Pages

Wednesday 27 January, 2010

பேசும் கலை வளர்ப்போம்- 16







  பேசும் கலை வளர்ப்போம் -16

எத்தனை நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டினாலும், எப்படியெல்லாம் பல பேச்சாளர்கள் புகழ்க் கொடி நாட்டியிருக்கிறார்கள் என்று எடுத்துரைத்தாலும்- பேச்சாளர்களாக வளருகிறவர்கள். அவரவர்களுக்கென ஒரு தனிப் பாணியை அமைத்துக் கொண்டே வளருகின்றனர்.

     அவரக்ளுடைய மேடைப் பேச்சின் வெற்றிக்கு ஓரளவு பயன்படும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இந்தக் கட்டுரை எழுதப்பட்டது!

     இந்தச் சிறிய தொடர் கட்டுரையை எழுதத் தொடங்கியவுடனேயே, ஆர்வமிகுதியால் அருமை நண்பர் கணியூர் பரூக் என்பார் பேச்சுக்கலை குறித்துப் பல்வேறு வெளிநாட்டு அறிஞர் பெருமக்கள் கூறியுள்ள கருத்துக்களைத் தொகுத்து எழுதி எனக்கு அனுப்பி வைத்தார்.

     அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

    ' நீங்கள் கூட்டத்தில் எதைப் பேசவேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதை அப்படியே எழுதி ஆஸ்திரேலியாவுக்கு உங்கள் சொந்தச் செலவில் தந்தி கொடுப்பதாகக் கருதிக் கொள்ளுங்கள். சொல் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் கொடுப்பதாக இருந்தால், அவசியமில்லாத சொற்களை நீக்கி விடுவீர்கள் இல்லையா? மீதியுள்ள அவசியமான சொற்களே நீங்கள் பேசத் தகுதி பெற்ற சொற்கள்.'--------------''ஸ்மீட்''


     'ஆழ்ந்த கருத்து வளம் இல்லாதவர்களே பேச்சை வீணாக வளர்த்திக்கொண்டே போவர்'-----------''மாண்டஸ்கியூ''


     'பேச்சுக் கலையில் நோக்கம் உண்மையை எடுத்துக் கூறுவது மட்டுமல்ல-மக்களை இணங்க வைப்பதும் முக்கிய நோக்கமாகும்'-----------''மெக்காலே''


     'மேடைப் பேச்சில் எதிரிகளை இழித்துக் கேவலமாகவும் தரக் குறைவகாவும் புகார் கூறிப் பேசாதே! சிறிய விஷயத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்காதே.'------------''டிஸ்ரேலி''


     'கோழிமுட்டையின் மீது சதா அடைகாத்துக் கொண்டிருப்பதுபோல, நீ பேச எடுத்துக் கொண்ட விஷயத்தைப்பற்றி சதா சிந்தித்துக்கொண்டேயிருந்தால், கோழியின் முட்டையிலிருந்து குஞ்சுகள் கிளம்புவதுபோல, புதிய கருத்துக்கள் துள்ளிவரும்.''----------------''பிரெளன்''


     மெருகோடும் கச்சிதமாகவும் பேசவேண்டுமென்று விரும்புகிறவர்கள், சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகளை அடிக்கடி கேட்கவேண்டும். நூல்களையும் உயர்ந்தோர் கருத்துக்களையும் நிறையப் படிக்க் வேண்டும். முடியாவிட்டால் மேடையில் பேசாதிருப்பது நலம்.'-----------''செஸ்டர்பீல்டு''


     'அருமையாகப் பேசும் சொலல் வல்லோன் உண்மையைப் பேசாவிட்டால் அவனைக் காட்டிலும் மோசமான மனிதன் இருக்க முடியாது'.-------''கார்லைல்''


     'புலியின் சீற்றத்தையும் புஜபலமிக்க வீரனின் சினத்தையும் தணிக்கக்கூடிய சிறப்பியல்பும் பேச்சுக் கலைக்கு இருக்கவேண்டும்.'------''ஷெல்லி''


     'உணர்ச்சி பாவமே சொற்சுவைக்கு ஆதாரம், எதுவும் தெரியாதவனின் கண்களைக் காட்டிலும், காதுகள் மிகவும் கூர்மையானவை!'------''ஷேக்ஸ்பியர்''


     நாவண்மையின் சிறப்பு குறித்து நண்பர் ஏ. சுவாமிநாதன் என்பவர் சில பொன்மொழிகளைத் தொகுத்து அனுப்பியுள்ளார். அவை வருமாறு;


     'நாவானது மூன்று அங்குல நீளமுடையது, எனினும் ஆறு அடி உயர மனிதனையும் கொல்லக் கூடியது'.-------ஜப்பானியப் பழமொழி


     'பெண்ணின் வாள், அவளுடைய நாவே, அதைத் துருப்பிடிக்கும்படி அவள் விடுவதில்லை.'----------சீனப் பழமொழி


     'உன் நாவைக் காப்பாற்று! உன் நண்பணைக் காப்பாற்றுவாய்'----இந்தியப் பொன்மொழி


     'மனிதன் தன் நாவினால் பிடிபடுகிறான்.'-----ருசியப் பொன்மொழி


     'நாவில் எலும்புகள் கிடையாது. ஆனால், அது எலும்புகளை நொறுக்குகிறது.'------------அல்பேனியப் பொன்மொழி


     அறிஞர் பெருமக்களின் கருத்துகள், பல்வேறு நாட்டுப் பொன்மொழிகள்- நாவன்மையின் பெருமையையும் அதனை எவ்வளவு முறையாகப் பயன்படுத்த வேண்டுமென்பதையும் வலியுறுத்தி கூறியிருக்கின்றன.


''''சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
கொல்லுஞ் செயல் இன்மை அறிந்து''''


வேறொரு சொல்லால் நமது சொல்லை வெல்ல முடியாது என்பதை அறிந்து- அப்படி ஆய்ந்து அறிந்து தேர்ந்த சொல்லைக் கொண்டுதான் நமது கருத்தை விரித்துரைக்க வேண்டுமென்று வள்ளுவர் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்.


அதனால்தான் ''''நாவலம் என்னும் நலனுடைமை'''' என்று போற்றுகிறார்; நாவன்மையெனப்படும் நலம் ஒருவகைச் சொல்லாகும் என்று புகழ்கிறார்.


- கலைஞர் மு. கருணாநிதி


.......இன்னும் வரும்....17



No comments: