Pages

Saturday 5 December, 2009

உழைக்கும் மக்களின் சர்வாதிகாரத்தை காணும் நாள் ........

உழைக்கும் மக்களின் சர்வாதிகாரத்தை இந்த உலகம் ஒரு நாள் பார்க்கத்தான் போகின்றது. இது பேராண்மை திரைப்படத்தின் கொஞ்சம் (ஹைலட்டான) அல்ல அதிகமாகவே பதிந்து விட்ட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் வசனம். அதை விளம்பரமாகவே தொலைக்காட்சிகளில் அதிகம் நேரம் ஒளிபரப்பட்ட வசனம். ஆனால் இது எதை சுட்டி காட்டுகின்றது என்பதை அறியாதவர்களும் இருக்கின்றார்கள். இதை உணர்ந்த உழைப்பாளிகளும், பாட்டாளிகளும் திரைப்படம் பார்க்கையில் கைதட்டி ஆரவாரம் செய்து தங்கள் ஆவலை, எதிர்பார்ப்பை இப்படி தீர்த்து கொண்டனர். இதை அறியாத பாமர உழைப்பாளிகள் என்னமோ சொல்றாங்க "அது என்னன்னு புரியல ஏதோ நல்லதா தான் இருக்கும் நாமும் கைதட்டுவோம்" என்று கைதட்டி வைத்தார்கள்.


அவர்கள் மறைமுகமாக ரஷ்யாவையும், அதை வலிமைப்படுத்திய தலைவர் ஸ்டாலினையும் சுட்டிகாட்டினர், கார்ல் மார்க்ஸ் மூலமாக, அதுமட்டுமில்லாமல் சீனாவை, வடகொரியாவை, கியூபாவையும் அதன் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவையும் சேர்த்து சுட்டி காட்டுகின்றனர் என்பது தெரிகின்றது. இவையெல்லாம் சர்வாதிகாரமா? இதெல்லாம் அமெரிக்கா தன் முதலாளித்துவத்துக்கு ஆதரவாக கட்டவிழ்த்து விட்ட விஷம பிரச்சாரங்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இதுவே சரியான ஜனநாயகம் இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய புரட்சி ரஷ்யாவில், சீனாவில், கியூபாவில் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

ஆலிவுட் படங்கள்

அமெரிக்க ஆலிவுட் படங்களில் எல்லாம் இந்நாடுகளை சர்வாதிகாரம் மிகுந்த நாடுகளாக அவர்கள் காட்டுவார்கள் முடிவில் அவர்கள் நாட்டு அதிகாரிகள் வெல்வது போலவே காட்டி கொண்டிருப்பார்கள். இதெல்லாம் ஆகோ, ஒகோ என்று நாமும் ரசித்து விட்டு வருவோம்.

இந்தியாவை ஆள்வது முதலாளிகளே

தமிழ் நாட்டில் இந்த வசனம் பிரபலமாக பேசப்பட்டதற்கும், அதற்கு கிடைக்கும் கைதட்டுக்கும் என்ன சம்பந்தம். இதோ பின்வருபவைகள் தான் சம்பந்தமாக இருக்க வேண்டும்.  இந்தியாவை ஆள்வது முதலாளிகள் என்பது 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் தெரியும். இந்தியாவின் அரசியல், மக்களின் தலைவிதி அனைத்தையும் தீர்மானிப்பவர்கள் முதலாளிகள் தான். ஒரு பிரதமர் யார்? வரவேண்டும்?, ஒரு நிதியமைச்சர் யார்? வரவேண்டும்.?.என்பதை தீர்மானிப்பவர்கள் அவர்கள் தான். அப்படியென்றால் மக்கள் இல்லையா? மக்கள் தான் தேர்ந்தெடுக்கின்றனர் ஆனால் அந்த அரசு நீடிக்கவேண்டுமென்றால் முதலாளிகளின் ஆதரவு நிச்சயம் தேவை என்ற நிலையில் இந்தியா இருக்கின்றது. 



அனுமதிக்கப்பட்ட வேலை நேரம்
இந்தியாவில் தொழிலாளர் நலச்சட்டப்படி ஒரு தொழிலாளர்  8 மணி நேர வேலையே பார்க்க வேண்டும். அதேபோன்று  வாரத்தில் 48 மணி நேரம் வேலையே பார்க்க வேண்டும். (அதிக பட்சமாக 52 மணிநேரம்) இந்த சட்டங்களை எந்த தொழில் நிறுவனங்களும் பின்பற்றுவதில்லை. அரசு நிறுவனங்களை தவிர. இதை கண்காணிக்க நியமிக்கப்பட்ட அரசு அலுவலர்களும் கையூட்டு (லஞ்சம்) மட்டுமே வாங்கிச் செல்வதால் இது  தொழிலாளர்களுக்கு எதிரான செயலாகவே இன்று வரை தொடர்கின்றது. இதை ஆட்சியாளர்களும்  கண்டு கொள்வதில்லை..தொழிலாளர்களுக்கு முதலாளிகளால் பெரும் நெருக்குதல் தொடர்வதற்கு இம்மாதிரி அரசு ஊழியர்களே காரணம்.


விடுமுறை நாட்களிலும் வேலை
பண்டிகை நாட்களிலும், அரசு கட்டாய விடுமுறை நாட்களிலும் இந்திய சுதந்திர நாளன்றும், ஏன் மே தினத்தன்றும், தொழிற்சாலையின் கதவை மூடிவிட்டு உள்ளே தொழிலாளர்களின் மிச்சமிருக்கும் ரத்தத்தையும் உறிஞ்சும் முதலாளி அரக்கர்கள் எக்கச்சக்மாக இந்நாட்டில் உள்ளனர். அவர்களிடம் மாட்டிக் கொண்டு பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இதுதான் நம்தலைவிதி என்று வாழ்க்கையை எப்படியோ தள்ளிக்கொண்டு போகின்றனர்.

எங்கெல்லாமோ தணிக்கை (Raid) செய்கின்றார்கள், அவ்வப்பொழுது ஊழலை கண்டும் பிடிக்கின்றார்கள். ஆனால் இங்கு எவ்வளவு காலமாக தொழிலாளர்களுக்கு எதிரான முறைகேடு நடக்கின்றது. அரசு அதிகாரிகள் தணிக்கை செய்திருக்கின்றார்களா?

ஒரு வாரத்திற்கு
ஒரு தொழிலாளரை  அதிகபட்சமாக 5 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்தார் போல் வேலை வாங்க கூடாது. அதற்கு பிறகு அரை மணி நேரம் இடைவெளி விடவேண்டும்.  இதை மீறுபவர்களே அதிகம் பேர். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 9 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்க கூடாது. அரசு முதன்மை ஆய்வாளரின் ஒப்புதல் பெற்று பத்தரை மணி நேரம்  பணியாக மாற்றலாம். ஆனால் அப்படி யாரும் அனுமதி பெறுவதில்லை.

தொழிற்சங்கம் இல்லை
ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகளுக்கு அதற்குரிய பாதுகாப்பு கவசங்கள், அவசர ஊர்திகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும். (பல நிறுவனங்களில் தொழிலாளர் பணி செய்து கொண்டிருக்கும் பொழுது விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை, சிகிச்சை செய்வதற்கான செலவை ஏற்றுகொள்ள விருப்பமில்லாத முதலாளியால், தொழிலாளிகள் உயிரிழந்த பரிதாபங்களும் உண்டு.  இதை எதிர்க்க அந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வசதியுமில்லை, துணிவுமில்லை. (அதை எதிர்த்து போராட தொழிற்சங்கமும் இல்லை)

365 நாட்களும் வேலை

தொழிலாளருக்கு மாதத்திற்கு மூன்று நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துகொள்ள அனுமதிக்கவேண்டும். (இவைகள் கட்டாயம்) எந்தவொரு தொழிலாளரையும் வாரத்தில் முதல் நாள் (ஞாயிறு) வேலை வாங்க கூடாது. (இது இங்கு கடைப்பிடிப்பதே இல்லை 365 நாளும் வேலை தான்) அப்படி வாங்கினால் வாரத்தில் இன்னொரு நாளில் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கவேண்டும், தொடர்ந்து இரவு வேலை வாங்கும் பொழுது வேலை முடிந்து 24 மணி நேரம் ஒய்வு தரவேண்டும். இதுவும் பின்பற்றப்படுவதில்லை. ஒரு தொழிலாளியை வருடம் முழுவதும் வேலை வாங்கினால் அவன் குடும்பத்திற்காக செலவிடும்  நேரங்களே குறைவாகின்றது. இதன் மூலம் குடும்பத்தில் அவனின் பங்கு வெகுவாக குறைகின்றது.

6 மணிக்கு மேல் பெண்களை வேலை வாங்க கூடாது, சிறார்களை பணியமர்த்தக்கூடாது...
பெண்களை மாலை 6 மணிக்கு மேல் கட்டாயமாக வேலை வாங்க கூடாது, இது இங்கே 8, 9,  மணிவரை போகின்றது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பணியமர்த்தல் கூடாது. பணி செய்வதற்கேற்ற காற்றோட்டமான சூழல், உணவு உண்ணும் அறை, குறைந்த செலவில் உணவு கிடைக்கும் வசதி, ஒய்வு அறை போன்ற வசதிகளுடன் கூடிய நிறுவனங்கள் இயங்கவேண்டும் என்ற நடைமுறைகளையெல்லாம், சட்டங்களையெல்லாம் முறையாக முதலாளிகள் கடைப்பிடிக்கின்றார்களா? கூடுதல் வேலைக்கு இருமடங்கு ஊதியம் தரப்படுகின்றதா? கூடுதல் நேர (OT) வேலை வாங்கும் பொழுது அவருக்கு சிற்றுண்டி வழங்கப்படுகின்றதா? இது எதுவுமே முதலாளிகள் கடைப்பிடிப்பதில்லை. இதை கண்காணிக்கவும் ஆளில்லை. கண்காணிப்பவருக்கு இவர்கள் கையூட்டு கொடுத்து சரிகட்டுவதால் இதை அவர் கண்டு கொள்வதில்லை.


மேலும் மேலும் பணக்காரன்


எப்படியாவது தொழிலாளரை அழித்து முதலாளி மேலும் மேலும் பணக்காரன் ஆக வேண்டும். இன்னும் பல சொத்துக்களுக்கு அதிபதி ஆகவேண்டும். அவன் பிள்ளைகளை மட்டும் நன்றாக படிக்கவைத்து வெளிநாட்டிலும் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் முதலாளிகளுக்கு உள்ளதன்றி, இருக்கின்ற தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றி துளிகூட அக்கறையில்லை. தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச வசதிகள் கூட கிடையாது. அம்மாதிரி நிறுவனங்கள் இயங்க எப்படி அனுமதி வழங்குகின்றார்களோ? தெரியவில்லை?

பொதுவுடமை கட்சி
இதையெல்லாம் தட்டி கேட்க தொழிற்சங்கங்கள் வைத்தால் மட்டுமே தீர்வாகும். (இதற்கு மட்டும் தான் பொதுவுடமை கடசி அன்றிலிருந்து இன்று வரை உள்ளது. மற்ற எல்லாவற்றிற்கும் பொதுவுடமை கட்சியை கழற்றி விட்டு விடுவார்கள்) அப்படி தொழிற்சங்கம் வைக்க முனையும் தொழிலாளியை சட்டவிரோதமாக நீக்கி அப்பொழுதே முற்று புள்ளியும் வைத்துவிடுவார்கள். இதற்கு தீரவு தொழிற்சாலைகளில் கட்டாயத் தொழிற்சங்கங்கள் வைக்க அரசு ஆணையிடுவது மட்டும்  தான். 

இது தான் என்றில்லை ஒருவன் தொழிலாளியாக இருக்கும் பொழுது தொழிலாளியோடு தொழிலாளியாக நின்று "ரத்தத்தை உறிஞ்சும் நிர்வாகம் ஒழிக! ஒழிக! "தொழிற்சங்கம் வாழ்க! என கோஷம் போட்டுவிட்டு அவனே ஒரு காலத்தில் முதலாளி ஆகிவிடுகின்றான். அப்படி முதலாளி ஆனதும் அவன் எதிர்க்கின்ற முதல் செயல் தொழிற்சங்கங்களை எதிர்ப்பது தான். அதே போன்று அவனுடைய செயல்பாடுகளும் முதலாளித்துவ செயல்பாடுகளாக மாறிவிடும். எதையெதையெல்லாம் தொழிலாளியாக இருக்கும் பொழுது ஆதரித்தானோ? அத்தனை தொழிலாளர் நல கோரிக்கைகளையும் முதலாளியானதும் எதிர்ப்பான்.

.


 20 வருடமாக -குறைந்த பட்ச ஊதியம்

தொழிலாளர்களுக்காக இன்று வரை குரல் கொடுத்த கட்சியை பார்க்கவே முடியவில்லை (பொதுவுடமை கட்சியைத்தவிர). இன்றும் குறைந்த பட்ச ஊதியம் 2500, 20 வருடங்களுக்கு முன்னும் 2500 இப்பொழுது தான் 4000 என்று மாற்றியுள்ளனர். ( ஆனால் இன்னும் அந்த 2500 ஐ கொடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்)

இந்த மாதிரி தொழிற்சாலைகள் ஆயிரகணக்கில் தமிழகத்திலும், லட்சகணக்கில் இந்தியாவிலும் உள்ளன. இந்த முதலாளிகளின் நிர்வாக அதிகாரிகள் தான் இந்திய நாடாளுமன்றத்தின் நியமன உறுப்பினர்களாக உள்ளனர். (பஜாஜ், ரிலையன்ஸ்) இவர்களுக்கும் மக்கள் பிரச்சினைக்கும். சமூகப் பிரதிநிதித்துவத்துக்கும், சமூக அக்கறைக்கும் என்ன சம்பந்தம்? எல்லாம் முதலாளித்துவத்துக்கு எதிரான சட்டங்கள் உருவாகாமால் பார்த்துக் கொள்ளத்தான்.

குறைந்த ஊழியர் அதிக வேலை
1000 பேர் செய்ய வேண்டிய வேலையை 750 பேர் கொண்டு, ஏன் இன்னும் குறைவான தொழிலாளர்களை கொண்டு வதைத்து கொழுத்த முதலாளிகளானவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். (இதற்கு பெயர் காஸ்ட் மேனேஜ்மென்ட்- இதற்கு சத்யம் இன்போவின் ஊழல் ஒன்றே போதும் இது போல் பல முதலாளிகள் நாட்டில் அரசியல்வாதிகளின் அரவணைப்பில் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர்)

முதலாளிகளின் அட்டூழியத்தை அரசு கண்டு கொள்வதில்லை. மாறாக (தொழிலாளிக்கு) அவனுக்கெதிராக முதலாளியிடமே லஞ்சம் வாங்கி கொண்டு தொழிலாளர் விரோத அரசுகளாகவே எல்லா அரசு களும் செயல்படுகின்றன. அதற்காக ஏற்படுத்தபட்ட அமைச்சகமும், அமைச்சரும் இருக்கின்றதா? இயங்குகின்றனரா? என்றே தெரியவில்லை?

வி பி சிங்
 இதை துணிவுடன் செய்து காட்டியவர் வி.பி.சிங் மட்டுமே. திருபாய் அம்பானியின் ஊழலை, பிரதமர் ராஜீவ் காந்தியே தடுத்தும் முறைகேட்டை முதன்முறையாக தட்டி கேட்டு, அம்பலத்துக்கு கொண்டுவந்த மத்திய முன்னாள் நிதிஅமைச்சரும், முன்னாள் பிரதமரும், சமூகநீதி காவலருமான  வி.பி.சிங்கின் கதி என்னவாயிற்று என்பதை அனைவரும் அறிவோம்.அவரை ராணுவ அமைச்சராக பதவி மாற்றம்தான் செய்து, பழி தீர்த்து கொண்டது முதலாலித்துவம். அரசியல் திருபாய் அம்பானியைத்தான் காப்பாற்றியது. 

தேவை நடவடிக்கைகள்


இவரைப்போன்று அரசின் ஒட்டு மொத்த அதிகாரம் படைத்தவர்கள், அனைத்து சிறு, குறு, பெருந் தொழிற்சாலைகளையும் ஒழுங்கு படுத்த வேண்டும். தொழிற்சங்கங்களை கட்டாயமாக்க வேண்டும். முறையற்ற, தொழிலாளர் விரோத போக்கில் செயல்படும் தொழிற்சாலைகளை மூடி சீல் வைக்கவேண்டும். இல்லேயேல் அரசே கையகப்படுத்தி கொள்ளவேண்டும். குறைந்த பட்சம் அவர்களை தண்டிக்கவாவது வேண்டும். அவர்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு சர்வாதிகாரத்துக்கு துணை போகும் தொழிலாளர் நல அதிகாரிகளையும், ஊழியர்களையும் லஞ்ச ஒழிப்பின் மூலம் கைது செய்து சிறையில் தள்ளவேண்டும். தொழிலாளர்களின் நலன் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்.

உழுதவனுக்கே நிலம் சொந்தம் உழைப்பாளருக்கே இவ்வுலகம்

உழுதவனுக்கே நிலம் சொந்தம், உ.ழைப்பாளர்களுக்கே இந்த உலகம் சொந்தம். இது நிலை நாட்டப்படவில்லையென்றால். உழைக்கும் மக்களின் சர்வாதிகாரத்தை இந்த உலகம் ஒரு நாள் பார்க்கத்தான் செய்யும்.
அதை சந்திக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அதன் வெளிப்பாடுகளே இன்று பல்வேறு முகங்களாக தெரியும் புரட்சிகள்.......அதை தீவிரவாதம் என்கின்றனர்.... ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத்தில் காந்தியும் தீவிரவாதி தான், சுபாஷ் சந்திரபோசும் தீவிரவாதிதான், ஆங்கிலேய அரசு சட்டத்தின்படி. ஏன் அன்று யார்? யார்? சுதந்திரத்துக்காக போர் கொடி தூக்கினார்களோ? அத்தனை பேர்களும் தீவிரவாதிகள் தான். அது தவறில்லை என்றால் இதுவும் தவறில்லை.. அந்த நிலை உருவாவதற்கு முன் தொழிலாளர்களை காப்பது அரசின் கடமை. தொழிலாளி தன் உரிமையை நிலைநாட்டிக்கொள்வதும் ஒரு சுதந்திர போராட்டமே.....

No comments: