Pages

Friday, 29 January, 2010

பேசும் கலை வளர்ப்போம்- 18


     பேசும் கலை வளர்ப்போம் -18

(Mannerism)  மேனரிசம் எனப்படும் தனிப் பாங்கு அல்லது தனிப்பாணி, பேச்சாளர்களையும் ஆக்ரமித்துக் கொள்வதுண்டு. பேசும்போது அவர்களையறியாமலேயே தனிப்பாங்கான அங்கச் செய்கைகள்-தவிர்க்கவொண்ணாத பழக்கவழக்கங்கள் தொடங்கி; பின்னர் அவைகளேஅந்தப் பேச்சாளர்களுக்குரிய தனித்த தன்மைகளாக ஆகிவிடுகின்றன.

     சிலர் மேடையில் நின்று ஆடாமல் அசையாமல் அருவிபோல் கருத்துக்களை உதிர்த்துக் கொண்டேயிருப்பார்கள்.

    அறிஞர் அண்ணா அவர்கள் பேசும்போது, வலப்புறமும் இடப்புறமுமாக உடலைத் திருப்புவார். கைகள் லேசாக உயரும், தாழும்! பொடிபோடும் வழக்கம் அவருக்கு உண்டு. சட்டையின் பக்கவாட்டுப் பையில் ஒருகை நுழைந்திருக்கும். அவரது பேச்சின் சுவையில் திளைத்த மக்கள் கையொலி செய்து ஆரவாரம் புரியும்போது, சட்டைப்பையிலுள்ள பொடி டப்பாவிலிருக்கும் பொடியை யாருக்கும் தெரியாமல் மூக்கில் திணித்துக் கொண்டு மேல்துண்டினால் ஏதோ வியர்வை துடைப்பது போலத் துடைத்துக் கொண்டே தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பார்.

     தந்தை பெரியார் அவர்கள், வயது முதிர்ந்த காலத்தில் உட்கார்ந்து கொண்டேதான் பேசுவார்! அவர் நின்று கொண்டு பேசிய காலத்தில் அவருடன் கூட்டங்களுக்குச் சென்றவர்களில் நானும் ஒருவன். சந்தன வண்ணம் அல்லது காப்பிகலர், சில நேரங்களில் வெண்மையும் மஞ்சளும் கலந்தது-இப்படிப்பட்ட சால்வையால் உடலைப் போர்த்தியிருப்பார். பேசும்போது அந்தச் சால்வையை இழுத்து இழுத்துப் போர்த்திக் கொள்வார்.

     நெடிய உருவமும் நிமிர்ந்த நோக்கும் கொண்ட தளபதி அழகிரிசாமி, போர்க்களத்தில் எதிரியின் மீது ஓங்கப்படும் வாளினைப் போலத் தன் கையை வீசி வீசிப் பேசுவதும், அதற்கேற்ப சொற்கள் விழுவதும் மக்களை உணர்ச்சியில் மிதக்க வைக்கும்.

     சற்றுப் பெருத்த மேனியும், பெரிய மீசையும், உரத்த குரலும் கொண்ட ஜீவா அவர்கள் பேசும்போது மேடை அதிரும். அங்க நெளிவுகளில் மிகுந்த வேகம் இருக்கும். உடலை அதிகமாக ஆட்டிக் கொண்டு பேசும்போதுதான் அவருக்கு வார்த்தைகள் தங்கு தடையின்றி வந்து விழும்.

    அடிக்கடி கழுத்தை ஒரு வெட்டு வெட்டிக்கொள்வதும், கொத்து மீசையை ஒதுக்கிவிட்டுக் கொள்வதும் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் பேச்சு சூடு பிடித்துவிட்டது என்பதைக் காட்டும் அடையாளங்களாகும்.

    அருள்பாலிப்பதைப் போல கையை மக்கள் பக்கம் அடிக்கடி காட்டிகொண்டே, வாதத்தை வரிசைப் படுத்தி அடுக்கிக் காட்டும் திறமையை ராஜாஜி பெற்றிருந்தார்.

     குதிகாலை உயர்த்தி, தோள்களைக் குலுக்கிக் கொண்டு கடல்மடைத் திறந்தாற்போல் பேசிக்கொண்டிருக்கும்போதே சில சொற்களைத் திடீரெனச் சன்னக்குரலில் இழுத்துப் பேசி மக்களின் வரவேற்பைப் பெறுவது நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் தனிப் பாணியாகும்.

     ஒலிபெருக்கியின் முன்னால் நின்றவுடன் தலையை நிமிர்த்தியவாறு-ஒருமுறைக் கூடத் தாழ்த்தாமல்- வானநோக்கிக் கைகளை உயர்த்தியவாறு சொல்மாரிபொழிவது பேராசிரியர் அன்பழகன் அவர்களிடம் காணக்கூடிய தனிப்பாங்கு எனலாம்.

     இப்படி ஒவ்வொருவருக்கும் இயற்கையாக ஏற்பட்டுவிட்ட செயற்கைப் பாணிகளை அவர்களே முயன்றாலும் விடமுடியாத நிலை!

    நாம் பேசும்போது ஏதாவது ஒரு அங்கச் செய்கை அல்லது அங்கசேட்டை இருக்கவேண்டுமென்று அப்படியொரு பயிற்சியை எடுத்துக்கொள்ளத் தேவையே இல்லை. சிலருக்கு அங்கச் சேட்டைகள், அவர்களது பேச்சையே மக்கள் கவனிக்காத அளவுக்கு இடையூறாக அமைந்து விடுவதும் உண்டு.

     ஒலிபெருக்கியின் முன்னால் நின்று தலையைச் சொரிந்துகொண்டே பேசுவார்கள். கழுத்திலோ, இடுப்பிலோ விரல்களை வைத்து அழுக்கைத் திரட்டிக் கொண்டே பேசுவார்கள். திரட்டிய அழுக்கை, உருண்டையாக உருட்டி மூக்கிலை முகர்ந்து பிறகு கீழே போடுவார்கள். இத்தனையும் பேசிக் கொண்டிருக்கும்போதே நடக்கும்.

     இதுபோன்ற பாணிகளையோ, அங்கச்செய்கைகளையோ பேச்சாளர்கள், மறந்தும் கற்றுக்கொண்டுவிடக்கூடாது.

    கூடுமானவரையில் மேடையில் அதிக ஆட்டமின்றி அங்கச் சேட்டைகளை மட்டுப்படுத்திக்கொண்டு பேசுவதே நலம்.

    வார்த்தைகளைக் குதப்புவது-- கடித்துத் துப்புவது--  இவை, கேட்போர் செவிகளில் நாராசமாக விழும்.

    'போராட்டக்காரர்களைப் போலீசார் அடித்து விரட்டினார்கள்' என்பதைச் சில பேச்சாளர்கள் அழுத்தம் திருத்தமாகவும், ஆத்திர உணர்வோடும் சொல்வதாக எண்ணிக் கொண்டு-''போராட்டக்காரர்களைப் போலீசார் அட்டித்து விரட்டினார்கள்'' என்று வார்த்தைகளைக் கடித்து உதறுவார்கள். அந்தப் பேச்சும் ரசிக்கத்தக்கதாக இருக்காது.

    வேற்றுமொழிச் சொற்களையும் வேதபுராணங்களையும் பயன்படுத்தி உபன்யாசங்கள் செய்து வந்த மடாதிபதிகளின் மத்தியிலே நல்ல தமிழிலும், நயம்பட இலக்கியங்களிலும் மேற்கோள் காட்டி- காலத்திற்கும் சமயத்திற்கும் ஏற்ப மேடைப் பேச்சில் திறமை காட்டியவர்களில் குன்றக்குடி அடிகளார் ஒருவர்.

    தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாட்டு விடுதலைப் போராட்டத்திற்கெனவும் இலக்கிய மறுமலர்ச்சிக்கெனவும் தமிழர் உரிமைக்கெனவும் சமய நெறிகளைப் பரப்பிடவும், மேடை முழக்கம் செய்தபோது சில முக்கியமான சொற்களை மூன்றுமுறை அழுத்தம் திருத்தமாகக் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

   தமிழர் நெறி பரப்பிடும் தொண்டிலும் இந்தி ஆதிக்க எதிர்ப்பிலும் ஈடுபட்ட மறைமலை அடிகளார், தனது சொற்பொழிவில் தனித்தமிழ்ச் சொற்களையே பயன்படுத்துவார்.

     அடலேறுத் தோற்றங்க்கொண்டவரும் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் அயராது ஈடுபட்டவருமான நாவலர் சோமசுந்தர பாரதியாரின் சொற்பொழிவில் அடிக்கடி ''அட சனியனே'' என்று கடிந்துகொள்ளும் வார்த்தை வந்து விழுந்து கொண்டேயிருக்கும்.

    எத்தனையோ-எண்ணற்ற கூட்டங்களில் சொற்பெருக்காற்றியிருந்தும்கூட இன்னமும் கையில் சிறு குறிப்புகளை வரிசைப்படுத்தி எழுதி வைத்துக்கொண்டு அவற்றின் துணையோடு -மக்களைக் கவருகின்ற பேச்சாளராக முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விளங்குகிறார்.

   பார்வைக்குப் பரமசாது போலத் தோற்றமளித்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், சீற்றங்கொண்டு பேசத் தொடங்கினால் சிம்ம கர்ச்சனையாகத்தானிருக்கும்.

     சிறுசிறு குட்டிக்கதைகளைச் சொல்லியே மக்களைச் சிரிக்க வைப்பார் சின்ன அண்ணாமலை.

     நல்ல எழுத்தாளராக இருந்து மறைந்த தமிழ்வாணனும் கூட்டத்தினரைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் திறமை படைத்தவர்.

     அடிக்கடி கூட்டங்களில் பேசுகிற பழக்கமில்லாவிட்டாலும் எழுத்தாளர் ஜெயகாந்தனைப் போன்ற சிலர், தங்கள் பேச்சில் ஏதாவது ஒரு புதிய விஷயத்தைச் சொல்லிக் குழுமியிருப்போரிடையே ஒரு கலகலப்பை ஏற்படுத்திவிடுவர். தேர்ந்தெடுத்த, தெளிந்த சொற்களைக் கொண்டு கருத்துக்களை வழ்ங்கிய காயிதே மில்லத் அவர்களும், அவருடன் நெருங்கியிருந்து பயின்று தேனினுமினிய உரையாற்றும் அபதுல் சமது அவர்களும் சொற்பொழிவு மேடையில் புகழ்மிக்க இடத்தைப் பெற்றவர்கள்.

     இப்படிப் பல துறையைச் சேர்ந்தவர்களும் எப்படிப் பேசினார்கள்-எப்படிப் பேசுகிறார்கள்-என்பதைப் பேச்சாளர்களாக ஒளிவிட வேண்டுமென்று விரும்புகிறவர்கள், உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.

- கலைஞர் மு. கருணாநிதி

......இன்னும் வரும்.....19

2 comments:

Sangkavi said...

உங்க கட்டுரைய படிச்சு படிச்சு நான் சீக்கிரம் பேச்சாளன் ஆகவேண்டும் என்ற எண்ணம் அதிரித்து உள்ளது...

நம்பி said...

தங்கள் வருகைக்கு நன்றி! விரைவிலேயே பேச்சாளராக வாழ்த்துக்கள்!