Pages

Thursday 21 January, 2010

பேசும் கலை வளர்ப்போம் -10

  


பேசும் கலை வளர்ப்போம் -10    

பேசும் பொருளில் கவனம் செலுத்துவதைப்போல- பேசும் பாணியில் கவனம் செலுத்துவதைப் போல, ஒரு பேச்சாளர் உச்சரிக்கும் சொற்களும் பிழையின்றி அமைய வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
     ''ல'', ''ள'', இரண்டும் இடையினம்தான் என்பதற்காக ''அவர்கள் என்ன சொன்னார்கள்?'' என்று ஆவேசமாகக் கேட்கும் கட்டத்தில் ''அவர்கல் என்ன சொன்னார்கல்?'' என்று எவ்வளவு ஆவேசமாகக் கேட்டாலும், அது மக்கள் மத்தியில் 'அபஸ்வரமாக' ஒலிக்கும். இப்படி ''லகர'' ''வகர'' த்தை இடம்மாற்றிப் போட்டுப் பேசுகின்ற சொற்பொழிவாளர்கள் பலர் இருக்கிறார்கள்.
     '' கன்னனைக் காணச் சென்ற குசேளன், கையில் அவள் கொண்டு சென்றான்.''
     ''ல'' கரத்தை ''ள''கராமாகவும்! ''ள'' கரத்தை ''ல''கரமாகவும் ''ன''கரத்தை ''ண''கரமாகவும் ''ண''கரத்தை ''ன'' கரமாகவும் மாற்றி உச்சரிக்கும் பெரும் பிழையினைத் திருத்திக் கொள்ளப் பேச்சாளர்கள் முன்வரவேண்டும். திக்குவாய் படைத்தவர்கள், தங்களின் அயராத முயற்சியால் நல்ல கருத்துக்களை ஒழுங்குபட எடுத்துச் சொல்லுகிற ஆற்றலைப் பெற்றிருப்பதைக்காண முடிகிறதல்லவா? அதனால் உச்சரிப்புப் பிழைகளைத் திருத்திக் கொள்கிற அளவுக்குப் பேச்சாளர்கள் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டால் வெற்றிகிட்டாமற் போகாது!
     ஒருசில பேச்சாளர்கள் தாங்கள் சொல்ல விரும்புகிற விஷயங்களை அழுத்தம் திருத்தமாகச் சொல்வதாக எண்ணிக் கொண்டு ஒரு  பெரும் தவறு செய்கிறார்கள்.
     'நமது மொழியைப் பற்றிச்சொல்ல வேண்டுமென்றுச் சொன்னால், நமது நாடி நரம்புகளில் எல்லாம் சூடும் சுவையும் ஏறுகிறது.''
     இதில் 'பற்றிச்' என்பதில் ''ச்'' என்ற எழுத்தைத் தேவைக்கு அதிகமாக அழுத்துவார்கள். ''சொல்ல வேண்டுமென்றுச் சொன்னால்'' என்று தேவையில்லாமல் ''ச்'' என்ற எழுத்தைப் பேசும்போது பயன்படுத்துவார்கள். ''நாடி நரம்பு'' என்பதை ''நாடி நறம்பு'' என்று பல்லைக் கடித்துக்கொண்டு உச்சரித்து ''நறம்புகளில்'' என்று அழுத்திக் கூறுவார்கள்.இவையனைத்தும் குறையுடைய சொற்பொழிவுகளேயாகும்.
     ஒரு வேடிக்கை நிகழ்ச்சியைக் குறிப்பிட்ட விரும்புகிறேன். 1957-ல் குளித்தலைத் தொகுதியில் வெற்றிபெற்று சட்டப்பேரவையில் அறிஞர் அண்ணா தலைமையில் ஒரு உறுப்பினராக அமர்ந்திருக்கிற காலம்! சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அவையின் மரபுக்குப் புறம்பான சொற்களைப் பயன்படுத்தினால், அதைச் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல மற்றொரு உறுப்பினர் ஒழுங்குப் பிரச்சனையெழுப்பி சுட்டிக்காட்டலாம். அது ஒழுங்கு பிரச்சனையா-அல்லவா என்பதைச் சபாநாயகர் தீர்மானித்து, மரபுக்கு மாறாகப்பேசிய உறுப்பினருக்கு அறிவுரை கூறுவார். அல்லது அந்தக் கருத்துக்களை சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட உத்தரவிடுவார்.
     1957-காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும்  கடும் மோதல் இருந்த காலம். காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தி.மு.கழகத்தைச் சட்டசபையில் மிக வேகமாகக் கண்டித்துப் பேசக்கூடியவர். எனக்கு அவர்மீது மிகுந்த கோபம் உண்டு. தனிப்பட்ட முறையிலே அல்ல! அவர் பேசுகிற முறையிலேதான்! ஒருநாள் அவரைச் சபையில் சிக்க வைக்கவேண்டுமென்று காத்துக் கொண்டேயிருந்தேன். அவர் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அவருக்கு இந்த லகர-ளகரப் பிரச்சனைதான்.
     ''தி.மு.கழகத்தை எடுத்துக் கொல்லுங்கள்! அவர்கள் பேசுவதை எடுத்துக்கொல்லுங்கள்! உதாரணத்திற்கு திருவல்லுவரை எடுத்துக் கொல்லுங்கள்!''
   இப்படிப் பேசிக்கொண்டேயிருந்தார்! நான் உடனே குறுக்கிட்டு, ''தலைவர் அவர்களே! ஒருபாய்ண்ட் ஆப் ஆர்டர்!'' என்றேன். அப்போது சபாநாயகர் டாக்டர் கிருஷ்ணாராவ்! தங்கமான மனிதர்! மழலைத் தமிழ் பேசக்கூடியவர்! ''என்ன பாய்ண்ட் ஆப் ஆர்டர்?'' என்றார்.
     பேசுகிற உறுப்பினர்..........கொல்லுங்கள்! கொல்லுங்கள்! என்று பலாத்காரமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறாரே! அது சரியா?''
     என்று கேட்டுவிட்டு உட்கார்ந்தேன். உடனே சபாநாயகர் கிருஷ்ணாராவ் அந்த உறுப்பினரைப் பார்த்து ''மிஸ்டர்..........அவர்களே! ....பலாத்காரமாகப் பேசாதீர்கள்'' என்று எச்சரிக்கை செய்தார்! என் எதிரே அமர்ந்திருந்த அமைச்சர்கள் உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். அந்த உறுப்பினருக்குத் தாங்கமுடியாத வெட்கம்! எனக்குப் பெரிய வெற்றி என்று எண்ணிக்கொண்டேன்.


   தமிழின் தனிச் சிறப்பு வாய்ந்த ''ழ''கரமும் சில பேச்சாளர்களின் வாயில் சிக்கிப் படாத பாடுபடுகிறது!
     தமிழையே ''தமிஷ்'' என்றுகூட உச்சரிக்கிறார்கள். ''வாழு! வாழவிடு'' என்று சொல்லக் கருதி; ''வாலை! வாலைவிடு! என்று  சொல்லுகிறார்கள்.


    சித்திரமும் கைப்பழக்கம்-செந்தமிழும் நாப்பழக்கம் என்பதற்கேற்ப முயற்சி எடுத்து, அத்தகைய தவறான உச்சரிப்புக்களை நீக்கிக்கொள்ள முடியும். பேச்சாளராகப் பெயர் எடுக்க விரும்புவோர் உச்சரிப்பில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

-கலைஞர் மு. கருணாநிதி


-இன்னும் வரும்-11

2 comments:

சீ.பிரபாகரன் said...

“பேசும் கலை வளர்ப்போம்” என்ற இந்த தொடர் பதிவு சிறப்பாக உள்ளது.

நான் கருணாநிதியின் தற்போதய கொள்கைளுக்கும் செயல்பாடுகளுக்கும் எதிரானவன் என்றாலும் பேச்சுக்கலை தொடர்பான அவருடைய கட்டுரை சிறப்பாக உள்ளது.

நம்பி said...

தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!