Pages

Wednesday 6 January, 2010

பேசும் கலை வளர்ப்போம்- 4







 பேசும் கலை வளர்ப்போம் -4



நெஞ்சம், சொற்பஞ்சமுடையதாயிருந்தால்
மேடைப்பேச்சால் மக்களைக் கவர்ந்திட இயலாது.
சிலருக்கு மனத்தில் நல்ல கருத்துக்கள் தோன்றும்.
அவற்றை வெளிப்படுத்த உரிய சொற்கள் இல்லாமல்
தவித்திடுவர். வேறு சிலருக்குச் சிறந்த கருத்துக்களும்
அவற்றை வெளிப்படுத்தக்கூடய சொற்களும் கூட
உள்ளத்தில் நீறைந்திருக்கும். ஆனால் அப்படிக்
கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தக் கூடிய
பேச்சுவன்மை அவர்களுக்கு வாய்க்காமல்
போய்விடக்கூடும்.


பல மொழிகளில் ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்ற
முதுபெறும் புலவர்கள் பலர் எதிரே அமர்ந்திருக்கும்
அவையோரை ஈர்த்திடும் வண்ணம் விரிவுரையாற்ற முடியாமல் தோல்வியுற்றிருக்கின்றனர். சொற்பொழிவுக்குத்
தக்கவாறு குரலின் ஏற்ற இறக்கம், எத்தகைய
சொற்களைப் பயன்படுத்த வேண்டுமென்று ஏற்படுத்திக்
கொள்கிற பழக்கம் இவையெல்லாம் ஒரு பேச்சாளர்.
ஆரம்ப காலத்தில் திட்டமிட்டுச் செயல்படுத்தினாலும்
கூட, போகப் பேச்சு அந்தப் பழக்கம் நாளாகவே
ஏற்பட்டுவிடும்.


ஒரு ஆரம்பப் பேச்சாளன் தோல்வி அடைகிற
இடம், அவன் நீண்ட நேரம் பேசவேண்டுமென்று
எண்ணுகிற மேடைதான்! அடடே! இன்னும்
கொஞ்சம் பேசியிருக்கக்கூடாதா? என்று
அவையோர் அல்லது பொது மக்கள் நினைக்கிற
அளவுக்கு ஆரம்பப் பேச்சாளன்
நடந்து கொள்ளவேண்டும்.


ஐந்து நிமிடம் அழகாகப் பேசத் தெரிந்தவுடனேயே
ஐம்பதாயிரம் பேர் கூடியிருக்கிற மாநாட்டில் பேச
வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக் கொள்ளக்
கூடாது. அத்தகைய மாநாடுகளில் தலைவர்களும்,
அந்தக் கட்சிகளின் முன்னணியினரும் என்ன
பேசுகிறார்கள், எப்படி மக்களைக் கவருகிறார்கள்
என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.


எத்தனை மணி நேரம் ஒரு சொற்பொழிவாளர்
பேசினார் என்பதைவிட, என்ன பேசினார்
என்பது தான் முக்கியம்.


இளம பேச்சாளனாக இருந்த நான் ஒருமுறை 
குடந்தையில் ஒரு கூட்டத்தில் பேசினேன். 
குடந்தைப் பெரியவர் கே.கே. நீலமேகம் 
தலைமூயில் அந்தக் கூட்டம் நடந்ததாக 
நினைவு. அறிஞர் அண்ணா அவர்கள் 
சொற்பொழிவாற்ற வந்திருந்தார். 
என்னையும் பேசுமாறு கூறினாரகள். 
மிகக் குறைந்த நேரமே பேசி மக்களின்
கைதட்டலையும் உற்சாக 
ஆரவாரத்தையும் பெற்றேன்.


""காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சின்ன
அண்ணாமலை ஒரு கூட்டத்தில் பேசினாராம்! 
அவர் மலையாம்! அண்ணா அவர்கள் துறையாம்! 
மலையில் மழை பெய்தால் தான் துறைக்கு வருமாம்! 
அதனால் அண்ணாதுரையை விட அண்ணாமலையே மேல்! 
இப்படிப் பேசிய அண்ணாமலைக்குச் சொல்லிக்
கொள்வேன். அந்த மலையில் பொழியவேண்டிய
மழைக்குத் தேவையான மேகம் இதோ 
எங்களிடம் இருக்கிறது! 
அதுதான் கே. கே. நீலமேகம்!""


இப்படி நான் கூறியதும் கையொலி!
மகிழ்ச்சியொலி! அத்துடன் பேச்சை 
நிறுத்திக்கொண்டு ""சபாஷ்"" 
பெற்று விட்டேன்.


கூட்டங்களில் பாராட்டியும் கைதட்டுவதுண்டு!
பேச்சை முடித்துக் கொள்ளச் சொல்லியும் 
கைதட்டுவதுண்டு! நான் குறிப்பிட்ட கே. கே. நீலமேகம் 
அவர்கள் குடந்தையில் நடைபெற்ற ஒரு 
மாநாட்டில் வரவேற்புரை ஆற்றிய நிகழ்ச்சியை 
இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


நல்ல உடற்கட்டும், நிமிர்ந்த நோக்கும், 
கொள்கை உறுதியும் கொண்ட பெரியவர் நீலமேகம், 
தமது வரவேற்புரையை எழுதியே படித்தார். 
எழுதிப்படிக்கும் நீண்ட உரைகளை மக்கள் 
ஆர்வத்துடன் கேட்பதில்லை. அடுக்கி 
வைத்திருந்த தாள்களில் 25-ம் பக்கத்திற்குப்
பிறகு 26-ஆம் பக்கம் விட்டுப்போய் 27-ஆம் 
பக்கத்தைப் படித்தார். பேச்சின் தொடர்பு 
அறுந்துபோயிற்று. மாநாட்டுப் பந்தலில் 
கேலிச் சிரிப்பும் கைதட்டலும் எழுந்தது.
கே. கே. என். அவர்களுக்குக்
கடுங்கோபம் வந்துவிட்டது!


""யார் கேட்டாலும் சரி! கேட்காவிட்டாலும் சரி! 
ஒரு ஆள் மட்டும் இந்தப் பந்தலில் மிச்சமிருக்கும்
வரையில் நான் எனது உரையைப் 
படித்துதான் தீருவேன்.""


இப்படி அவர் கர்ச்சனை செய்தபிறகு பந்தலில் 
அமைதி ஏற்பட்டது. எழுதிப் படிக்கிற 
உரைகளானாலும் அவற்றை ஒரு 
முறைக்கு இருமுறை கவனமாகப் படித்து, 
பக்க எண்களைச் சரியாகக் குறித்து ஒழுங்காக 
அடுக்கி வைத்துக் கொண்டு மக்களைக் 
கவரும் வகையில் குரலை உயர்த்திப்
பேசவேண்டும் என்பதற்கு எடுத்துக் 
காட்டாகவே இந்த நிகழ்ச்சியை
நினைவுபடுத்தினேன்.


நாடக உலகத்திலும் திரையுலகிலும் ஒரளவு
புகழ்பெற்ற நடிகர் ஒருவர் என்னுடன் பல 
ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் 
பேச ஆரணிக்கு வந்திருந்தார். அவர் பேசுவார் 
என்று அறிவித்ததும் நல்ல வரவேற்பு இருந்தது.
தொடக்கத்தில் கடல்மடை திறந்தாற்போல் 
வார்த்தைகளைக்கொட்டினார். அவருடைய 
நினைவு எங்கேயோ இருந்திருக்கிறது! மக்கள்
முன் எடுத்து வைத்த கருத்துக்களோடு அவர்
ஒன்றிருக்கவில்லை. பேசிக்கொண்டேயிருந்தவர், 
திடீரெனத் திகைத்து நின்றுவிட்டார். ஒரு 
நிமிடத்திற்கு மேல் அப்படியே நின்றார். 
பேசிக்கொண்டேயிருந்த பொருள் பற்றிய
தொடர்பை அப்படியே விட்டு விட்டு அவர், 
இத்துடன் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்
எனக் கூறி அமர்ந்து விட்டார்.


இதிலிருந்து புரிவதென்ன? ஒரு பேச்சாளன் 
மக்களுக்குச் சொல்ல முயன்ற கருத்துக்களுடன் 
தானும் இரண்டற கலந்திருந்தால் தான் தங்கு
தடையின்றிப் பேச முடியும்! எங்கேயோ 
மனத்தை உலவிட விட்டு விட்டு, அரங்கின் 
முன்னே உதடுகளை அசைத்துக் கொண்டிருந்தால் 
உணர்வு  பூர்வமான பேச்சாக அமையாது!


சொற்பொழிவைக் கேட்பத்ற்கு மக்கள் சங்கீதம்
கேட்கவருவது போல் வந்த காலத்தை உருவாக்கிய
பெருமை அண்ணா அவர்களுக்கு உண்டு!


முப்பது ஆண்டுகளுக்கு மேலாகிறது. சென்னை 
சேத்துப்பட்டுப் பகுதியில் அண்ணா பேசுகிறார் 
என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. நான்,
கவிஞர்  கண்ணதாசன், அரங்கண்ணல்,
முல்லை சக்தி ஆகியோர் ஒரு காரில் அந்த
இடம் நோக்கிப் புறப்பட்டோம், இரவு எட்டு 
மணியிருக்கும் கூட்டம் நடைபெறும் இடம் 
சரியாகத் தெரியவில்லை. ஒரு வெற்றிலை 
பாக்குக் கடையோரமாகக்  காரை 
நிறுத்திவிட்டு ""அய்யா"" இங்கே கூட்டம் 
எங்கே நடக்கிறது?"" என்று விசாரித்தோம்!
கடை வாசலில்  வாழைப்பழம் உரித்துத் 
தின்று கொண்டிருந்த ஒருவர் எங்களைப்
பார்த்து, ""அதுவா! அண்ணாத்துரை கச்சேரிதானே? 
இப்படி இடதுபக்கமாகத் திரும்பிப் போங்க!"" 
என்று பதில் அளித்து வழிகாட்டினார்.


சொற்பொழிவை ஒரு இசைக்கச்சேரியாகவே 
கருதிக் கொண்டனர். 1953-ல் நான் கல்லக்குடி 
போராட்டத்தில் ஈடுபட்டு திருச்சி சிறையில் 
இருந்தபோது, அங்கிருந்த ஒரு சாதாரணக்கைதி
என்னைப் பார்த்து கை கூப்பி,"" நமஸ்காரங்க!"" என்று 
சொன்னார். ""என்னைத் தெரியுமா?"" என்று 
அவரைக்கேட்டேன். ""ஓ! நல்லாத் தெரியுமே! 
மூணு மாசத்துக்கு முன்பு கச்சேரிக்கு வந்திருக்கீங்களே""
என்றார். அந்தக் கைதி கூட்டங்களையே கச்சேரி 
என்று நினைத்து கொண்டருந்த அந்த 
நிலையைக் கடந்து எவ்வளவு தூரம் தமிழ் நாடு
முன்னேறியிருக்கிறது என்பதை எண்ணிப் 
பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறதல்லாவா?
இவ்விதம் முன்னேறியுள்ள பேசும் கலையில்
வல்லவர்களாகத்திகழ, பெரும் உழைப்பைத் 
தரவேண்டும் என்பதைப் பேச்சாளர்களாக 
விரும்புவோர் புரிந்து கொள்ள வேண்டும்.


    '' அக்ராசனாதிபதி அவர்களே!'' என்று விளித்தது
மாறி-''அவைத்தலைவர் அவர்களே!'' என்று
தமிழில் ஒலிக்கிற காலம் இது!  ''ஸ்ரீமான் அவர்கள்!'' 
என்பது ''திருவாளர் அவர்கள்'' என்று 
மாறியிருக்கிற காலம் இது! இந்த மாற்றங்கள்
ஏற்படுவதற்கு எழுத்தாளர்கள் மட்டுமல்ல; 
தமிழ்ப்பற்றுக்கொண்ட சொற்பொழிவாளர்களும் 
காரணமல்லவா? கூட்டங்களில் பேசிப்பேசி 
அந்தச் சொற்களை மக்களின் உள்ளத்தில் பதிய
வைத்துவிட்டதால் அல்லவா; அவை பழகிப் 
போய்விட்டன! தமிழ் நூல்களை நிறையப் 
படிப்பதன் மூலமும், நல்ல தமிழ் ஏடுகளைத்
தவறமல் படிப்பதன் மூலமும் ஒரு தமிழ்ப் 
பேச்சாளர், தங்கு தடையற்று தமிழ்ச்
சொற்களைப் பயன்படுத்தும் 
ஆற்றலைப்பெற முடியும். 


    நுனிப்புல் மேய்பவர்களாகப் பேச்சாளர்கள் 
இருந்தால், ஒவ்வொரு கூட்டத்திலும் அரைத்த
மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள். 
அன்றாடம் ஏடுகளில் வருகிற புதிய 
செய்திகளைக்கூட அவர்கள் 
ஏறெடுத்துப் பார்ப்பதில்லை.


   சில பேச்சாளர்கள் ஒரு பேச்சைத் தயார் 
செய்து கொண்டு அதை வைத்துக் கொண்டே 
ஓராண்டு காலம், ஒரு சுற்று வந்துவிடுவார்கள்.
அதற்குப் பிறகு, மற்றொரு பேச்சைத் தயாரித்துக்
கொண்டு புறப்படுவார்கள். ஒரு இடத்தில் 
சொன்ன கருத்தையோ அல்லது கையாண்ட 
உவமையையோ மற்றொரு இடத்தில்  கூறுவது 
தவறல்ல! ஆனால், அவற்றைச் சொல்லும்
கோணத்தில் மாற்றங்கள் இருந்தால்தான் 
பேச்சு பொலிவு பெறும்! அதே வார்த்தைகள்- 
அதே வாசக அமைப்பு-பதிவு செய்யப்பட்ட
நாடா (டேப்) போலத் திரும்பத் திரும்ப
பயன்படுத்தப் பட்டால் இரண்டாவது அல்லது
மூன்றாவது முறையாக அவரது பேச்சைக்
கேட்பவர்கள் அலுத்துக் கொள்ள நேரிடும்.


-கலைஞர் மு. கருணாநிதி


இன்னும் வரும்----5

No comments: