Pages

Saturday 30 January, 2010

பேசும் கலை வளர்ப்போம் -19


  





பேசும் கலை வளர்ப்போம் -19

    இப்போது வயது நாற்பத்தி ஆறு.தோற்றம் வயதைத் தெரிவிக்காது என்றாலும் நன்கு முதிர்ச்சி பெற்ற கருத்துக்களை மேடைகளில் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். சற்றுக் குனிந்து வளைந்த, ஆனால் யாருக்கும் வளையாத கொள்கைகளை அள்ளித் தருகிறார். கறுப்புச்சட்டை மேனியை அலங்கரிக்கிறது. கையிலே சொற்பொழிவக்கான குறிப்புகள். அருகேயுள்ள மேஜையிலே அன்றைய பேச்சுக்கான ஆதாரங்களை எடுத்துக் கூறுவதற்கு வாய்ப்பான பெரிய பெரிய புத்தகங்கள். 'இங்கேதான் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டும். அதுதான் முக்கியமானது, மிக மிக முக்கியமானது'' என்ற சொற்றொடர் அடிக்கடி பேச்சிடையே வந்து கொண்டிருக்கிறது. மணிக்கணக்கில் பேசுகிறார் யார் இவர்?

     வேறு யாருமல்ல; தனது பத்தாவது வயதிலேயே திராவிடர் இயக்க மேடைகளில் பேச ஆரம்பித்தவர் இன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்-விடுதலை நாளிதழின் ஆசிரியர் - வீரமணி அவர்களைத் தான் குறிப்பிடுகிறேன்.

     பத்து வயது முதற்கொண்டே பெரியாருடன் பணிபுரிந்து கொண்டு-பள்ளியிலும் பயின்று-கல்லூரியிலும் பட்டம்பெற்று- திராவிடர் கழகத்தின் ஓய்வறியாத் தொண்டராகவும் விளங்கிய வீரமணி, இளந்தளிர்ப பருவத்திலே மேடையிலே பேசுகிற வியப்புமிகு நிகழ்ச்சியைக் காணப் பெருங்கூட்டம் திரளும்.

    பெரியாரின் தலைமையை ஏற்றுக்கொண்டோம் என்பது மட்டுமல்லாமல்-அவருடனேயே இருந்து-அவருடனேயே சுற்றுப் பயண நிகழ்ச்சிகளுக்குச் சென்று - அவரது குடிஅரசு, விடுதலை, பகுத்தறிவு ஏடுகளின் அலுவலகங்களில் பணிபுரிந்து-அவரது கொள்கைகளை எழுத்து வாயிலாகவும், பேச்சின் மூலமும் மக்களிடம் பரப்பிய பல தலைவர்கள் உண்டு.

     அவர்கள், கால வேறுபாட்டால் பல இயக்கங்களுக்குச் சென்றிருகக்கூடும். ஆனாலும் அவர்கள் தலைவர்களாக, பேச்சாளர்களாக, எழுத்தாளராக மதிக்கப்பட்டதற்கும்-மதிக்கப்படுவதற்கும்- பெரியாரிடம் பெற்ற பயிற்சியே காரணம் என்பதை அவர்களும் மறந்ததில்லை! மறைத்ததுமில்லை!

     அதைப்போலவே பெரியாரைத் தலைவராக கொண்ட பேரறிஞர் அண்ணாவின் தலைமையை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல; அவருடன் உரையாடி - அவருடன் நீண்ட சுற்றுப் பயணங்களில் கலந்துகொண்டு-அவரைப் பிரியாமல் இருந்தே பயிற்சி பெற்றுப் பல்வேறு ஆற்றல் பெற்றவர்களும் உண்டு!

    பெரியார் - அண்ணா-இருவரிடமும் பயிற்சி பெறக்கூடிய வாய்ப்பு பெற்று அவர்கள் வகுத்த இலட்சியங்களுக்காகத் தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்களும் உண்டு! அவர்கள், தாங்கள் பெற்ற அந்த பெரும் பேற்றுக்காக பெருமைப்படக்கூடியவர்கள்! அந்தக் குழுவினரில் எனக்கும் ஒரு இடம் இருந்தது என்று என்னைப்போலி எண்ணி மகிழக்கூடியவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

   மிக இளம் வயதிலேயே சிறுவர் சிறுமியர் மேடைகளில் பேசுவது இன்றைக்கு எல்லாக் கட்சிக்கூட்டங்களிலும்; ஏன், சமயநெறிகூட்டங்களில் கூடக்காணுகிற நிகழ்ச்சியாகிவிட்டது.

