Pages

Sunday, 31 January 2010

முதலிடத்துக்குப் போராடிய முதல் நடிக மன்னர்!








முதல் நடிக மன்னர்  (ஆக்ஷன் கிங்) பி.யூ. சின்னப்பாவை பற்றித்தான்.... இந்த பதிவு...


புதுக்கோட்டை உலகநாத சின்னப்பா என்ற முழுப்பெயர் கொண்டவரும் பி.யூ. சின்னப்பா என்று அனைவராலும், திரையுலகத்தினரும் இவரை அன்போடு அழைப்பார்கள். 1940 களில் கொடிகட்டி பறந்த கதாநாயகர்கள் இருவர். அதில் ஒருவர் எம்.கே.டி. இன்னொருவர் பி.யூ.சின்னப்பா. எம்.கே.டி தமது ரசிகர்களின் நெஞ்சில் முதலிடத்தில் இருந்தார் என்றால் பி.யூ. சின்னப்பா இரண்டாமிடத்தில் இருந்தார் என்றால் அது மிகையாகாது.

அக்காலத் திரைப்பட வசனங்களில் புரட்சி......

இத்தனைக்கும் தியாகராஜ பாகவதர் படத்திற்கு வசனம் எழுதிய இளங்கோவன் தான் சின்னப்பாவிற்கும் வசனம் எழுதினார். என்ன? வசன கர்த்தாவை இவ்வளவு முக்கியமாக கூறுகிறோம் என்றால். அன்றைய காலகட்டத்தில் இதையெல்லாம் மக்கள் அதிகம் பார்த்தனர். இளங்கோவன் ஒரு சுயமரியதைக்காரர் என்றாலும் திரையுலகில் அவருக்கு தனி செல்வாக்கு பெற்றவராகத்தான் விளங்கினார். கார் வைத்திருந்த வசனகர்த்தாவும் இவர்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவர் வருவதற்கு முன்பு வரை இவா ஊதினா! அவா வருவா!போன்ற சாதி சாயல் கொண்ட வசனங்கள் அதிகளவில் இடம்பிடித்திருந்தன.


அதற்கு முன் அன்றிருந்த கதநாயகர்கள் பட்டியலையும் வைத்துக்கொள்ளலாம், தவறில்லை..
முதல் இடம் எம்.கே.தியாகராஜ பாகவதர்
இரண்டாம் இடம் பி.யூ. சின்னப்பா
முன்றாம் இடம் எம.கே.ராதா (சந்திரலேகா புகழ்)
நான்காம் இடம் டி.ஆர்.மகாலிங்கம்


அன்றையக் காலகட்டத்தில் இவர்கள் இருவருக்கும் தான் அதிக போட்டி. எம்.கே.டி இவரைப்போல சண்டைக்காட்சிகளில் ஈடுபடவில்லை என்றாலும் பெண் ரசிகைகளின் மனதில் அதிகம் குடிகொண்டிருந்தவர் எம்,கே,டி. ஆனால் பி.யூ.சின்னப்பா பாடுவதில் மட்டுமின்றி, வாட்பயிற்சி, சிலம்பம், குத்துசண்டை, மல்யுத்தம், சுருள் பட்டா..... போன்ற அனைத்து உடற்பயிற்சி சம்பந்தமான கலைகளில் பயிற்சி பெற்றவராக இருந்ததினால், இவர் திரையுலகில் சகலகலா வல்லவராக வலம் வந்தார். ஆண் ரசிகர்களின் குறிப்பாக இளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். இருப்பினும் அவரால் எம்.கே.டி யை பின்னுக்கு தள்ளி கடைசிவரை முதலிடத்தை பெற முடியவில்லை. ஆனால் அதற்கான முயற்சியை மும்முரமாக மேற்கொண்டார் என்பது மட்டும் உண்மை. பி.யூ சின்னப்பாவின் நடிப்பு முறையைத்தான் பின்னாளில் கொடிகட்டி பறந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களும் பின்பற்றினார் திரையுலகில் நம்பப்படும் தகவல்.


அவரின் போராட்டத்தை பார்ப்பதற்கு முன் அவரின் பூர்வீகத்தை பார்ப்போம்!


சின்னப்பாவின் பூர்வீகம் புதுக்கோட்டை ஆகும். உலக நாதப்பிள்ளை, மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக சின்னப்பா வெள்ளிக்கிழமை அன்று பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பா பிறந்த தேதி 05.05.1916 ஆகும்.சின்னப்பாவின் தந்தை நாடக நடிகராக இருந்ததால் சின்னப்பா முயற்சி ஏதுவுமின்றியே 5-ம் வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார். கல்வியில் நாட்டமில்லாததால் நான்காம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய சின்னப்பா, பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார். சாரீரம் நன்றாக உள்ளவர்களுக்கே நாடக கம்பெனிகளில் மவுசு.

சிறுவர்களாக நாடக கம்பெனியில் சேர்ந்தவர்கள் இளைஞனாக மாறும்பொழுது மகரக்கட்டு எனப்படும் குரல் வளை ஒடியும் அப்பொழுது அந்த நாடக்கம்பெனியால் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள். வேலையிழப்பும், பெரும்பாலும் நிகழும். அதற்கு பின் வாயப்புக்காக வேறு கம்பெனிகளை தேடி அலைந்தாலும் வாய்ப்புக் கிடைக்காது. அது அந்தக்கால நாடக கம்பெனிகள் கையாண்ட தொழில் முறை யுக்திகள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்....இன்றைய  சினிமாவிலும் சில யுக்திகள் கையாளப்படுகின்றன, இதை அறியாமல் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை இழந்தவர்களை நாம் காணுவது போல அன்றும் இந்த நிலை இருந்தது...


இதை உணராமல் நடிப்பவர்களின் வாய்ப்பு காலப்போக்கில் குறையும் அவர்களிடைய செல்வாக்கு, ஊதியம் அனைத்தும் குறைய ஆரம்பிக்கும் இறுதியில் கம்பெனியை விட்டே ஒருநாள் துரத்தி அடித்துவிடுவார்கள். இதை முன்பே உணர்ந்தவர்கள் வேறு வேறு கம்பெனிக்குத் தாவி தங்களை நிலை நிறுத்திக் கொள்வார்கள். அப்படித்தான் பி.யூ. சின்னப்பாவும் தன்னை (நாடக கம்பெனித் தாவி) நிலை நிறுத்திக் கொண்டார். இல்லையேல் அவர் இந்தளவுக்கு புகழ்பெற்றிருக்க வாய்ப்பிருந்திருக்காது.


நாடக கம்பெனியில் (ஒரிஜினல் பாய்ஸ்) இருக்கும் பொழுதே முறையாக சங்கீதமும், குஸ்தி, வாட் போர், மல்யுத்தம் போன்றக் கலைகளை பயின்று கொண்டார். அன்றைய மைசூர் சமஸ்தானத்தில் பெயர் மாற்றிக்கொண்டு போட்டியிட்டதாகவும் வரலாறு உண்டு. மக்களிடையேயும் திடீரென தோன்றி பல போட்டிகளில் பங்கு பெற்று தன் திறமையை வெளிப்படுத்தினார்.

உடம்பு பூராவும் பிரம்பு வளையங்களை மாட்டிக் கொண்டு தீ பந்தங்கள் சொருகிய கம்புகளை கையில் ஏந்தி, சண்டை போடுவது ஒரு ஆபத்தான விளையாட்டல்லவா? இந்த விளையாட்டை சின்னப்பா புதுக்கோட்டையில் அன்றைய நீதிபதி ஸ்ரீ ரகுநாதய்யர் முன்னிலையில் செய்து காட்டி, சிறப்பு பரிசுகளை சின்னப்பா பெற்றிருக்கிறார்.

வெயிட் லிப்டிங் அதாவது கனமான குண்டுகளைத் தூக்குவது. இதிலும் சின்னப்பா பயிற்சி எடுத்துக் கொண்டார். இது சம்பந்தமான போட்டியில் 150 பவுண்டு வரையில் தூக்குபவர்களுக்கெல்லாமே ஒரு வெள்ளி மெடல் பரிசு வழங்கப்படுவது வழக்கமாம். சின்னப்பாவே 190 பவுண்டு வரையில் தூக்கி விசேஷப் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.

சினிமாவில் சேர்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன் சின்னப்பா புளியம்பட்டிக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும், பல ஊர்களில் எம்.ஆர். ஜானகியுடன் நிறைய நாடகங்களில் நடித்து விட்டு இந்தியா திரும்பினார்.


சந்திரகாந்தா நாடகத்தில் சின்னப்பா பிரபலமாக விளங்கி வந்ததை அறிந்த ஜூபிடர் பிக்சர்ஸார் சின்னப்பாவை தங்கள் தயாரித்த சந்திரகாந்தா படத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். சந்திரகாந்தா படத்தில் சுண்டூர் இளவரசனாகத் தோன்றிய சின்னப்பாவின் நடிப்பும், பாட்டும், சிறப்பாக அமைந்திருந்தன.

சந்திரகாந்தா படம் 1936ல் வெளிவந்தது (சவுக்கடி சந்திரகாந்தா) இப்படத்தில் அவரது பெயர் சின்னசாமி என்றே வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகே சின்னசாமி என்ற பெயர் சின்னப்பா வாக மாறியது. இதுவே அவரது முதல் படமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.. (இதற்கு முன்பும் நடித்திருப்பார்....தகவல்கள் சரிவர கிடைக்கவில்லை)

பிறகு சின்னப்பா பஞ்சாப் கேசரி, ராஜ மோகன், அனாதைப் பெண், யயாதி, மாத்ரு பூமி ஆகிய ஐந்து படங்களில் நடித்தார். இப்படங்கள் சுமாரான வெற்றியை பெற்றது. எனவே கொஞ்ச காலம் படங்களில் நடிக்காமலிருக்க வேண்டியதாயிற்று. முதலில் தொண்டை தகராறு செய்தது. பிறகு அவருக்கு படத்தில் நடிக்க சந்தர்ப்பம் கிடைக்காமற் போனது. இவையேல்லாம் அவரது மனதைக் கலக்கி விட்டன. இதன் விளைவாக அவர் கடுமையான வைராக்கிய விரதங்களைத் தொடங்கினாராம். சுமார் நாற்பது நாள் அவர் சரியான அன்ன ஆகாரமின்றி மௌன விரதத்தை கடைபிடித்து வந்தாராம். அதனால் அவர் உடம்பு மிகவும் இளைத்துப் போயிற்றாம். இருப்பினும் சின்ன சின்ன வாயப்புகளே அவரைத் தேடி வந்தன. தன்னுடைய முழுத்திறமையையும் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்று ஏங்கி புதுக்கோட்டைக்கே திரும்பி விட்டார். புதுக்கோட்டையில் துறவரம் பூணும் நிலைக்கும் சென்று விட்டார் சின்னப்பா. இதை உணர்ந்தவர் போல் உதவியவர் தான் மாடர்ன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம்.

தொழிலின்றி இருக்கும் நடிகர்களுக்கு துணிந்து சந்தர்ப்பம் அளிப்பதிலும், புதிது புதிதாய் நடிகர்களைப் படங்களில் புகுத்துவதிலும் சாதனை படைத்தவர் டி.ஆர்.சுந்தரம், ஆகவே வேலையின்றி இருந்து வந்த சின்னப்பாவைத் தேடிப்பிடித்து தம் உத்தமபுத்திரன் படத்தில் அவருக்கு கதாநாயகன் வேடத்தை அளித்தார்.

1940ல் வெளிவந்த உத்தமபுத்திரன் படம் சூப்பர்ஹிட் ஆகியது. சின்னப்பாவின் இரட்டை வேட நடிப்பு ரசிகர்களை அசர வைத்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடலும், சூப்பர் ஹிட் ஆகி வசூலில் சாதனை படைத்தது. அந்த வருட சினிமா பட தேர்தலில் உத்தமபுத்திரன் முதல் இடத்தை பெற்றது. இதைத் தொடர்ந்து அன்றைய சினிமா உலகில் சின்னப்பா சூப்பர் ஆக்டர் ஆக திகழ்ந்தார்.

உத்தம்புத்திரன் படத்தின் மூலம் உயர்நட்சத்திர அந்தஸ்த்துக்கு உயர்ந்த பி.யூ. சின்னப்பா செல்வத்திலும் உயர்ந்த இடத்திற்கு வந்தார். புதுக்கோட்டையில் வீடுகளாக வாங்கி குவித்தார். இவரின் செல்வாக்கை கண்டு, ''எங்கே புதுக்கோட்டை நகரமே பி.யூ  சின்னப்பாவுக்கே ஆகிவிடுமோ'' என்று அஞ்சிய புதுக்கோட்டை மன்னர் பி.யூ.சின்னப்பா இனி புது வீடுகளே புதுக்கோட்டையில் வாங்க்கூடாது என்று அவசர சட்டமே பிறப்பித்தார் என்றால் அவரது செல்வாக்கு எவ்வளவு உயர்ந்திருந்தது என அறியலாம்.

(குறிப்பு; பின்னாளில் ஆனந்த விகடன் செய்தி வெளியிட்டிருந்தது  இப்படித்தான்..... ""புதுக்கோட்டை நகரத்தையே ஆக்கிரமித்த சின்னப்பாவின் செல்வாக்கு எப்படி அழிந்ததோ....?"" அவர் மனைவி சகுந்தலா அந்திம காலத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டபட்டதையும்,  வறுமையில் வாடியதையும், அவர் மனைவி சகுந்தலாவின் கண்ணீர் மல்க பேட்டி அளித்ததையும் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தது....)

அதன் பின்னர் தயாளன், தர்மவீரன், பிருதிவிராஜன், மனோண்மணி ஆகிய படங்களில் நடித்தார். இவற்றுள் மனோண்மணியில் தான் சின்னப்பா அதிகம் பாராட்டுதல் பெற்றார்.

இந்த கால கட்டங்களில் தான் ஏழிசை மன்னன் எம்.கே.தியாகராஜ பாகவதர் ரசிகர்களும், நடிக மன்னர் பி.யூ.சின்னப்பா ரசிகர்களும் (ஆக்ஷன் கிங்) ஆங்காங்கே மோதி கொண்டனர். சில இடத்தில் அடிதடியும் நடந்து உள்ளது.

அக்காலத்திலேயே ரசிகர்கள் இருவேராகப் பிரிந்து செயல்படும் முறை இருந்தது. கட் அவுட், பேனர் வைக்கும் முறை என்றாலும் சரி, திரைப்படத்தில் தன் நாயகர் தோன்றும் போது சூடம் காட்டுவதென்றாலும் சரி இந்த அரைவைக்காட்டுத்தனங்கள்  எல்லாம் அன்றிலிருந்தே ஆரம்பித்து தொடர்ந்து வந்தவைகள் தான்.  ரசிகர்களிடையை கைலப்பும் அவ்வப்பொழுது படம் வெளியாகும் பொழுது தொடர்ந்தது.ஆனால் இதற்கு காரணிகளாக விளங்கிய நாயகர்கள் தங்களுக்குள் ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்கி கொண்டிருந்தனர் என்பது மட்டும் உண்மை.

பி.யூ. சின்னப்பாவின் குரல் வளம் பற்றி.......


1944 இல் வெளியான ஜெகதலப்பிரதாபன்... தாயைப் பணிவேன்...நமக்கினிப் பயமிது கல்யாணி ராகம்.... பாட்டும் நானே பாவமும் நானே என்ற திருவிளையாடல் பாடலும்  கல்யாணி ராகத்தில் பாடப்பட்டது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் திருவிளையாடல் படத்தில் டி.எம்.செளந்திரராஜன் சிவாஜிக்காக பாடியது. அதில் சிவாஜி வீணை வாசிப்பவராக, மிருதங்கம் வாசிப்பவராக என ஐந்து வேடங்களில் டிரிக் ஷாட் மூலம் தோன்றி பாடல் போட்டிக்காக வந்த பானப்பத்திரரை (டி.எஸ் பாலைய்யா) ஊரை விட்டே ஒடச்செய்த ராகம்  (கதைப்படிதான்)...  ஆனால் ஜெகதலப்பிராதபனில் பி.யூ.சின்னப்பா 5 வேடங்களில் தோன்றி இந்த ராகத்தில் சொந்தக்குரலில் பாடி அனைவரையும்  அன்றே அதாவது 1944 லேயே அசத்தினார் என்று இசை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தமிழ் நாட்டின் தவ நடிக பூபதியாக விளங்கியவர் பி.யூ. சின்னப்பா, இசையை விட நடிப்புக்கு முன்னுரிமை என்பதால் இது வந்தது.... எம்.கே.டி யை ஏழிசை மன்னர் என்று புகழ்ந்தாலும், பியூ சின்னாப்பாவைத்தான் நடிப்பிற்கான உதாரணமாக காட்டினார்கள் என்று பி.யூ. சின்னப்பாவின் பரம ரசிகரான மருதக்குமாரன், பழம்பெரும் பத்திரிகையாளர், (சினிமா எக்ஸ்பிரஸ், தென்றல் திரை பணியாற்றியவர்) கூறுகின்றார்.  மேலும் எம்.கே.டி  பாகவதற்கு நடிப்புத்திறமை குறைவுதான் இது அவருக்கும் தெரியும், ஆனால் நடிப்பு, பாட்டு இரண்டிலும் அசத்தியவர் பி.யூ.சின்னப்பா.

பி.யூ சின்னப்பா, எம்,கே.டி இருவருக்குமுள்ள வேறுபாடுகள்.....

எம்.கே.டி யின் பாடல்களில் கர்நாடக சங்கீத சமாச்சாரங்கள் அதிகமிருக்கும் ஆனால் பாவம் இருக்காது, இது எம்.கே.டி யின் பாடல்களில் உள்ள முக்கிய குறைபாடாக கூறுகிறார்... பி.யூ சின்னப்பாவிடம் பாவம் அதிகமுண்டு, வசனங்களை உணர்ச்சிபூர்வமாக, தெள்ளத்தெளிவாக பேசுவதில் வல்லவர், என்று அவரின் ரசிகரும், ஹரிக்கதா கலைஞருமான கல்யாணபுர சந்தானம் இவ்வாறு கூறுகிறார்....

''அவருடைய குரல் கணீரென்று ஒலிக்கக்கூடிய (Metallic Voice) அளவில் ரத்தினக்குமார் என்ற படத்தில் பாடியிருப்பது போல்  எம்.கே.டி யால் பாட முடியாது என்றும் கூறுகின்றார். அது சோக ராகமாக  (Pathos) இருந்தாலும் அதற்குரிய பாவங்களுடன் அமைந்திருந்தது''.






''கிருஷ்ணபக்தியில் கதாகாலட்சேபம் செய்யும் காட்சியில் செங்கமலம் என்ற தாசியை வர்ணிப்பு செய்யும் காட்சி மிகவும் பிரசித்திபெற்றது. அதில் மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.  அதுவும் மிகவும் காமுகன், வில்லன் மாதிரியான பாத்திரம் தான் அப்போழுதெல்லாம் இம்மாதிரி பாத்திரங்களில் ஒரு கதாநாயகன் துணிந்து நடிக்க முன் வரமாட்டார்கள். ஆனால் பி.யூ. சின்னப்பா துணிந்து நடித்து காட்டினார். அப்படத்தில் வரும் பாட்டுக்கள் மட்டும் பிரசித்திபெற்றவை, குறிப்பாக கதாகாலட்சேப பாட்டுக்கள் மிக புகழ்பெற்றவை''.....''கிட்டதட்ட ஒரு வருடம் ஒடிய படம்.''.... என்று  மருதக்குமாரன் குறிப்பிடுகிறார்....

''கண்ணகியில் .....சந்திரோதயம் இதிலே..... காணுவதும் செந்தாமரை முகமே...... இந்த காட்சியிலும் சின்னப்பாவின் நடிப்பு அபாரமானது''..... என்று மருதக்குமாரன் குறிப்பிடுகிறார்.

ஒரு முறை இசை விமர்சகர் வாமணன்  அவரது நண்பர் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தியுடன்  (சங்கீத வித்துவான்) பேசிக்கொண்டிருக்கையில்  .'' எப்படிபட்ட சங்கதிகள் போடுகின்றான் இந்த மனுசன்'' ..... ''சங்கீதத்தில் பயம் என்பதே துளிகூட கிடையாதா''..... ''இவனுக்கு''.... என்று தன்னிடம்  கிருஷ்ணமூர்த்தி கூறியதாக வாமணன் பெருமையாக கூறுகிறார்....

1940 இல் வந்த உத்தம்புத்திரன் படம் இவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது. அதில் இவருக்கு இரட்டை வேடம் (டுயல் ரோல்-dual role). அதுதான் முதன் முதலில் வந்த டுயல் ரோல் படம் என்பதால் அது என்ன என்பதை அறிவதற்காகவே மக்கள் கூட்டம் திரையரங்கை நோக்கி படையெடுத்தது.

பிருதிவிராஜனில் பிருதிவிக்கும், சம்யுத்தைக்கும் ஏற்பட்ட கதைப்படியான காதல்,  அவ்வேடத்தில் நடித்த சின்னப்பா, ஏ.சகுந்தலா இவர்களிடையே நிஜக்காதலாய் முடிந்தது. இருவரும் தம்பதிகளாயினர்.

சின்னப்பா ஏ.சகுந்தலாவை 05.07.1944.ந் தேதி அன்று சட்டப்படி திருமணம் செய்துக் கொண்டார்.

சின்னப்பாவின் வளர்ச்சி......

சின்னப்பா ஆர்யமாலா படத்தின் மூலம் நிறைய புகழை பெற்றார். பிறகு வந்த கண்ணகி படம் சின்னப்பாவை பாக்ஸ் ஆபீஸ் கதாநாயகனாக ஆக்கியது.
கண்ணகிக்குப் பிறகு சின்னப்பா குபேரகுசேலர், ஹரிச்சந்திரா, ஜெகதலப்ரதாபன், மஹா மாயா ஆகிய மூன்று படங்களும் மிகுந்த வெற்றியைப் பெற்றன. மஹாமாயா சுமாரான படமாய் இருந்தது. ஆனால் சின்னப்பாவை பொருத்தவரையில் நடிப்பில் படத்திற்குப் படம் அசத்தி வந்திருந்தார்.

சின்னப்பாவின் பாட்டுகள் இசைத்தட்டுகளில் வெளிவந்து நல்ல விற்பனையாகியது. வனொலியில் ஒரே ஒரு தடவை ( 1938ம் வருடம்) பாடியிருக்கிறார். ஆனால், அவர்கள் அப்போது அளித்த சன்மானம், சின்னப்பாவுக்கு போதவில்லை.  இதற்காக ஏற்பட்ட செலவை விடக் குறைவாயிருந்ததால் வானொலி விஷயத்தில் அவர் அக்கறையே கொள்ளாமல் விட்டு விட்டார்.

சின்னப்பா நடித்து வெளிவந்த மற்ற படங்கள் பங்கஜவல்லி, துளசி ஜலந்தா, விகடயோகி, கிருஷ்ணபக்தி முதலியவையாகும். கிருஷ்ணபக்தி அவருக்கு நிறைய புகழை வாங்கி தந்தது.

மங்கையர்கரசி யில் மதுராந்தகன், காந்தரூபன், சுதாமன் என்று மூன்று வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். இதுவும் ஒரு சூப்பர் ஹிட் படமாக சின்னப்பாவுக்கு அமைந்தது.



இவ்வளவு பெருமைகளையும் பாரட்டுகளையும் சுமந்த சின்னப்பா முதலிடத்திற்கு உயர்ந்தாரா? என்றால் இல்லை? அதற்கு தடையாக இருந்தது அவரது குணங்களும் சில பழக்கவழக்கங்களும் தான். திரைப்பட நடிகர்கள் பற்றிய பத்திரிகையாளர்கள் விமர்சனத்தை பாகவதரைப் போல் அல்லாமல் மிகச்சாதாரணமாக எடுத்துக் கொண்ட சின்னப்பா திரையுலகத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து போவதென்பது குறிப்பாக தொழில் சார்ந்தவர்களிடம் அதிக கோபத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். அவர்களை பொருத்தவரை பொருத்தவரை இவர் ஒரு  முன்கோபி. எதிராளியை சற்றும் யோசிக்காமல் கை நீட்டிவிடுவார். '' என் பாட்டுக்காகத்தான் கண்ணகி ஒடியது'' என்று பாடலாசிரியர் பாபநாசன் சிவன் ஒரு படப்பில் பேசிக்கொண்டிக்க, அதைக் கேட்ட சின்னப்பா சீறிப்பாய்ந்து சிவனை புரட்டியெடுத்திருக்கிறார். அதைப்போலவே ''சின்னப்பா ஒரு குடிகாரர்'' (தற்பொழுதய உயர் நட்சத்திரத்தையும் ஒருவர் கூறியிருக்கிறார், அவரும் நகைச்சுவை பெண் திரைக்கலைஞர் தான், அதனால் பெரும் சர்ச்சை விளைந்தது,  இதை பார்த்து தான் கூறினாரோ?) என்ற ரீதியில் உடுமலை நாராயணகவி பேசிவிட சின்னப்பா அவரை ஒட ஒட விரட்டியடித்திருக்கிறார்.


அதிகாலையிலேயே படப்பிடிப்பு தளத்துக்கு சின்னப்பா வந்துவிடுவார். தளத்தில் அவருக்கென்று இரண்டு வறுத்து வைத்த கோழி கூடவே மதுபாட்டில்களும் வைத்துவிடுவார்கள், எல்லாம் தயாரிப்பாளர்கள் செலவுதான். இதையெல்லாம் காலி செய்து விட்டு, பின் படப்பிடிப்பு மைதானத்தில் சிலம்பம் சுத்தி விட்டு மேக்கப் போட்டு  தளத்திற்குள் நுழைவது இவரது வழக்கம். காலையிலேயே மது அருந்தியதால் ஏற்படும் வாடையால் கூட ஜோடியாக நடிக்கும் நடிகைகளுக்கு குமட்டி கொண்டு வருமாம்.... (இப்போதும் இருக்கிறார்கள்....) இவைகளெல்லாம் சின்னப்பாவின் செல்வாக்கை குறைக்கவே செய்தது.... என்னதான் திறமை இருந்தாலும், சின்னப்பாவின் முரட்டுத்தனமும், போதைப்பழுக்கமும் பத்திரிகை மூலம் வெளித்தெரிய ஆரம்பிக்க ரசிகர்களும் வெறுப்பைக் காட்ட ஆரம்பித்தனர். ஆகையால் சின்னாப்பா பின்தங்கியே இருந்தார். இறக்கும் வரை அவருக்கு இரண்டாவது இடமே நிலைத்தது.


இதற்கு நேர்மாறாக பாகவதர் இருந்தார். எவ்வளவு பூகம்ப பிரச்சினைகள் வந்தாலும் நிதானமாகப் பதுங்கி பாயும் தன்மை கொண்டவர். எல்லோருக்கும் இனியவராக விளங்கினார். எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய நிலைப்பாடு  (இமேஜ்) சரியும் செயல்களை செய்ததில்லை. (இமேஜ்...... லட்சுமி காந்தனை பிடிக்காமல் போனதோ?) ஆகையால் ரசிகர்கள் மட்டுமில்லாது, படவுலகத்தினரின் மத்தியிலும் செல்வாக்கு பெற்றிருந்தார்.

தமிழ் திரையுலகில் முதன் முதலில் நடிக மன்னன் என புகழப்பட்ட சின்னப்பா 23/09/1951 ம் ஆண்டு இரவு 9.45 மணிக்கு தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் காலமானார்.

சின்னப்பா நடித்து வெளிவந்த கடைசி படங்கள் வன சுந்தரி, ரத்னகுமார், சுதர்ஸன் ஆகும். சுதர்ஸன் என்ற படம சின்னப்பா மறைவுக்கு பிறகு தான் வெளிவந்தது. இந்தப்படம் தான் சின்னப்பாவின் கடைசிபடமாகும்.

அவரது மகன்.........

சின்னப்பாவுக்கு ஒரே மகன் அவர் பெயர் பி.யு.சி.ராஜபகதூர் ஆகும்.
ராஜபகதூர் கோயில் புறா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
கோயில் புறா படம் அவருக்கு எந்த பெயரையும் வாங்கித் தரவில்லை. இதை தொடர்ந்து வில்லன் வேடங்களில் வாயில்லாப்பூச்சி, ஒரு குடும்பத்தின் கதை, கரகாட்டக்காரன் போன்ற படங்களில் நடித்தார்.
சினிமாவில் ராஜபகதூர் வளர்ந்து வந்த நேரத்தில் அவரும் காலமானார். (இவரைப்பற்றிய தகவல்கள் சரிவர கிடைக்கவில்லை)


சின்னப்பா 27 க்கும் மேறபட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், சின்னப்பாவின் பல படங்கள் சேமித்து வைக்காததின் விளைவாக பல படங்கள் அழிந்துவிட்டன. பாடல்களும் சரியாக சேமித்து வைக்கப்படவில்லை. இவைகளை சேகரித்து, சேமித்து வைப்பதினால் இவரின் தமிழிசைப் பாடல்களை எதிர்வரும் காலத்தினர் அனைவரும் நுகரும் வாய்ப்பு கிட்டும். அரசு இவைகளில் அக்கறை காட்ட வேண்டும்.


மேலும் சுவாரசியமான தகவலுக்காக.....http://www.lakshmansruthi.com/legends/puc.asp 



ஆதாரம்; லஷ்மண் சுருதி இணையதளம், பிபிசி தமிழோசை பாட்டொன்று கேட்டேன்,
நூல் ஆதாரம்; தமிழ் திரையுலக சாதனைப்படங்கள்....பாலபாரதி

2 comments: