பேசும் கலை வளர்ப்போம்-5
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள்
அவரது குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கோ
அல்லது பெண்களுக்கோ யாரோ ஒருவருக்கு
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் திருமணம்
நடத்தி வைப்பார். பெரியார், அண்ணா, ஜீவா
இவர்கள் எல்லாம் அந்த மணவிழாக்களில்
தவறாமல் கலந்து கொள்வார்கள்.
ஒரு புலவர் (பெயரைக் குறிப்பிட்ட விரும்பவில்லை.)
மணமக்களை வாழ்த்துவோர் வரிசையில்
ஒவ்வொரு முறையும் இடம் பெறுவார்.
முற்போக்குக் கருத்துக் கொண்டவர் என்று
அவர் தன்னைச்சொல்லிக் கொண்ட போதிலும்
மணவிழாவுக்கு வந்தோரைச் சிரிக்க வைப்பதற்காக
நகைச்சுவை என்ற பெயரால் படித்த
பெண்களைக் கேலி செய்வார்.
படித்த பெண்கள் சமையற்கட்டுக்குப் போனால்
கத்திர்க்காய்ப் பெரியல் சுத்தமாக இருக்க
வேண்டுமென்பதற்காக முதலில் கத்திரிக்காய்க்குச்
சோப்புப்போட்டுக் கழுவுவார்கள் என்பார்.
காய்கறி நறுக்கும் கத்திகளில் கிருமிகள்
ஒட்டிக் கொண்டிருக்கும் என்பதற்காக அந்தக்
கத்திகளை ''டெட்டால்'' விட்டுக் கழுவுவார்கள்
என்பார். இதையே அந்த வீட்டில் நடந்த
திருமணங்களில் மூன்று தடவை
அப்புலவர் பேசியிருக்கிறார்.
ஒருமுறை நானும் இயக்குநர் பீம்சிங்
அவர்களும் கலைவாணர் வீட்டில் நடந்த
நாலாவது திருமணத்திற்குப் புறப்பட்டுக்
கொண்டிருந்தோம். பீம்சிங் வருவதற்குச்
சிறிது தாமதாகிவிட்டது.
''என்ன பீம்! திருமணம் முடிந்திருக்குமே!
அண்ணா பேச ஆரம்பித்துவிடப் போகிறார்!
வாருங்கள் விரைவாக!''
என அவசரப்படுத்தினேன்.
''அவசரப்படாதீங்க சார்! இப்பத்தான்
அந்த-----ப் புலவர் கத்திரிக்காய்க்கு சோப்பு
போட்டுக் கொண்டிருப்பார்''
என்றார் கேலியாக!
பேசியதையே பேசுதல்-அதுவும் ஒரே
ஊரில் பேசுதல்- அதிலும் ஒரே வீட்டுத்
திருமணத்தில்-அல்லது நிகழ்ச்சியில்
பேசுதல்-எந்த அளவுக்கு விரும்பத்தகாததாகப்
போய்விடுகிறது என்பதற்கு
இது எடுத்துக்காட்டு!
வேறு சிலர், சில சொற்பொழிவாளர்கள்
பேசியதையே தாங்களும் பேசி
அவர்களைப்போல மக்களின்
பாராட்டுதலைப் பெறவேண்டுமென்று
ஆசைப்பட்டுத் தோல்வியை அணைத்துக்
கொள்வதும் உண்டு!
காங்கிரஸ் ஆட்சியாளரைச் சாடுவதற்காக
நான் கூட்டங்களில் புண்யகோடி என்பவர்
வறுமையின் காரணமாகத் தன் குடும்பத்தோடு
கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட
நிகழ்ச்சியை மிகுந்த சோகப் பெருக்குடன்
விவரிப்பது உண்டு! எதிரில் இருந்து கேட்கும்
மக்கள் கண்ணீர் வடித்திடுவர்!
புண்யகோடியும் அவரது மனைவியும்
மட்டுமல்ல; பதின்மூன்று வயது மணிமேகலை
என்ற மூத்த பெண்ணும் எனத் தொடங்கி,
ஒரு வயதுப் பிஞ்சுக் குழந்தை வரை ஆறு
பிள்ளைகளும் பெற்றோருமாக எட்டுப்பேர்
வறுமைக்குப் பலியாயினர். இந்த ஆட்சியிலே
என்று உணர்ச்சி கொப்பளிக்க உரையாற்றுவேன்.
என்னுடன் கூட்டங்களில் கலந்து கொள்ளும்
எனது நண்பர் காட்டூர் இராமய்யா அவர்கள்
மேடைகளில் பேசும் ஆர்வம் கொண்டவர்,
நல்ல நண்பருங்கூட!
அவர் சட்டமன்றத் தேர்தலில் 1962-ஆம்
ஆண்டு போட்டியிட்டார்-கழகச் சார்பு
வேட்பாளராக! அவரது தொகுதியில் ஒரு
தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் புண்யகோடி
கதையைச் சொல்லி மக்களை உருகிட
வைக்க வேண்டுமென்று
நினைத்திருக்கிறார்.
பெருங்கூட்டம் கூடியிருந்தது. வேட்பாளர்
பேசுவார் என அறிவிக்கப்பட்டது! வேட்பாளர்கள்
எப்போதுமே குறைந்த நேரம் பேசி,
வாக்களர்களிடம் ஆதரவு கோரிவிட்டு
விரைவில் உரையை முடித்துக் கொள்வதே
நல்லது! நண்பர் காட்டூரார் கூட்டத்தைப்
பார்த்ததும் நீண்ட நேரம் பேச விரும்பி
புண்யகோடி கதையையும்
தொடங்கிவிட்டார்.
அந்த குடும்பத்தின் வறுமை-கஷ்டம்-அதனால்
தற்கொலை செய்து கொள்ளத் துணிந்த
கொடுமை-எல்லாவற்றையும் அடுக்கிவிட்டு,
அவர்களைக் கிணற்றடிக்கு அழைத்து வந்து விட்டார்.
முதல் பிள்ளை மணிமேகலை என்று பெயரையும்
கூறிவிட்டு, அத்துடன் நிறுத்தாமல் அதன்
வயது ஐந்து என்று கூறி, அதைத் தூக்கி அந்தப்
பெற்றோர் கிணற்றில் போட்டதைச்
சொன்னார்.
இன்னும் ஐந்து குழந்தைகளுக்கு வயது
சொல்லவேண்டுமே! இரண்டாவது
குழந்தைக்கு வயது மூன்று என்றார்!
மூன்றாவது குழந்தைக்கு வயது இரண்டு
என்றார்! நான்காவது குழந்தைக்கு வயதைச்
சொல்ல முடியாமல் தடுமாறினார்.
மணிமேகலை வயது பதின்மூன்று என
ஆரம்பித்திருந்தால் தான் கணக்கு சரியாக
வந்திருக்கும். வயதில் தடுமாறியவுடன்,
கவலைப்படவேண்டிய மக்கள் கைதட்டி
ஆரவாரம் செய்யத் தொடங்கி விட்டார்கள்.
அது மட்டுமல்ல; இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை
வெறும் செய்தி சொல்வது போலச் சொல்லிக்
கொண்டிருந்தால் அதன் வாயிலாக உருவாக்க
நினைக்கிற உணர்ச்சியையும் எழுச்சியையும்
நிச்சயமாக மக்கள் மத்தியில் உருவாக்க
முடியாது.
பேச்சாளர்கள் அவரவர்களுக்கென்று ஒரு
தனியான பாணியை அமைத்துக்
கொள்ளவேண்டும். அவரைப்போல் பேசுகிறார்;
இவரைப்போல் பேசுகிறார் என்று மக்கள்
ஒப்பிட்டுப் பார்க்க முனைந்துவிட்டால் பிறகு
அந்தப் பாணியில் செலுத்துகிற கவனத்தைப்
பேச்சில் செலுத்திட மாட்டார்கள்.
''பானை உடைந்திருக்கிறதா இல்லையா
என்பதைத் தட்டிப்பார்த்து அதன் ஒலியில்
இருந்து அறிந்து கொள்வதைப்போல-மனிதன்
அறிவாளியா அல்லவா என்பதை
அவன் பேச்சிலிருந்து அறிந்துகொள்ளலாம்.''
என்று டெமஸ்தனீஸ் கூறியள்ளதைப்
பேச்சாளர்கள் மனத்தில் பதிய
வைத்துக் கொள்ள வேண்டும்.
-கலைஞர் மு. கருணாநிதி
இன்னும் வரும் -6
Tweet
No comments:
Post a Comment