சென்னை நகரமே ஒரு குற்றத்தின் மூலம் தான் நிர்மாணிக்கப்பட்டது என்று சென்னையை பற்றி ஆராய்ந்து, "" மதராஸ் பட்டிணம்"" என்ற வரலாற்று நூல் எழுதிய திரு நரசய்யா குறிப்பிடுகின்றார்.கி.பி 1639 ஆம் ஆண்டு வாக்கில் வணிகம் புரிய இங்கு வந்த ஆங்கிலேயர்கள் முதலில் எந்த ஆளுமைகளும் இங்குள்ள மக்களிடம் புரியவில்லை. வணிகம் மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்தது. அவர்களை ஆளுமை புரியும் (ஆட்சி புரியும்) தன்மைக்கு மாற்றியவர்கள்  இங்குள்ளவர்கள் தான் என்று இந்த ஆய்வாளர் கூறுகின்றார்.
அன்றைய காலகட்டத்தில் சென்னையை ஆண்டு வந்தவர் தாமர்ல வெங்கடாத்திரி நாயக்கர் என்ற மன்னர். இவரின் ஆளுமையின் கீழ் தான் சென்னை இருந்து வந்தது. அதன் தலைமையிடம் பூவிருந்தவல்லி.(பூந்தமல்லி) அவரிடம் அனுமதி பெற்றே இங்கு ஆங்கிலேயர் வணிகத்தை துவங்கினர் . 
அப்பொழுது ஒரு நாள் கூவம் ஆற்றில் ஒரு பெண்ணின் பிணம் மிதந்து கொண்டு வந்தது. அந்த பெண்ணின் பிணத்தை கொண்டு வருதற்காக உள்ளுர் மக்களில் இருவரை கூலிக்கு அமர்த்தி அழைத்தனர்.
இருவரும் அந்த பிணத்தை கொண்டு வந்தவுடன், அதை எரிக்கவேண்டுமா? புதைக்க வேண்டுமா? என்ற கேள்வியை தொடுத்து விட்டு  ஆங்கிலேயரின் பதிலை எதிர் நோக்கியிருந்தனர், அந்த இரண்டு கூலியாட்களும். ஆனால் எதையும் ஆராயமால் முடிவெடுக்கும் எண்ணம் இல்லாதவர்களாக ஆங்கிலேயர் எப்போதும் இருந்து வந்ததினால். அந்த இருக் கூலியாட்களிடமே அந்தப் பெண்ணின் இறப்பை பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர். ஆனால் அந்த கூலியாட்கள் இருவரும் கூலி வாங்குவதிலேயே குறியாக இருந்தனர்.  மேற்கொண்டு ஒத்துழைக்கவும் மறுத்தனர். அவர்களை ""இன்னும் கூலி அதிகம் தருவதாக""  சமாதானப்படுத்தி மேற்கொண்டு விசாரித்தனர்.
அதில் ஒருவன் அது ஒரு தற்கொலை என்றும் தனக்கு அந்த பெண்ணைத் தெரியும் என்று கூறினான். ஆனால் அந்த பிணத்தில் கொலை செய்ததற்கான அறிகுறிகள் தோன்றியதால் மேலும் ஆங்கிலேயர் சந்தேகத்துடன் விசாரித்தனர்.
அதற்கு இரண்டாவதாக உள்ளவன் இது ஒரு கொலைதான் அந்தப் பெண் இவன் வீட்டில் இருந்தவள் தான். அந்தப் பெண் அணிந்திருந்த பித்தளை ஆபரணத்திற்காக இவன் தான் கொலை செய்தான் என்று கூறினான். (அக்காலத்தில் பித்தளை ஆபரணமும் விலையுயர்ந்தது தான்).
மேலும் அவன் சொன்ன இடத்தில் ஆராய்ந்த பொழுது அந்த ஆபரணங்களை அவன் மறைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த நபர்தான் கொலையாளி என்பதை உறுதிப்படுத்தினர்.
ஆனால் இதை முறையாக அன்றைய மன்னர் தாமர்ல வெங்கடாத்திரி நாயக்க மன்னரிடம் தெரிவித்து ""என்ன? நடவடிக்கை எடுக்க வேண்டும்? "" என்று கோரினார்கள் ஆங்கிலேயர்கள். ஆனால் மன்னர் ""உங்கள்! விருப்பம் போல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்! "" என்று எப்போதும் பொறுப்பை தட்டிக் கழிக்கும் மனத்துடன் ஆங்கிலேயரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டார். அவர்களும் உடனே நடவடிக்கை எடுத்துவிடவில்லை.
உடனே சூரத்தில் இருக்கும் அவர்களின் (ஆங்கிலேயர்) தலைமையகத்துக்கு அதாவது ஆங்கிலேய ஆளுநருக்கு தகவல் கொடுத்தனர். ஆளுநர் அந்த நபரை தூக்கிலிட உத்தரவிட்டார். அதன்படியே முதன் முதலில் இங்கு தூக்குத் தண்டணை நிறைவேற்றப்பட்டது. முதன் முதல் புலன் விசாரணையும் அன்றிலிருந்து தான் மேற்கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து சட்டம் அவர்கள் கைகளுக்கு, அதாவது ஆங்கிலேயர் கைகளுக்குப் போய்விட்டது. இதுதான் சென்னையில் நிறைவேற்றப்பட்ட முதல் தூக்குத்தண்டணை.
-நன்றி விஜய் தொலைக்காட்சி, (நூல் ஆதாரம் மதராஸ் பட்டிணம், திர நரசய்யா) 
Tweet

 
 




 
 Posts
Posts
 
 


No comments:
Post a Comment