     ஆனால், பல சிறுவர், சிறுமியர்-ஏதோ தாங்கள் பெற்றோர் ஆசைக்காக-உற்றார் உறவினர் விருப்பத்திற்காக-அல்லது அந்தச்சிறுவர்களே அதை ஒரு 'மேனியா'வாக எடுத்துக்கொண்டு மேடைகளில் யாரையோ தாக்கியோ,புகழ்ந்தோ பேசிவிட்டு கைத்தட்டலைப்பெற்றுவிட எண்ணுகிறார்களேதவிர, தங்களுஉடைய கல்விப் பயிற்சியை வளர்த்துக்கொள்ளவும், தெளிவாகத்தெரிந்து கொள்ளவும் முனைந்திட வேண்டுமென்று அவாக்கொண்டிருப்பவர்களாகத் தெரியவில்லை.

     அத்தகைய சிறுவர்கள், அல்லது சிறுமியர்-நண்பர் வீரமணி எப்படித் தனது இளம் வயதில் இடைவிடாது உழைத்து-கல்வியில் அக்கறை காட்டி - தலைவரிடம் விசுவாசமாக இருந்து-அதே போலக் கொள்கையிலும் உறுதியாக விளங்கிடுகிறார் என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்திடவேண்டும்.

     பெரியாரின் அண்ணன் மகனார் தோழர் ஈ.வெ.கி. சம்பத், இளம்வயதிலேயே அண்ணாவுடன் நெருங்கிப் பழகி-'சொல்லின் செல்வர்'என்ற சிறப்புபெறுகிற அளவுக்குப் பேச்சாளராக விளங்கினார். கொள்கையில் நிலைத்த நெஞ்சமில்லாத காரணத்தால் அவரது அரிய ஆற்றலைத் தமிழகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இயற்கை, அவரை முழு வாழ்வு வாழ விடாமல் நம்மிடமிருந்து பறித்துகொண்டுவிட்டது. திராவிடர் இயக்கம், தமிழ் தேசியக்கட்சி, காங்கிரஸ் என்று கட்சி மாற்றங்கள் அவருக்கு ஏற்பட்ட போதிலும் வீறுகொண்ட விரிவுரையாளராகத் திகழ்ந்தார்.

   அவரை எதிர்த்து தி.மு. கழகச் சார்பில் 1962-ல் தென் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாஞ்சிலார் என்னும் நாஞ்சில் கி. மனோகரன் அவர்கள், அவருக்கு ஈடுகொடுக்கும் சொல்வல்லாராகத் திகழ்ந்தவர்- இப்போது மினவெட்டுப் போன்ற மிடுக்கான பேச்சுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிற அவர், தனது இளம்பிராயத்திலேயே மேடைகளில் முழங்கிடத் தொடங்கியவர்தான்!

     மிக இளம் பருவம் எனக் கூற முடியாவிட்டாலும் கட்டிளம் காளையாக மேடையேறிக் கனல் தெறிக்கும் சொற்களால் மக்களைக் கவர்ந்து கடினமான விஷயங்களையும் பெர்யார் பாணியில் மிக விரிவாக எடுத்துரைத்து 'வாலிப் பெரியார்' என்றே அழைக்கப்பட்ட வசீகரமிகு பேச்சழகர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்கள், மறைந்துவிட்டார் எனினும் அவரது எழுத்து, பேச்சு ஆகிய தொண்டுகளை மறந்திட இயலுமோ!

    பெரியார், அண்ணா இருவரின் அணுக்கத் தொண்டராகவும், எனக்கு உறுதுணையாகவும், இருந்த என.வி. நடராசனார் கொள்கைப்பிடிப்புடன் அழுத்தம் திருத்தமாக அனல்பொழியுமாறு ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசி, மக்களின் அன்பைப் பெற்றவரன்றோ!

    'பேசும் கலை வளர்ப்போம்' என்ற இந்தக் கட்டுரைத் தொடர் வாயிலாக, எளிய நடையில் பல இனிய நிகழ்ச்சிகளையும்-இதயத்தை தொடும் நிகழ்ச்சிகளையும் - பல்வேறு துறைகளிலும் இயக்கத்திலும் உள்ள திறமை வாய்ந்த பேச்சாளர்களைப் பற்றியும் எப்படிப்பேச வேண்டும், பேசக்கூடாது என்பன போன்ற கருத்துக்களையும்- என்னால் இயன்ற அளவு எடுத்துக் கூறியிருக்கின்றேன்.

     பேசும் கலையில் சிறந்து விளங்கிட விழைந்திடுவோர்க்கு இந்தக் கட்டுரைத் தொடரும் ஓரளவு பயன்படுமேயானால், நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன்.

- கலைஞர் மு. கருணாநிதி

----முற்றும்----

பேசும் கலை வளர்ப்போம் தொடர் இத்துடன் முற்றுபெற்றது. பேசும் கலையில் பயிற்சி பெறுவதற்கு இத்தொடர் பயன்படுமேயானால் அதுவே இப்பதிவின் வெற்றியாகும். மீண்டும் வேறொரு பேச்சாளரின் தொடரோடு சந்திக்கிறேன். ஆதரவளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது;
நன்றி
வணக்கம்.
நம்பி.

No comments: