழைத்துவர மணமகளும் பந்தலுக்கு வந்து, மண ஆடை மாலைகளைப் பெற்றுச் செல்வார்.

5. அரசாணிக்கால் நடுதல்

இலையோடு கூடிய அரசமரத்துச் சொம்பு ஒன்றுக்கு ஐந்து வாழ்வரசியார் கொண்டு திருமஞ்சனம் ஆட்டச் செய்து, மஞ்சள் குங்குமம், பூ அணிவித்துப் பந்தலின் கீழ்ப்புறத்துக் கால்களுக்கு இடையே நிறைகுடங்களையொட்டி, கெட்டி மேளங்கொட்ட அந்த அரசங்காலை ஆசிரியர் நடச் செய்வார். திருமணத்திற்கு இது ஆணிக்கால் எனவே, இதை "அரசாணிக்கால்" என்பர். இது மும்மூர்த்திகளின் அடையாளமாகும்.

6. மணப்பொங்கல்
மணப்பந்தலின் கீழ்ப்புறமாக மண்செப்பில் சோறு பொங்கி, இலைகளில் இட்டு வைப்பர். வீட்டுப் பெண்கள் மணமகனும், மணமகளும் மண ஆடை உடுத்தி, மாலை அணிந்து வந்து, படையல்களின் முன்பு நின்று கற்பூரம் காட்டி அம்மையப்பர் அரசாணிக் கால்களை வழிபடுவர்.

7. காப்புக்கட்டுதல்

மாப்பிள்ளையும் பெண்ணும், மண மனையில், பெண் வலம் இருக்கும்படி, அமர்ந்தும், அரசாணிக்காலுக்கு மஞ்சள் கொம்பு கட்டிய ஒரு மஞ்சள் நூலை காப்பாகக் கட்டுவார் ஆசிரியர். மணமகனின் வலயர் மணிக்கட்டில் ஆசிரியர் அதே போல் காப்பு கட்டுவார். காப்புக் கட்டும் போது கெட்டி மேளம் கொட்டும். திருமணம் இடையூறின்றி நடைபெறச் செய்யும் வேண்டுகோட் செயலிது ஆகும்.

8. பெற்றோர் போற்றல்

மாப்பிள்ளை தம் பெற்றோருக்குத் திருவடிப்பூசை செய்வார். அப்படியே பெண்ணும் செய்வார், ஆசிரியர் செய்விப்பார்.

9. ஓம்படைச் செய்தல்

மாப்பிள்ளையின் பெற்றோர் தம் மகனின் வலக்கையைப் பிடித்து ஏந்த, பெண்ணின் பெற்றோர் தம் மகனின் வலக்கையை எடுத்து, மாப்பிள்ளையின் வலக்கையில் வைத்து, பல்லாண்டு ஓம்பி வாழ்க! என வாழ்த்துவார்கள்.



திருமணம் ஏன் தேவைப்பட்டது பற்றி பெரியார் கூறுபவை....

கல்யாணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கூடி இயற்கை இன்பத்தை நுகரவும், ஒருவரையொருவர் காதலித்து ஒருவருக்கொருவர் வாழ்க்கைப்போட்டியில் ஏற்படும் சிரமத்துக்கு இளைப்பாறவும் ஆயாசம் தீர்த்துக் கொள்ளவும் ஆணுக்கு ஒரு பெண்ணும், பெண்ணுக்கு ஒர் ஆணும் வேண்டியிருக்கிறது.


-தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -4

No comments: