Pages

Thursday, 28 January 2010

பேசும் கலை வளர்ப்போம்- 17








  பேசும் கலை வளர்ப்போம் -17

   மேடையில் நின்று பேசும்போது அந்தக்கூட்டத்தில் குழுமியிருப்போரில் தொண்ணூற்றி ஐந்து சதவிகிதத்திற்குமேல் தன்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொற்பொழிவாளர் மறந்துவிடக்கூடாது.

    பேசுவதற்கு அழைக்கப்பட்டவுடன் ஒலிபெருக்கியின் முன்னால் வந்து நின்றுகொண்டு வேட்டியைக் கட்டிக் கொண்டிருப்பார்கள் சிலர்.

    வாயில் அதுவரையில் குழப்பிக் கொண்டிருந்த வெற்றிலை பாக்கு எச்சிலைத் துப்புவார்கள் சிலர்.

   இருமிக் கனைத்துக்கொண்டு பேசத் தொடங்காமலே நிற்பார்கள் சிலர். ஒலிப்பெருக்கி அமைப்பாளரிடம்  அந்தக் கருவியைச் சரியாக வைக்குமாறு கூறிக் கடுமையான சொற்களைப் பயன்படுத்துவார்கள் சிலர் அந்தச் சொற்கள் ஒலிபெருக்கி வழியாகக் கூட்டத்தினர் காதுகளிலே விழுந்து-கூட்டத்தினர் பேச்சாளர் மீது ஒருவிதமான அதிருப்தியை உருவாக்கிக் கொள்ள வழிவகுப்பதும் உண்டு!

    சில பேச்சாளர்கள், மாலைக்காகக் காத்துக் கொண்டிருந்து, மாலை கழுத்தில் போடப்படுகிற நேரத்திலே புகைப்படக்காரர் படம் எடுக்கிறாரா என்பதிலே ஆர்வங்காட்டி, எடுத்த எடுப்பிலேயே ம்க்களின் கேலிக்குரியவராக ஆகிவிடுவார்கள்.

     ஒலிபெருக்கியின் முன்னால் நின்று கொண்டிருக்கும் பேச்சாளர் தனது பேச்சை முடிக்கும் வரையில் அந்த மேடைக்குரிய மரியாதையையும்-பேச்சுக் கலைக்குரிய மதிப்பையும் பாதுகாக்கவும், போற்றிடவும் கடமைப்பட்டவராவார்.

    பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டத்தில் யாராவது ஓரிரு சிறுவர்கள், சிறுமியர்கள் எழுந்து செல்வதற்கு முயன்றிடக்கூடும். பேசுகிறவர், அதைக் கவனிக்காதது போலப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, ''ஏய்! யாரது உட்காரு! இந்தாப்பா! அந்த சனியன்களை விரட்டு!'' இப்படி ஏதாவது ஆத்திரத்தில் கூறிவிட்டால்-அந்தப் பேச்சாளரின் தரம் மிகவும் தாழ்ந்துவிடும்.

    நான் மேடையேறி பேசிய தொடக்கக் காலத்தில்  ஆதிதிராவிடர் காலனிகளில் நிறையக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.ஒருமுறை இரவு பத்து மணிக்கு ஒரு காலனியில் நானும் ஷம்சுதீன் என்ற நண்பர் ஒருவரும் பேசுவதற்காகச் சென்றிருந்தோம். இருநூறு பேர் அளவுக்குக் கூடியிருந்தனர். ஷம்சுதீன் என்னைவிட மூத்தவர்! என்னைவிட அரசியல் அனுபவம் கொண்டவருங்கூட! திருவாரூர் நாலுகால் மண்டபத்திற்கருகில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில்தான் அந்தக் கூட்டம்! ஷம்சுதீன் பேசத் தொடங்கினார். கூட்டத்தில் எதிரே ஒரு வயதானவர் ஆர்வத்துடன் அமர்ந்திருந்தார். பேச்சுக்களை சுவைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.

     ஆனால், அந்தப் பெரியவருக்கு இருமல் தொல்லை! அடிக்கடி இருமிக் கொண்டிருந்தார். .அவர் இருமுவதால் தனது பேச்சுக்கு இடையூறு ஏற்படுவதை ஷம்சுதீன் அவர்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. இரண்டு மூன்றுமுறை அந்தப்பெரியவரைப் பார்த்து 'சூ! சும்மா கிட!' என்று அவர் சீறினார். பாவம்,அந்தப் பெரியவரால் இருமலை நிறுத்தவும் முடியவில்லை. கூட்டத்திலிருந்து வெளியேறவும் இல்லை.

    மீண்டும் ஒருமுறை அந்தக் கிழவர் இருமியதுதான் தாமதம்; ஷம்சுதீன் திடீரென மேஜை மீது இருந்த சூடான தேநீரை எடுத்து அந்தக் கிழவரின் தலையில் கொட்டிவிட்டார்.

     அந்த நிகழ்ச்சி, கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே-நானும் மற்ற நண்பர்களும் அனைவரையும் அமைதிப்படுத்த வேண்டியிருந்தது.

   பேச்சாளர்கள், எத்தகைய இடையூறுகளுக்கிடையிலேயும் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், தாங்கள் எடுத்துச் சொல்லவேண்டிய கருத்துக்களிலேயே நாட்டம் செலுத்திட வேண்டும். அதே சமயத்தில் கூட்டங்களை ஏற்பாடு செய்கிறவர்க்ளும், மேடையிலும், மேடையைச் சுற்றிலும் தொண்டர்கள் வாயிலாக ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான முன்னேற்பாடுகளைக் கவனித்திட வேடண்டும்.

    மக்களால் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிற பேச்சாளர்கள் மேடையில் அமர்ந்திருக்கும்போது, அவர்களை வைத்துக்கொண்டே அவர்களுக்கு முன்னால் பேச்சாளர்கள் தங்கள் பேச்சை நீட்டிக் கொண்டே போனால் மக்கள் பொறுமையிழந்து விடுவார்.

     மறைந்த வேளாண்மைத்துறை அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவர்கள், பதவிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு தென்னாற்காடு மாவட்டத்தில் தேவபாண்டலம் என்னும் ஊரில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து என்னை அழைத்துக்கொண்டு சென்றார். எங்களுடன் இன்னொரு பேச்சாளரும் அழைக்கப்பட்டிருந்தார். அந்தப் பேச்சாளர் இயக்கத்தில் நீண்ட காலத் தொடர்புடையவர். நாங்கள் மரியாதை செலுத்தக்கூடிய இடத்திலே இருந்தவர். ஆனால் பேச்சின் மூலம் மக்களை ஈர்க்கக் கூடிய ஆற்றல் பெற்றவர் அல்லர்!.

    பெருங்கூட்டம் வெள்ளமெனத் திரண்டிருந்தது. ஊரே விழாக்காலம் கொண்டிருந்தது, திரு. கோவிந்தசாமி அவர்கள் சுருக்கமாகவும் சுவையாகவும் பேசி முடித்தார்.அடுத்து, நான் முதலில் குறிப்பிட்டவர் பேச எழுந்தார். பேசினார்-பேசினார்-பேசிக்கொண்டே இருந்தார்.

   கூட்டத்தினர் பொறுமையிழந்துவிட்டனர். எனக்குப் பேசுவதற்கு வாய்ப்பு அளிப்பாரோ, மாட்டாரோ என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துவிட்டது.போலும்!

     கூட்டத்தின் நடுப்பகுதியில் இருந்து முண்டாசு கட்டிய ஒருவர் எழுந்தார். கைகளைக் கூப்பியவாறு மேடையை நோக்கி உரத்த கூரலில் பேசினார்.

    ''அய்யா! பெரியவங்களே! நாங்க பதினெட்டு மைலிலேயிருந்து அவரு பேச்சைக் கேக்கறதுக்காக வந்திருக்கிறோம். கொஞ்சம் நீங்க உக்காருரீங்களா?'

     அதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். கூட்டத்தினர் அந்த முண்டாசுக்காரரின் கோரிக்கையை வரவேற்றுக் கையொலி செய்தனர். பேசிக் கொண்டிருந்தவருக்கு கோபம் வந்துவிட்டது.

    'அப்படியாடா அப்பா! இதோ உட்காருகிறேன்!'என்று சட்டென நாற்காலியில் அமர்ந்து விட்டார். அத்துடன் விடவில்லை. அவர் என்னை நோக்கி, 'கருணாநிதி! நீ இந்தக் கூட்டத்திலே பேசக்கூடாது! ஒரே வரியிலே முடிச்சிடு. அப்பத்தான் இந்தப் பசங்களுக்கு புத்திவரும்' என்று வற்புறுத்திச் சொன்னார்.

   நான் பேச எழுந்தேன். என்னுடைய தொடக்க உரையில் சுமார் பதினைந்து நிமிடம் அவருடைய பெருமைகளைப் பற்றியே பேசினேன். யாருடைய பெருமைகளை? அந்த முண்டாசுக்காரரால் உட்கார வைக்கப்பட்ட பேச்சாளரின் பெருமைகளை! இவரைப் போன்றவர்கள் பேச்சாளரின் ஆற்றிய பணிகளால்தான் நாங்கள் எல்லாம் இன்றைக்கு அறிமுகமாகியிருக்கிறோம். என்று உருக்கமாக உரை நிகழ்த்தினேன். அவர் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் ஒளிவிட்டதைக் கண்ட பிறகே, அவரைவிட்டுவிட்டு அரசியல் கருத்துக்களைப் பேச ஆரம்பித்தேன். சுமார் ஒன்றரை மணிநேரம் பேசிமுடித்தேன்.

     ஒருவரிக்கு மேல் பேசக்கூடாது என்று ஆணையிட்டவரே. 'இன்று உன் பேச்சு பிரமாதம்' என்று என்னைப் பாராட்டினார்.

  எனவே, தம்முடன் ஒரே மேடையில் பேச வருகின்ற தம்முடைய சகாக்களின் மனமும் நோகாமல்-அவர்களையும் அரவணைத்துக் கொண்டு-சொற்பொழிவை அமைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஓரளவு வளர்ந்துவிட்ட பேச்சாளர்களுக்குக் கட்டாயம் இருந்திட வேண்டும்.

-கலைஞர் மு. கருணாநிதி


.....இன்னும் வரும்.....18

No comments: