Pages

Saturday 19 December, 2009

பேசும் கலை வளர்ப்போம் -1




பேசும் கலை வளர்ப்போம் என்ற இந்த இடுகையை தொடராக வெளியிடுவதில் பெருமை படுகின்றேன். எனக்கு தமிழின் மீது ஈடுபாடு வர முதல் காரணம் என் தந்தைதான்.  இருந்தாலும் அதன் மீது அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது கலைஞரின் எழுத்துக்களும், அவருடைய பேச்சும் என்றால் மிகையாகாது. எழுத்தை விட பேச்சையே அதிகம் ரசித்திருக்கிறேன். அரசியல் கூட்டங்களுக்கு  என் தந்தையுடன் சிறுவயதிலேயே சென்று வந்ததால் கலைஞரின் பேச்சுக்களில் நானும் என்னை அறியாமல் ஈடுபாடு கொண்டேன்.


எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் திமுக வின் பிரச்சார கூட்டமானாலும் சரி அது கொள்கை விளக்க கூட்டமானாலும் சரி இல்லை பொது விளக்க  கூட்டங்களானாலும் சரி. யார் யார் பேசுகிறார்கள் என்பதை சுவரொட்டி மூலம் மக்கள் அறிந்து கொண்டு மிதி வண்டியில் எவ்வளவு தூரம் ஆனாலும் சென்று அப்பேச்சுக்களை கேட்டு ரசிப்பார்கள். ஒருகூட்டம் முடிந்தவுடன். பேச்சாளர்கள் இன்னொரு இடத்தில் நடக்கும் கூட்டத்திற்கு செல்லுவதற்கு முன் அங்கேயும் விரைவாக சென்று (மிதிவண்டியில் தான்) பேச்சை ரசிப்பவர்களும் உண்டு. 



 திமுக காரனுக்கு பேசத் தெரியவில்லை எனறால் பெரிய இழுக்காக நினைத்த காலமது. பெரியார், அண்ணா இவர்களின் பேச்சுக்களை கேட்காதவர்கள் கூட இவர்களின் பேச்சுக்களை வைத்து அவர்களின் பேச்சுக்கள் எப்படியிருந்திருக்கும் என்று யூகித்து கொண்டனர். பேசுபவருக்கே நாவலர் என்று பெயர் வைத்த காலம். எப்படி பேசுவார்கள் என்று எவராலும் யூகிக்க முடியும். சரியாக பேசவில்லை என்றாலும், அவதூறாக பேசினாலும் கலைஞரிடமிருந்து குட்டு வரும் என்று கட்சியின் பேச்சாளர்கள் அனைவரும் அறிந்து கொண்டு பேசுவார்கள். இது பெரியாரிடமிருந்து, அண்ணாவும் அண்ணாவிடமிருந்து கலைஞரும் பின்பற்றி வந்த கலைகள்.


கட்சி கூட்டங்களில் கலைஞர் தான் என்றில்லை. எல்லாருடைய பேச்சுக்களையும் ரசிப்பவர்களாக, இருந்தனர். கலைஞரை விட, அவரை மிஞ்சுகின்ற அளவுக்கு மிக இலக்கியத் நயத்துடன் பேசக்கூடியவர்கள் நிறைந்திருந்தவர் காலமது. கரகரத்த தொண்டைக்கு சொந்தக்காரர் கலைஞர், அதற்கடுத்து நாஞ்சிலார், (நாஞ்சில் கி மனோகரன்) , மூக்கடைத்தார் போல் பேசும் அன்றும் அதே மகா கண்டிப்புடன், கேட்பவர்களின் முடிகள் புடைக்க, பேசுவதில் பேராசிரியரை விட சிறந்தவர் என்று ஒருவரையும் கூற முடியாது. 

பேராசிரியரின் பேச்சுக்களிடையே அடிக்கடி இடம்பெருபவை.....



"ஈரமானத் தமிழன், சொரணையற்றத் தமிழன், தன்னை சுற்றி ஈரம் சூழ்ந்திருக்கிறதே என்று உணராமல் "இன்னுஞ் சொல்லப்போனால்" தூங்கி கொண்டிருக்கின்ற தமிழன், தன்னை உணராத தமிழன், அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்கினாலும் ஏன் என்று காப்பாற்ற நாதியற்ற தமிழன், தன் வரலாற்றை பின்னோக்கி பார்க்காத தமிழன் " ..........  இப்படி இன்னுஞ் சொல்லப்போனால் என்று போய்க்கொண்டேயிருக்கும்.




அவரின் உஷ்ணப் பேச்சுக்கள் ஆரவாரமில்லாமல்  கேட்பவர்களின் உள்ளங்கள் உணர்ச்சிகளில் கொப்பளித்து கொண்டிருக்க செய்துவிடும். அது மாதரி பேசக்கூடியவர் பேராசிரியர். அதற்காகத்தான் அவருக்கு இனமான பேராசிரியர் என்ற பொருத்தமான அடைமொழி.



பேராசிரியர் உணர்ச்சி வார்த்தைகள் ஏற்படுத்திய கொந்தளிப்பு மனதோடு உடன்பிறப்புக்கள் இருந்தால் கலைஞரின் நகைச்சுவை  பேச்சு அவர்களை அமைதிப்படுத்தி பிறகு மெதுவாக உணர்ச்சியை ஏற்றும்.


இன்று வயதின் (இருவரும்) காரணமாக அவர்கள் தனது நடையை குறைந்திருந்தாலும். அன்று 3, 4 மணிநேரம் என்பது சாதரணமான நேரங்கள் தான்.  மக்கள் அத்துணை மணிநேரமும் பொறுமை காத்து கேட்கும் ஆவல் கொண்டிருந்தனர்.



கட்சியினர் என்று இல்லை அனைத்து நடுநிலைவாதிகளும், அறிஞர்களும், ஆசிரியர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைவரும் இக்கூட்டங்களுக்கு செல்லும் வழக்கமுடையவர்களாக இருந்தனர்,  மாற்றுக் கட்சியினரும் செல்வார்கள்.  செல்வந்தர்கள் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு ஒலிபெருக்கி அருகே நின்று அத்தனையும் கேட்டு ரசிப்பார்கள்.


அனைறைய காலகட்டத்தில் சிறந்த பேச்சாளராக நாவலர் (நெடுஞ்செழியன்- மிகப் பிரபலமாக பேசப்பட்டவர், அதன்பிறகு கட்சி மாறியதால் அவர் தன் பேச்சாற்றலை அவ்வளவாக வெளிப்படுத்தவில்லை,  டாக்டர் காளிமுத்து, துரை முருகன், வெற்றி கொண்டான், வைகோ,திருச்சி சிவா (இளைஞர் அணி).... இன்னும் பலர்.. சிறந்த பேச்சாளர்களாக வலம் வந்தனர்.


.இதில் டாக்டர் காளிமுத்து இலக்கிய நயத்துடன் குரல் ஏற்ற இறக்கங்களுடன் மிக சிறப்பாக பேசும் ஆற்றல் பெற்றிருந்தார்.  ஒரு முறை தமிழகத்தில் உள்ள ஜாதிகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி தொடர்ந்து பேசியது மக்களை வியப்பில் ஆழ்த்தியது. இதில் பேராசியரும் வியந்து பாராட்டினார்.  (அந்த நேரத்தில் விசில் பறக்கும். பேசும் போது யாராவது சலசலத்தால் தர்ம அடிதான். அந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் மக்கள் இருப்பார்கள்.)



திமுக மேடைகளில் பேச வரும்போது தோழமைக்கட்சியின் பேச்சாளர்கள் அதிக முன்னேற்பாட்டுடன் வருவார்கள். மக்களும்  நிறைய எதிர்பார்ப்புடன் இருப்பார்கள் என்பது அவர்களுக்கு முன்பே தெரியும். அதற்கேற்ப தங்களை தயார் படுத்தி கொண்டு வருவார்கள்.  மக்களும் அனைத்து தகவலும் தெரிந்தவர்களாக (அப்டேட்டாக) இருப்பார்கள்.  அதற்கு ஒரு உதாரணம் சில இடங்களில் பேச்சாளர்களின் அரசியல் நையாண்டிக்கு மக்கள் சிரிப்பார்கள். மெத்த படித்த செல்வந்தருக்கு கூட என்ன என்று புரியாது அருகில் இருப்பவர் விளக்கியவுடன் தான் புரியும்.



இது தமிழுக்கே உரிய தனித்தன்மையை , அவர்கள் எடுத்து சென்ற விதம், மக்களிடத்தில் தமிழை கையாண்ட விதம்,  மக்கள் அந்த தமிழோடு ஒன்றியிருக்க காரணமாயிற்று. அதுவே எனக்கும் காரணமாயிற்று. ஒரு தெருமுனை பிரச்சார கூட்டம் போடுகிறவர் கூட சர்வ சாதாரணமாக பேசும் ஆற்றல் கொண்டவராக விளங்கினார்கள். அன்றைய காலகட்டங்களில் திமுக பாசறை கூட்டங்கள், இலக்கிய கூட்டங்கள், பட்டி மன்றங்கள் என்று நிறைய நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதுவும் எதிர் கட்சியாக இருந்த போது அதிக கூட்டங்கள் நடைபெற்றன.


அந்த மாதிரி மேடை பேச்சுக்களை கேட்கின்ற காலங்கள் மெல்ல மெல்ல மறைந்து கொண்டு வருவதாக நான் அறிகின்றேன்.  இலக்கிய கூட்டங்களும்  குறைந்து கொண்டு வருகின்றன. (நடக்கின்றது ஆனால் முன்பு போல் இல்லை) மனிதன் தன்னை இணையத்தில் சுருக்கி கொண்டதன் விளைவாக இருக்கலாம். 

ஒருவர் முகம் பார்க்காமல் எதையோ தட்டச்சு செய்து, பேசுவதாக தன்னையே ஏமாற்றிக் கொண்டு திருப்தியடைகின்றான். இதனால் பேச்சுக்கள் எப்படியிருக்கும் என்று கூட அறிய முடியாத, அந்த சூழல்களை அறிய முடியாத சூழ்நிலை இப்போது.



இவைகளெல்லாம் நாம் சமூகங்களை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதையே நிரூபித்து கொண்டிருக்கின்றது.

( வேர்க்கடலை ஒரு பொட்டலம் வாங்கி கொண்டு அந்த மாபெரும் கூட்டத்தினரிடையை "வாதோழா உட்காரு, என்று கூப்பிட்டு இடம் கொடுப்பார்கள். "அப்படி போடு", " வா வந்த" என்னம்மா "பேசறாருய்யா இந்த மனுச" என்று கூறும் அந்தசாமான்யர்களின்  கருத்துக்களை அவ்வப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கலாம்.) 

சிலர் உணர்ச்சி பெருக்கால் வாய் விட்டு அழுவார்கள். சிலர் கண் களங்குவார்கள. உணர்ச்சிகள் இல்லாதவர் யார்?


அப்பொழுதெல்லாம் திமுக மேடைகளில் பேசத்தெரியாதவர்கள் அவர்களாகவே மேடைகளிலிருந்து ஒதுங்கி கொள்வார்கள். திமுக மேடை என்பது சொற்பொழிவு போன்றது, (போன்றது என்ன சொற்பொழிவுதான்).அனைத்து குறிப்புகளும் பேச்சாளரின் கைகளில் இருக்கும். உதாரணங்களுடன் வருவார்கள். அப்படி பயிற்றுவிக்கப்பட்டாதாலேயே அன்றும், இன்றும், என்றும் சொல்லுவார்கள். திமுக காரனுக்கு பேசக் கத்துக்கொடுக்கனுமா?


பலருக்கு மேடைகளில் எப்படி பேசுவது எனபது தெரியாது.  ஒருவரை எப்படி மக்களின் முன் எப்படி அழைப்பது என்பது கூடத் தெரியாது. பிரபல பத்திரிகையளருக்கே தெரியவில்லை. 
 (இன்று பிரபலம்,  அன்று வளர்ந்து வரும் பத்திரிகையாக இருந்த்து) . 

1994 ஆம் ஆண்டு  நக்கீரன் கோபால் அனைறைய முதல்வர் ஜெயல்லிதாவை கடுமையாக விமர்சித்து தொடர் கட்டுரைகளை க.சுப்பு (அன்று காங்கிரஸ்-அரசியல் பிரமுகர்- பிறகு விலகிவிட்டார்) மூலம் வெளியிட்ட ''இங்கே ஒரு இட்லர்'' என்ற தொடர் கட்டுரைகளின் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டார்.  அதற்கு தலைமையேற்க கலைஞரை நடிகர் சங்க கட்டிட கலையரங்கத்தில் புத்தக வெளியீட்டு விழா ஏற்பாடு செய்து அழைத்தனர். அப்பொழுது விழாத் தலைவரை வரவேற்று பேசிய பத்திரிகை ஆசிரியரும் நிறுவனருமான நக்கீரன் கோபால் கருணாநிதி அவர்களை வரவேற்கின்றேன் என்று அடைமொழியின்றி கூறினார். இது அவரின் தொண்டர்களை கொதிப்படைய செய்யும் எனத் தெரியாமல்.


கூட்டம் முழுவதும் எழுந்து கொண்டு அவரை அடிக்க முண்டியடித்தது. (அப்போது பாதுகாப்பெல்லாம் பெரிதாக கிடையாது) அவரும் விழித்தார். (புரியாத மாதிரி விழித்தாரோ, என்னவோ).  அதன் பிறகு கலைஞர் என்று அழைக்கவேண்டும், அது தெரியாதா! உங்களுக்கு என்று திருநாவுக்கரசு கூறியவுடன், அது போல் நக்கீரன் கோபால் மீண்டும் அழைக்க கூட்டம் அமைதியனது. 

திருநாவுக்கரசு (மத்தியமைச்சராக  இருந்து இன்றைய காங்கிரசில் சேர்ந்திருப்பவர் தான்) பேசும் பொழுது இதை சுட்டிகாட்டத் தவறவில்லை.  இது மேடை பேச்சு பற்றி அறியாததினால் வந்த விளைவு அது பத்திரிகையாளருக்கு தெரியாதது அதைவிட ஆச்சரியம்..... (இன்று அவர் நெருக்கமானவராக மீசையை தடவுகிறார்....)


 இப்பொழுது இணையத்தில் கருத்துரைகளை கூட முழுமையாக வெளியிடமுடியாமல், புரிந்தும் புரியாமலும் ஏற்றுக் கொள்கின்ற நிலைக்கு உலகம் சுருங்கி விட்டது. ஒருவரிடமும் மனம் விட்டு பேசுவது என்பதே இப்பொழுது கிடையாது. ஆகையால் பேசுவது என்றால் என்ன என்பது கூட தெரியாது.

இல்லங்களில் இன்றைய தலைமுறையினர்களுக்கு ஒரு விருந்தினரை வரவேற்க கூட  தெரியவில்லை.  எல்லோரையும் ஒருமையில் அழைப்பது வழக்கமாக உள்ளது.  (குப்பை அள்ளும் நகர சுத்தி தொழிலாளரை பார்த்து) குப்பைக்காரன் வந்திருக்கான், காய்கறிக்காரன் வந்திருக்கான், செருப்பு தைக்கறவன் வந்திருக்கான், மளிகை கடைக்காரன் வந்திருக்கான், பிச்சைக்காரன் வந்திருக்கான் என்று வளர்ந்த பிள்ளைகளே அழைக்கின்றனர். 

 அதையும்  கண்டிக்காத பெற்றோர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதெல்லாம் பேச்சை குறைத்து கொண்டதால் வந்த வினை. அவர்கள் பெற்றோருக்கு பேச தெரியாததால் பிள்ளைகளுக்கும் பேச  தெரிவதில்லை.
 
இணையத்தில் பலர் கருத்துக்கள் என்ற பேரில் ஏக வசனங்களால் தாக்கி  கொள்கின்றனர் அதை பார்க்கும் பொழுது எனக்கு இந்த எண்ணம் தான் வந்தது. 




ஒரு மனிதனுக்கு மொழி, பேச்சு, இவைகள் சுத்தமானதாக இருக்கவேண்டும் மற்றவர்களுக்கு புரியவேண்டும். வாயிருந்தும் பேசமுடியாதவர்களாக வாழ்வது வீண். அதை போக்க நம்மை நாமே வளர்த்து கொள்ளவேண்டும் என்ற கருத்தின் அடிப்படையிலும் ஒருவர் மேடை பேச்சாளராக என்னென்ன தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்  இந்த தொடர் கட்டுரை, முத்தாரத்தில் கலைஞர் அவர்களால் எழுதப்பட்டது. இதை படிக்கும் பொழுது பலருக்கு நாமும் பேச்சாளராக ஆகலாம் என்ற எண்ணம் தோன்றும். ஆங்கிலத்தில் உரையாட நினைப்பவர்களும் கருத்தில் கொள்ளவேண்டியவைகளையும் குறிப்பிட்டுள்ளார். 

அதை அனைவரின் பார்வைக்கு  தொடராக வைக்கலாம் என்ற நல்லெண்ணத்திலும் தான். திரைப்படம், மற்ற கேளிக்கைகளின் இடையிடையே இந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றால் மனதில் உள்ள சஞ்சலங்கள், சோகங்கள்  மறையும், மனம் தெளிவடையும், நாமும் பிறரிடத்தில் எப்படி உரையாடவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் வளரும். அது இந்த இயக்க கூட்டங்கள் என்றில்லை எந்த இயக்க கூட்டங்களிலும் கலந்து கொண்டு நமது பேச்சாற்றலை வளர்த்து கொள்ளலாம்.
(எனக்கு தெரிந்தது திமுக கூட்டங்கள் தான்)



இனி மீதி விஷயங்களை கலைஞரே அவருடைய நடையில் சொல்வார் பார்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி!


பேசும் கலை வளர்ப்போம்
1

கலையை வளர்ப்போம் என்ற பொருளில், கலையைக் கலைக்காக
வளர்ப்போம் என்ற பொருளில் சிலர் கருத்து அறிவிப்பது
ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல!

''கலை என்பது கலைக்காக” என்றால், விளக்கு
என்பது விளக்குகாக என்று மட்டுமேயென விவாதிப்பது
போலாகிவிடும்.



விளக்கு ஒளி தருவதற்காக
அதைப்போலவே கலையும், சமுதாயத்துறையில் பொருளாதாரத் துறையில் அரசியல் துறையில் அறிவு ஒளியை, ஆராய்ச்சி ஒளியை, சிந்தனை ஒளியை,
செயலாற்றும் ஒளியைத்தர வல்லதாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
வீணை, யாழ், நாதசுரம் போன்ற இசைக் கருவிகளில்
கலையை மட்டுமே காணுகிறோம்.



ஆனால் ‘இராக, ‘தாள, பாவங்களுடன் இனிய குரலில்
இசைவாளர் பாடுகிறார். அவரது இசைத் திறனை
வியந்து பாரட்டிகிறோம். மண்டபத்திலுள்ள நூற்றுக்கணக்கான தலைகள் தம்மை மறந்து ஆடுகின்றன.
ஆகா! சபாஷ்!” என்று ஒலிகள் எழுப்புகின்றன.



அந்த இசை, வெறும் நுணுக்கத்துடன் நின்று
விடாமல் ‘வெண்ணிலா வானும் போலே வீரனும்
கூர்வாளும் போலே கன்னல் தமிழும் நானும் அல்லவோ’ ‘என்ற
பாரதிதாசனாரின் பாடலாக இருந்தால் இசையைப் பருகுகிறோம்.



அத்துடன் தமிழ் இன்பத்தைப் பருகுகிறோம் கவிஞரின்
கவிதைச் சுவையைப் பருகுகிறோம் அனைத்துக்கும்
மேலாகத் தாய்மொழி உணர்வோடு கலந்துவிடுகிறோம்.



எனவே, இசைப் பாடலாயினும், கூத்தாயினும்
அவை உணர்வு கலந்த கலையாக இருந்திடல் வேண்டும்.
மேடையில் பேசுவதும் ஒரு கலைதான்- இசையில்


நடனத்தில் நாடகத்தில் அதற்குரியோர்- ஏற்கனவே பசிற்சி பெற்று ஒத்திகை பார்த்துகொண்டு திரும்ப திரும்ப அதே பாடலை, அதை ஆடலை, அதே நடிப்பை, அந்தந்தநிகழ்ச்சிகளுக்கேற்ப காட்டிட இயலும்.



‘ஆனால், பேச்சுக்கலை ‘அப்படியல்ல! ஜனநாயகம்
வளர்ந்து வரும் இந்த யுகத்தில் எல்லாவற்றையும்
விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.’


‘பள்ளிக்கூடங்களிலேயே பேச்சு போட்டிகள், பரிசளிப்புகள் என்று
ஆரம்பமாகிவிடுகின்றன.’


‘ஊராட்சி மன்றங்களில் ஊருக்குத் தேவையான விஷயங்களுக்காகப்
பேசவேண்டியிருக்கிறது.’
‘நகராட்சிமன்றங்களிலும், மாநகராட்சி மன்றங்களிலும்
அதே மாதிரியான தேவைகளைப் பற்றி நறுக்குத்
தெறித்தாற் போல பேசவேண்டியிருக்கிறது.’


‘சட்டமன்ற அவைகளில் தொகுதியைப் பற்றியும்
மாநிலத்துப் பிரச்சினைகளைப் பற்றியும் சுவையாகவும்
விவாதிக்க வேண்டியிருக்கிறது. சூடாகவும் விவாதிக்க
வேண்டியிருக்கிறது.’

‘பாரளுமன்ற இரு அவைகளிலும் நாட்டுப்
பிரச்சினை, மாநிலங்களின் பிரச்சினை, அரசியல் கட்சி
பிரச்சினை, அந்நிய நாட்டுப் பிரச்சினையென்று
எத்தனையோ பிரச்சினைகளைப்பற்றிக் கனிவுடனும்
பேசவேண்டியிருக்கிறது; காரசாரமாகவும் பேசவேண்டியிருக்கிறது;’


‘கூட்டுறவு நிறுவன உறுப்பினர்களிடையே வாதம்
எழும்போது உண்மைகளை எடுத்து வைப்பது மட்டு
மல்லாமல்,’ அவற்றை வாதாடும் திறமையுடனும்
நடத்திட வேண்டியிருக்கிறது.’


‘நேர்மையான ஒருவருக்காக வழக்கு மன்றத்தில்-
வாதாடுகிற வழ.க்குரைஞர் எவ்வளவு பெரிய சட்டமேதை
யாக இருந்தாலும் நியாயத்தை நிலைநாட்டப் பேச்சாற்றல்
தேவைப்படுகிறது.’


இப்படியுள்ள பல்வேறு துறைகளைப் பற்றியும் விமர்சிக்கிற’
அரசியல்வாதிக்கு மேடையில் பேசிடும் கலை மிகமிகத் தேவையானது-


-எல்லாத் துறைகளின் பெயர்களையும் நான் இந்தத்
தொடர்- கட்டுரையின் முகப்பிலேயே கோடிட்டு காட்ட
வில்லையென்றாலும் கூட பல்வேறு துறைகளிலும்
தேவைப்படுகிற பேச்சுக்கலை குறித்து, பலசெய்திகளையும்,
விளக்கங்களையும் அளிக்க இருக்கிறேன். அவை ‘உங்களில்
பலருக்குப் பேச்சுப் பயிற்சியை வழங்கிட உதவு
மென்றுநம்புகிறேன். 

ஏற்கனவே பேச்சாளராக இருக்கிற
சிலருக்குத் தங்களின் குறைபாடுகளை நீக்கிக்
கொண்டு மேலும் சிறந்த பேச்சாளராகத் திகழத் துணை
புரியும் என்று எதிர்பார்க்கிறேன்.-


அத்தகைய நல்ல நோக்கத்துடன் தான் இந்தத்
தொடர் கட்டுரை தீட்டப்படுகிறது..



குறிப்பிட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே
பயனைடைய வேண்டுமென்றல்ல. பேச்சுக் கலையில்-
சிறந்து விளங்கவேண்டுமென்று விரும்புகின்ற இளந்தலை
முறையினர் அனைவருமே இந்தக் கருத்துக்களைச்,
சிந்தித்து பார்த்து ஏற்க முடிந்தவைகளை, ஏற்கக்
கூடியவைகளை ஏற்றுக் கொள்ளலாம்.


"விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
  சொல்லுதல் வல்லார்ப் பெறின்”


என்றார் வள்ளுவர்! கருத்துக்களை ஒழுங்காக அமைந்து


இனிமையாகச் சொல்லக்கூடியவரைப் பெற்றால்
அவருடைய ஏவலை உலகம், விரைந்து கேட்டு அவ்வாறு
நடக்கும், என்பது இந்தக் குறளுக்குப் பொருள்.

இரண்டாயிரம் ஆண்டுகட்டு முன்பே எண்ணத்தில்
எழிகின்ற கருத்துக்கள் மட்டும் போதாது, அவற்றைச்
சொல்ல வேண்டிய முறையில் சொன்னால்தான் வெற்றிகிட்டும் என்று
சொல்வன்மை என்ற அதிகராத்தையே
வழங்கியுள்ளார் வள்ளுவர்.


“அம்மா அப்பா” என்று மழலை பேசத் தொடங்கி
ஆங்கிலம் போன்ற மொழிகளில் பட்டம்பெற்று எண்ணற்ற
சொற்களைக் கற்றவர்களாகக்கூட இருக்கலாம்.

‘சொற்களை தெரிந்து வைத்திருப்பது வேறு
அவற்றை ஆள்வது என்பது வேறு!’


அந்தச் சொல்லை ஆள்வது பற்றிய சுவையான
தகவல்களைத்தான் உங்களுக்கு சொல்லப்
போகிறேன்.


1970- ஆம் ஆண்டு மேல்நாடுகளில் சுற்றுப்பயணம்
மேற்கொண்டிருந்த போது இலண்டன் மாநகரத்தில் பல
பகுதிகளைப் பார்வையிடும் வாய்ப்பு கிட்டியது. “ஹைட் பார்க்”
(Hyde park) என்று ஒரு அழகான இடம்! அதனை
ஒரு சொற்பொழிவுக்களம் என்று கூடக் கூறலாம். 
அந்தப் பார்க்கில் இடையிடையே உள்ள பரந்த வெளிகளில் புல்
தரைகளில் நூற்றுக்கணக்கில் மக்கள் வட்டமாக நின்று
கொண்டிருப்பர். இவ்வாறு ஒரு இடத்தில் மட்டுமல்ல;
பல இடங்களில்!


அங்கெல்லாம் ஒரு மேசை மீது, அல்லது ஒரு
முக்காலி மீது அல்லது ஏதாவது ஒரு பீடத்தின் மீது,
யாராவது ஒருவர் நின்று உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பர்.
நமது ஊர்த் தெருக்களில் வித்தை காட்டுகிறவனைச்
சுற்றிக் கூட்டம் கூடியிருப்பது போல அங்கும்
கூடியிருக்கும். அந்தச் சொற்பொழிவாளர்கள் அந்த இடத்தைத்
தங்களின் பயிற்சிக் கூடமாகவே ஆக்கிக்
கொண்டு பேசுகின்றனர். அவர்கள் அங்கே எதைப் பேசினாலும்
தடையில்லை. ஆங்கிலேய அரச பரம்பரையினரைப் பற்றிக் கூட
ஆசை தீர தாக்கிப் பேசுவார்கள்.


பல்வேறு நாட்டுப் பிரச்சினைகளைப் பற்றிக்
கடுமையாக அலசுவார்கள்.


‘பார்க்கிற்கு வருகின்ற மக்களும் ஒவ்வொருவர் பேச்சாக
கேட்டுக்கொண்டே அன்றைய பொழுதைக்
கழித்துவிட்டு வீடு திரும்புவர்.



அந்தப் பார்க்கிலே பேசி இந்திய நாட்டு உரிமைகளை
அந்த நாட்டு மக்களுக்கு விளக்கிய ஒரு தலை
சிறந்த இந்தியப் பேச்சாளருடைய பெயர் உங்களுக்குத்
தெரியுமா?


ஐ. நா. சபையில் மிக நீண்ட நேரம் பேசி பெரியதொரு
“ரிக்கார்டையே ” ஏற்படுத்திய வி.கே. கிருஷ்ணமேனன் தான்
அந்த பூங்காவிலே ஆரம்ப காலத்தில் பேசியவர்.



அவர் இலண்டன் நகரத்து “ஹைட் பார்க்கில்
நூற்றுக்கணக்கானவரை வைத்துக்கொண்டு பேசியபோது
அவர் ஒரு காலத்திலே, ஐ.நா. அவையில் புகழ்மிக்க
சொற்பொழிவாளராக விளங்குவார் என்று யாராவது
நினைத்திருப்பார்களா?


‘எதற்கும் முயற்சி வேண்டும். முயற்சி திருவினையாக்கும்
முதலில் நான் எப்படி பேசக் கற்றுக் கொண்டேன்? அதைச்
சொல்ல வேண்டாமா?
மேடையில் பேசியதைத்தான் குறிப்பிடுகிறேன்; வீட்டில் பேசக் கற்றுக் கொண்டதை அல்ல!


---- கலைஞர் மு. கருணாநிதி




அது அடுத்த பகுதியில் வரும்................2

No comments: