7 நாட்களுக்கு பின் ஏரியில் பிணம் மீட்பு
வக்கீல் சதீஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய சிறப்பு டாக்டர்கள் குழு
ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, ஜுன்.15-
சென்னை பிரபல வக்கீல் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் உடலை 3 டாக்டர்கள் கொண்ட சிறப்பு குழு உடனடியாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளவும், அதனை வீடியோவில் பதிவு செய்து, அதற்கான அறிக்கையை தாக்கல் செய்யவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனியைச் சேர்ந்த பிரபல வக்கீல் சங்கரசுப்பு ஐகோர்ட்டில் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
காணாமல் போனவர் வீடு திரும்பவில்லை
எனது மகன் ஆர்.சதீஷ்குமார் (வயது 24) சட்டப்படிப்பு முடித்துள்ளார். கடந்த 7-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் மகனை பல்வேறு இடங்களில் தேடினோம். அவனது செல்போனில் தொடர்புகொண்டோம். ரிங்டோன் போனது. யாரும் செல்போனை எடுக்கவில்லை.
8-ந் தேதி காலை திருமங்கலம் போலீசில் புகார் கொடுத்தேன். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு விசாரணை நடத்தினார். 9-ந் தேதி சைபர் கிரைம் மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தேன். பின்னர், எனது மகன் செல்போனில் பதிவாகியுள்ள போன் நம்பர்களின் பட்டியலை எடுக்க கோரி சைபர் கிரைம் பிரிவு துணை கமிஷனரிடம் மனு கொடுத்தேன்.
ஏரியில் பிணம் மீட்பு
இதையடுத்து எனது மகனின் செல்போனும், மோட்டார் சைக்கிளும் ஐ.சி.எப். வடக்கு காலனி ஏரி அருகே கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர். ஆனால், எனது மகனை பற்றிய தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. அதனால்தான் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தேன். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அந்த ஏரியில் சதீஷ்குமார் உடல் கிடக்கிறதா என்று தேடிப்பார்க்குமாறு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு உத்தரவிட்டார்.
நான் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தபோது, இரண்டு நாளில் சதீஷ்குமாரை கண்டுபிடித்துவிடுவோம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. 13-ந் தேதி மாலை ஐ.சி.எப். வடக்கு காலனி ஏரியில் சதீஷ்குமார் உடல் மிதப்பதாக கண்டுபிடித்தனர். உடனே அந்த இடத்திற்கு நானும், மனைவி, மகன், மகளும் போய் பார்த்தோம். எங்கள் மகன்தான் என்பதை அடையாளம் காட்டினேன்.
முகம் முழுவதும் சிதைப்பு
எனது மகன் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டு உள்ளது. வலதுகை சுண்டுவிரல் பெரிய காயம் இருக்கிறது. இடதுகையில் ரத்தம் உறைந்துள்ளது. கழுத்தின் பின்புறம் 3 இஞ்ச் ஆழத்துக்கு காயம் இருந்தது. உடலின் பின்புறத்தில் ஏராளமான காயங்கள் உள்ளன. இடதுகால் நகங்களை பிடுங்கி இருக்கிறார்கள் இதைப் பார்க்கும்போது எனது மகனை கடத்திச் சென்று சித்ரவதை செய்து கொலை செய்திருப்பது தெரியவருகிறது.
திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்திலும், ஆவடி முகாம் போலீஸ் நிலையத்திலும் அருண்குமார் என்பவரை சட்டவிரோதமாக அடைத்து சித்ரவதை செய்ததை நான் கோர்ட்டில் நிரூபித்தேன். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரியாஜ×தீன், கண்ணன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட அருண்குமாருக்கு நிவாரணத்தொகை ரூ.25 ஆயிரம் வழங்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
வக்கீல்களை மிரட்டும் வகையில்...
இதற்கிடையே, இரண்டு இன்ஸ்பெக்டர்களும் என்னை தொடர்பு கொண்டு இந்த வழக்கில் ஆஜராகக்கூடாது என்று மிரட்டினார்கள். அதற்கு நான் மறுத்துவிட்டேன். அதன்பிறகும் இதனால் பல தீய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டினர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாஜ×தீன் சொந்த வீடு ஐ.சி.எப். காலனி ஏரி பகுதியில்தான் உள்ளது. என்னை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீஸ் அதிகாரிகள், சமூக விரோதிகள் மற்றும் கூலிப்படையுடன் சேர்ந்து, எனது மகனை கடத்தி, சித்ரவதை செய்து படுகொலை செய்துவிட்டு ஏரியில் வீசியுள்ளனர். இந்த செயல் எனக்கு எதிராக மட்டும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. காவல்துறையினரின் அத்துமீறல், போலி என்கவுண்டர்கள் போன்றவற்றிற்கு எதிராக கோர்ட்டில் ஆஜராகும் அனைத்து வக்கீல்களையும் மிரட்டும் வகையில் உள்ளது.
சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்
எனவே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதித்துறையின் செயல்பாடு பாதிக்கும் நிலை உருவாகும். வக்கீல்கள் அச்சமின்றி தங்கள் தொழிலை செய்ய இயலாத நிலை ஏற்படும். ஆகவே, எனது மகன் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது நான் குறிப்பிடும் டாக்டரும் மருத்துவர்கள் குழுவில் இருக்க வேண்டும். பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
அரசு வக்கீல் உறுதி
ஐகோர்ட்டு நீதிபதிகள் சி.நாகப்பன், பி.ஆர்.சிவக்குமார் ஆகியோர் நேற்று இந்த வழக்கை விசாரித்தனர். மனுதாரருக்காக மூத்த வக்கீல் வெங்கட்ராமனும், வக்கீல்கள் சார்பில் தமிழ்நாடு வக்கீல்கள் சங்க தலைவர் பிரபாகரனும் ஆஜராகி வாதாடினர். மனுதாரர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்த அரசு வக்கீல், பிரேத பரிசோதனை எந்த வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் சரியான முறையில் நடைபெறும் என்று உறுதி அளித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
3 பேர் கொண்ட டாக்டர்கள் குழு
இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குள் செல்லாமல் இயற்கை நீதி, குற்றச்சாட்டுகளின் தன்மையை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்கிறோம். இரண்டு அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள தடய அறிவியல் துறை தலைவர்கள், தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள தடய அறிவியல் துறை தலைவர் ஆகியோர் கொண்ட சிறப்பு குழுவை அமைக்க வேண்டும்.
அந்த குழுவில், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் தடய அறிவியல் துறை இயக்குனர் டாக்டர் சாந்தகுமார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி தடய அறிவியல் துறை தலைவர் டாக்டர் முருகேசன், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி தடய அறிவியல் துறை தலைவர் டாக்டர் பி.சம்பத்குமார் ஆகியோர் இடம்பெற வேண்டும்.
வீடியோவில் பதிவு செய்ய உத்தரவு
இந்த குழு, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் பிரேத பரிசோதனையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை செய்து முடித்ததற்கான அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள டாக்டர்கள் இந்த வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கக்கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
....தினத்தந்தி 15.06.2011
*****************
பொது ஜனம்; பிரபல வக்கீலுக்கே இந்த மாதிரி பாதிப்பு என்றால் சாமான்யர்களை இந்த போலீஸ் போட்டுத் தள்ளுவதை பற்றி கவலைப்படாது போலிருக்கே!
பொது ஜனம்; இதுக்குள்ளேயே போலீஸ் தான்னு முடிவு பன்றியே!
பொது ஜனம்; உத்திரபிரதேசத்திலே காவல் நிலையத்தில சிறுமி செத்ததற்கு முதலமைச்சர் மாயாவதி சி.பிசிஐடி விசாரணையை உத்தரவிட்டிருக்குதே! வேணுன்னா சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடத்தயார்! என அறிவிச்சிருக்கே! இங்கே மட்டும் இந்த பொம்பளை அறிவிக்க மாட்டேங்குதே!
பொது ஜனம்; அங்கே! முதலமைச்சர் மக்களுக்கு பயப்படறாங்க! நீதிமன்றத்துக்கு பயப்படறவங்க! இதை அரசியலாக்காதீங்க! என்று பயப்படறாங்க! இங்க நீ என்னவேணுன்னா பண்ணிக்கோ? அதிமுக ஆளுங்களை பிடிச்சிகிட்டுப்போனா டி.,சிக்கே உதை விழும்!
பொது ஜனம்; ஆமாய்யா! தி நகர்ல டி.சி ஒருவர் மேலேயே புகார் பண்ணியிருக்காங்களேய்யா! அதுவும் அதிமுக மந்திரியே ஸ்டேஷனுக்கு, வந்திருக்காரே! எம்,எல்,ஏ டி.சியை அசிங்க அசிங்கதமா திட்டியிருக்குதே!
பொது ஜனம்; அவரு பேரு கூட திருநாவுக்கரசு தானே! அவரு கூட ஒரு ஒட்டல்லே போய் ஒட்டல் முதலாளிப் பையனை உதைச்சாரே! அவர் தானே!
பொது ஜனம்; ஆமாம்! டி.சி முதலாளிப்பையனை பப்ளிக்கா உதைச்சாரு! அதிமுக காரங்க போலீசை உதைக்கிறாங்க! இத்தனைக்கும் அதிமுக ஆளுங்க பப்ளிக்கா ரவுடித்தனம் பண்ணியதை தட்டிக் கேட்டதிற்காக! இந்த உதை!
பொது ஜனம்; "பிச்சை" மந்திரி சாவுக்கு மட்டும் தான் இந்த பொம்பளை உத்தரவிடுமா? அவர் உயிர் தான் உயிரா? சாமான்யர்கள் உயிர்கள் எல்லாம் மயிராக நினைச்சுக்கணுமா?
பொது ஜனம்; போஸ்ட மார்ட்டத்துக்கு கூட ஆள் வைச்சிருக்காரே! இது மாதிரியெல்லாம் சாமான்யர்கள் ஒவ்வொருவரும் வழக்குப் போட்டு கேக்க முடியுமாய்யா? அப்ப போஸ்ட மார்ட்டம் பன்ற டாக்டருங்க எல்லாம் காசை வாங்கிகிட்டு போலீசுக்கு ஆதரவாத்தான் ரிப்போர்ட் எழுதுவாங்களா? அப்ப எல்லா போஸ்மார்ட்டத்தையும் இனிமேல் வீடியோ கிராப் எடுக்கணும்!
பொது ஜனம்; ஆமாய்யா! காஞ்சிபரத்தில கூட அலுவலகத்துக்கு சம்பளம் வாங்கப் போன பொண்ணைக்கூட கறபழித்து கிணத்துல வீசிட்டு போய்ட்டாங்களாய்யா! பொம்பளைங்களுக்கு இந்த ஆட்சியிலே பாதுகாப்பே இல்லைய்யா! யாரும்! ஆறு மணிக்கு மேலே வெளியே வரக்கூடாது! போலீஸ் வேறே புகாரையே வாங்க மாட்டேங்குதுங்களே!
பொது ஜனம்; வேலியே பயிரை மேய ஆரம்பிச்சுடுச்சு! நாம தான் உஷாரா இருக்கணும்! பிடிக்கலைன்னா போட்டுத்தள்ளுர கும்பல்! இதுங்ககிட்டே போய் எப்படி புகார் கொடுக்க முடியும்! எல்லாம் அனுபவிச்சு தான் ஆகணும்!
No comments:
Post a Comment