Pages

Monday, 25 January 2010

பேசும் கலை வளர்ப்போம் -14



 

பேசும் கலை வளர்ப்போம் -14


   இலக்கிய பேச்சாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும், அரசியல் பேச்சாளர்களின் எண்ணிக்கை எல்லையற்றும் இருக்கின்ற காலகட்டத்திலே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. அரசியல் பேச்சாளர்களில் ஒரு சிலரே இலக்கியப் பேச்சாளர்களாகவும் திகழ்ந்திடக் காண்கிறோம்.

     இதிகாசங்களையும் புராணங்களையும் இன்றுள்ள உலகியலுக்கும் பொருந்தும் வண்ணம் இடையிடையே இலக்கிய அரசியல் சுவை கலந்து வழங்குகின்ற கதாகாலட்சேபப் பண்டிதர்களும்கூட இருக்கிறார்கள்.

     ஆடாமல் அசையாமல் அங்கம் சற்றுக் குலுங்கிட லாவகமாக நாலாப்புறமும் திரும்பியவாறு கடல் மடைதிறந்தாற்போலத் தமிழ்ச் சொற்களைக் கொண்டு புராணக் கதைகளைப் பல மணி நேரம் சலிப்புத் தட்டாமல் மன்றங்களில் கூறுகிற ஆற்றல் வாய்ந்தவர்களில் கிருபானந்தவாரியார் ஒருவர்.

    அங்க அசைவுகளும் முகபாவ மாற்றங்களும், வார்த்தைகளிலும் குரலிலும் திடீர் ஏற்ற இறக்கங்களும் இருக்குமெனினும் கவர்ச்சியாக இதிகாசக் கதைகளையும் இலக்கியங்களையும் நீண்ட நேரம் எடுத்துரைக்கக் கூடியவர்களில் ஒருவராகப் புலவர் கீரன் விளங்குகிறார்.

     புலவர் குழந்தை எழுதிய இராவண காவியத்துப் பற்றிய சிறப்புக் கூறுகளைப் பல நாட்கள் தொடர்ந்து உரையாற்றித் தமிழ் கற்றோர் நெஞ்சங்களில் நண்பர் சிலம்பொலி செல்லப்பன் இனிப்பு பெருக்கெடுக்கச் செய்தார்.

     சிலப்பதிகாரத்தைப் பல நாட்கள் மன்றத்தினர் களித்திடுமளவுக்கு விமர்சித்து வெற்றி கண்டார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

     கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களில் ஒருவராக விளங்கிய அண்ண்ன் ஜீவானந்தம்; எரிமலை போன்ற அரசியல் பேச்சாளர் என்பது மட்டுமல்ல- கம்பனின் கவிநயம் பற்றிச்சில மணிநேரம் சுவைப்படச் சொற்பெருக்காற்றக்கூடியவராகவும் இருந்தார்.

     கம்பராமாயணம் பற்றி எழுந்த சர்ச்சையில் பெரும் புலவர்களான நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும்-சேதுப்பிள்ளையுடனும் சொற்போர் நிகழ்த்தியபோது அறிஞர் அண்ணா அவர்களின் இலக்கியப் புலமை எப்படி ஒளிவிட்டது என்பதை நாடறியும்.

     அரசியல் பேச்சாளர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. ஆனால், அவர்களில் இலக்கியமுணர்ந்தோர் எண்ணிக்கை, மகிழ்ச்சியூட்டுவதாக இல்லை. வரலாறுகளையாவது ஆழமாகப் படித்திருக்கிறார்களா? அந்தத் தொகையினரும் குறைவே! பல பேச்சாளர்கள் மாற்றுக் கட்சியினரைத் தரக் குறைவாகத் திட்டிப் பேசவே மட்டும் தங்களைப் பாழாக்கிக் கொண்டு மேடையேறிவிடுகின்றனர்.

     கடுமையாக-காரசாரமாகப் பேசுவது என்பது வேறு! தரக்குறைவாக-ஆபாசமாக-அருவருக்கத்தக்க முறையில் பேசுவது என்பது வேறு!

     கடுமையான சொற்களைப் பயன்படுத்த வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை ஒரு பேச்சாளருக்கு ஏற்படக்கூடும். மாற்றுக்கட்சி மேடையில் பேசிய ஒருவர் ஏதாவது அவதூறு ஒன்றைப் பரப்பிவிட்டு அதை நிருபிக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல்; அப்படிப் பிறர் மீது வேண்டுமென்ற திட்டமிட்டுப் புழுதிவாரித் தூற்றுவதையே தனது தொழிலாக் கொண்டிருக்கக்கூடும். அதனால் பாதிக்கப்படக்கூடிய ஒரு பேச்சாளர் அல்லது அந்தப் பேச்சாளர் சார்ந்துள்ள அரசியல் கட்சி மேடையில் அதற்குப் பதில் அளிக்கும்போது கடுமையான கண்டனம் தவிர்க்க முடியாததாகிவிடக்கூடும்.

     ஒருமணி நேரப் பேச்சில் அப்படிக் கடுஞ்சொல் கூறிக் கண்டிப்பது ஓரிரு வினாடிகளே இருக்கவேண்டுமே தவிர, முழுப் பேச்சும் கடுஞ்சொற்களின் கோர்வை ஆகிவிடுமேயானால் ஒருக்கணம் மின்வெட்டுப்போலப் பளிச்சிட்டுத்ததெறித்த அந்தக் கடுஞ்சொல்லுக்குரிய மதிப்பு இல்லாமல் போய்விடக்கூடும்.    

     அரசியல் மேடைகளில் கடுஞ்சொற்கள் இருதரப்பிலிருந்தும் கனணகளாகக் கிளம்பலாம். அதற்காகப்பேச்சு முழுமையுமே கடுஞ்சொற் களஞ்சியமாகவும்-ஆபாசக் குட்டையாகவும் அமைந்திடுமேயானால்; விரைவில் அந்தப் பேச்சாளர்களும் இருக்குமிடந் தெரியாமல் போய்விடுவர்; அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளும் சிறப்பு குன்றிச் செயலிழந்து நின்றுவிடும்.

    மேடையில் மக்களின் பிரச்சனைகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி எடுத்து வைக்க வேண்டும். அவ்வப்போது எழுகின்ற விவாதத்திற்குரிய விஷயங்களை அவரவர் கட்சிக் கண்ணோட்டத்திற்கேற்ப மக்களிடம் விளக்கிட வேண்டும். பல்வேறு அரசியல் கட்சிக்கொள்கைகளுக்கும் தனது கட்சிக் கொள்கைகளுக்குமுள்ள வேறுபாடுகள் பற்றியும், உடன்பாடுகள் பற்றியும் வாதங்களை அடுக்கிடவேண்டும். நாட்டில் பற்றி எரிகிற ஒரு முக்கியமான பிரச்சனையை தனது கட்சி எவ்வாறு அணுகுகிறது என்பதைத் தெளிவாக மக்களிடம் கூறவேண்டும்.

     இவ்வளவையும் விட்டுவிட்டு, மேடையில் ஏறியதும் தனது கட்சித் தலைவனுக்கு ஒரு பகுதி நேரம் பாராட்டு-மறுபகுதி நேரம் மாற்றுக் கட்சித் தலைவர்களுக்கு ஆபாச அர்ச்சனை-என்ற நிலையில் பேச்சாளர் தனது சொற்பொழிவை அமைத்துக்கொண்டால்; கூட்டத்தில் மேடைக்கருகே இருக்கிற தனது கட்சிக்காரர்களின் கைத்தட்டலை மட்டுமே பெறமுடியும். பொதுவான மக்களின் பாராட்டு அந்தப பேச்சுக்குக் கிடைக்காது.

    'வசவு' ஒன்றையே தனது பேச்சுப் பாணியாக ஆக்கிக் கொண்டவர்களில் பல பேர், அடிக்கடி அரசியல் கட்சிகள் பலவற்றுக்குத் தாவுகிறவர்களாகவும் இருந்திடக் காண்கிறோம். கொள்கை, இலட்சியம். எந்த அடிப்படையும் இல்லாத சந்தர்ப்பவாதிகள் அவர்கள்! பேச்சால் மட்டுமே பிழைப்பு நட்த்துகிறவர்கள். அவர்கள் கட்சி மேடையானாலும்-அல்லது எந்தப் பொது நிகழ்ச்சியானாலும்-சுற்றுச் சூழல் பற்றிக் கவலை கொள்ளாமல், தரக்குறைவான, ஆபாசமான, மிகத் தீவிரவாதிகளைப் போலக் கடுமையான வார்த்தைகளை வாரியிறைப்பர்.

     சில நாட்கள் கழித்துப் பார்த்தால், அதே பேச்சாளர் வேறு மேடையில்-வேறு கட்சியில்! அதன்பிறகு சில வாரங்கள் சென்றுபார்த்தால், அதே பேச்சாளர், இன்னொரு கட்சியில்-இன்னொரு மேடையில்! இப்படியே அவர்கள் பல கட்சிகளுக்குப் பாய்ந்து மக்களின் மதிப்பீட்டில் மிகக் கேவலமாகத் தேய்ந்து போய்விடுகிறார்கள்.

     நடைமுறைகள்-கொள்கை மாறுபாடுகள்-இவை காரணமாகக் கட்சி மாற்றங்கள் ஏற்படுவதற்கும்; எங்கே சென்றால் வசதியும் பிழைப்பும் தொய்வின்றிக் கிடைக்கும் என்று திட்டமிட்டுச் செயல்படுவதற்குமுள்ள வேறுபாட்டை உணர்ந்துள்ள மக்கள்; அத்தகைய பேச்சாளர்களுக்கு அல்லது எழுத்தாளர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைத்தான் தருகிறார்கள்.

     நல்ல கெட்டியான அடித்தளத்தில் கட்டப்படும் மாளிகையைப் போலவே, அழுத்தமான குறிக்கோளுடன் பேச்சாளர்களும் தங்கள் பொதுவாழ்கையை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.


     எந்த ஒரு அரசியல் கட்சியின் பேச்சாளராக இருந்தாலும்-அவர் தனது பேச்சின் வாயிலாகத் தனது கட்சிக்கு வலிவு தேட முனைவது போலவே  தனது செயல்முறைகள் வாயிலாகவும் வலிவு தேடவேண்டும்.

     நான் பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி! திருவாரூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் உருக்கமும் உணர்ச்சியும் பொங்கிட ஒரு பெரியவர் முழங்கினர். மக்கள் எழுச்சியுடன் அவர் பேச்சைக் கேட்டனர். மறுநாள் அதிகாலையில் நான் நண்பர்களுடன் திருவாரூர் ஓடம் போக்கி ஆற்று மணலில் நடந்து சென்று கொண்டிருந்தேன். எதிரே மணலில் ஒரு மனித உருவம் ஆடை குலைந்த நிலையில் படுத்திருந்தது. அருகே சென்று பார்த்தோம். முதல் நாள் இரவு முழங்கிய அதே மனிதர் தான். நன்றாக குடித்துவிட்டு ஆற்று மணலில் உருண்டு கிடக்கிறார். அந்தக் காட்சியைப் பார்க்கிறவர்கள் அவரை மட்டுமல்ல; அவர் எந்தக் கட்சிக்காகப்பேச வந்தாரோ-அந்தக் கட்சியையும் கடுகளாவாவது மதிர்ப்பார்களா?

- கலைஞர் மு. கருணாநிதி


....இன்னும் வரும்...15

   

No comments: