Pages

Monday 28 December, 2009

நான் ஏன் கண்டுபிடித்தேன்?



மிக்கைல் கலாஷ்னிக்கோவ் (Mikhail Timofeyevich Kalashnikov,) என்ற பெயர் கொண்டவரும், நவம்பர் 10, 1919 ரஷ்யாவில் பிறந்தவருமான, இவர், ரஷ்ய ராணுவத்தில் சிறு படைக்கலன்களை வடிவமைப்பவராக (Small Arms Designer) பணிபுரிந்தார்.  இவர் வடிவமைத்தவற்றுள் மிகவும் புகழ்பெற்றது தான் ஏ கே 47 வகை தாக்குதல் துப்பாக்கி (Assault Riffle) ((அ)எந்திரத் துப்பாக்கி என்று அழைக்கப்படும்-Machine Gun) இவரை கலாஷ்னிக்கோவ் என்று சுருக்கமாக அழைப்பர்.

1938 ல் ரஷ்ய செஞ்சேனைப் படைப்பிரிவில் கட்டாயமாக சேர்க்கப்பட்ட இவர். அங்கே பீரங்கி வண்டியின் கம்மியர் (Mechanic) மற்றும் ஒட்டுநர் (Driver) பணியாளராக பணிபுரிந்துவந்தார். ரஷ்யாவின் குறிப்பிடத்தக்கப் பின்னடைவான பிரயன்ஸக் தாக்குதலில் ரஷ்யப் படைகள் மிகவும் மோசமான நிலையில் பின் வாங்கின. இந்தத் தாக்குதலே இத்துப்பாக்கியை உருவாக்கக் காரணமாயிற்று.

இந்த போருக்குப்பின் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கலாஷ்நிக்கோவ் 6 மாதம் ஒய்வில் இருக்கும் நிலை ஏற்பட்டது, இவர் மருத்துவமனையில் இருக்கும் சமயத்தில் பல வீரர்கள் படையில் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் செயல்பாடுகள் குறித்து புகார் தெரிவித்ததை அறிந்தார். ரஷ்யப் படைகளிடம் உறுதியான, செயல் திறன் கொண்ட துப்பாக்கிகள் இல்லா நிலைக்கு ரஷ்யப் படைகள் தள்ளப்பட்டதை உணர்ந்து, இவரை நவீன ரக துப்பாக்கி தயாரிக்க பணித்தது. இதற்காக அவருக்கு எந்தவித சலுகையும், விடுப்பும் அளிக்க மறுத்து விட்டது ரஷ்ய ராணுவம். இருப்பினும்,  எந்திரத்துப்பாக்கி வடிவமைக்கும் எண்ணம் கொண்டார். உடல் நலிவடைந்த நிலையில் இருந்த நிலையிலும் இதில் உறுதியாக இருந்தார். இதனிடையே இவர் உருவாக்கிய முதல் எந்திரத்துப்பாக்கி இராணுவத்தினாரல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (காரணம் முதலிலேயே பாராட்டி விட்டால், அடுத்த முயற்சி இருக்காது என்பதால் தான். இது பிறகு தான் அவருக்குத் தெரியும். இருந்தாலும் கொஞ்சம் ஒவர்.) ஆனால் இவரின் முயற்சியைக் கண்காணித்தது.

1942 முதல் இவர் செஞ்சேனைப் படைப்பிரிவின் தலைமையகத்துக்காக துப்பாக்கிகளை வடிவமைக்கும் பிரிவில் உதவி புரிந்துக் கொண்டிருந்தார். 1944 இல் புதிய வாயுவினால் செயல்படக்கூடிய சிறிய துப்பாக்கியை அப்போது பயன்படுத்தப்பட்டு வந்த துப்பாக்கியின் முன் மாதிரியை வைத்து உருவாக்க ஆரம்பித்து 1946 ல் தாக்குதல் துப்பாக்கிகளை வடிவமைக்கும் நிலைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அவர் உருவாக்கிய அடிப்படை பலத் துப்பாக்கிகளை வடிவமைக்கும் முன் மாதிரியை உருவாக்கியது. இதன் உச்சநிலையாக 1947 ல் ஏகே-47 வகை (தானியங்கி கலாஷினிகோவ் மாதிரி 1947) தாக்குதல் துப்பாக்கி உருவாகியது. இதன் பின் கலாஷினிகோவ் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டார்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் சோவியத் இராணுவத்தின் சிறிய படைக்கலன் பொது வடிவமைப்பாளராக பதவி உயர்வுபெற்றார். இவருடைய வடிவமைப்பு ஜெர்மனியின் யுகோ ஷிமெய்சர் மற்றும் வெர்னர் குருனர் வடிவமைப்புகள் 1950களில் சேர்க்கப்பட்டது.(ஜெர்மனியைத் தோற்கடித்தவர்களிடமிருந்தே)  பின்னாளில் குழுத் தானியங்கி படைக்கருவிகள் ஏகே-47 க்கும் மேலான ஆர் பி கே (ருக்நாய் பியுல்மியாட் கலாஷ்னிக்கோவ் - இலகு எந்திரத்துப்பாக்கி) மற்றும் பி கே (பியுல் மியாட் கலாஷ்நிக்கோவா-கலாஷ்நிக்கோவ் எந்திரத் துப்பாக்கி) வகைத் துப்பாக்கிகளும் வடிவமைக்கப்பட்டது.

இந்த துப்பாக்கியின் வியத்தகு செயல்பாடுகள் தான் வியட்நாம் போரில் வடவியட்நாமுக்கு வெற்றியைத் தேடித்தந்தது. அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப்போரில்அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. வியட்நாம் போரில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. இரண்டாம் உலகப்போரில் ரஷ்ய ராணுவத்தினரின் பயன்பாட்டுக்காக தயாரிக்க முற்பட்டு, 1947 இல் தான் இறுதியடைந்தது. இந்த ஆயுதம். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின் தான் பயன்பாட்டுக்கே வந்தது. ஆனாலும் ரஷ்யர்களுக்கு அவ்வளவாக பயன்படவில்லை பிற நாடுகளுக்குத்தான் அதிகமாக பயன்பட்டது.

1949 கலாஷ்நிக்கோவ் துப்பாக்கித் தயாரிப்புகளுக்காக தன்னை முழுமையாக உட்படுத்திக்கொண்டார். ரியுச்சர்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில்

தன்னுடைய தாயரிப்புகள் தரமுள்ளதாகவம், நல்ல பெயர்க்காகவும், நல்ல விஷயங்களுக்காகவும் பயன்படவேண்டும் என்று விரும்புகின்றேன்.

கலாஷினிகோவ் துப்பாக்கிகள் மிகப்பிரபலமானத் துப்பாக்கியாகப் பலராலும் அறியப்பட்டதால் அவருடையப் பெயரும் அதே அளவிற்கு உயர்ந்தது என்றால் மிகையாகாது. அதன் பலனாக அவர் அதன் 1997- 50 ஆண்டுப் பொன் விழாவின் போது கூறியவை:

நான் என் படைப்புகளுக்காகப் பெருமையடைகின்றேன் அதே வேளையில் அதைத் தீவிரவாதிகளும் , சமூக விரோதிகளும் அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டு மிகுந்த வேதனை அடைகின்றேன். அதைக் கண்டுபிடித்தமைக்கும் மிகுந்த வேதனை அடைகின்றேன். இந்த நிலை தெரிந்திருந்தால் இதை கண்டுபிடித்திருக்கமாட்டேன். இனி விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதமாக எந்திரங்களை வடிவமைக்கவிருக்கிறேன். அதன் மூலம் அவர்கள் வாழ்வும் நாட்டின் வளவும் பெருகும்.

என்று ஜெர்மனியில் பேசினார்.

கலாஷ்னிக்கோவ் இரு முறை சோசலிச தொழிலாளர்களின் மாவீரன் (Hero of the Socialist Labours) என்றப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.தொழில்நுட்ப அறிவியலில் உயர்தர முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சரி இவ்வளவு பெரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளாரே, நிச்சயம் உலகப் பணக்காரர்களின் வரிசையில் இடம் பெற்றிருப்பாரா? என்றால் இல்லை. இதுவரை 10 கோடிக்கும் மேலான தாக்குதல் துப்பாக்கிகள் (Assault Riffles) தயாரிக்கப்பட்டு வலம் வந்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அவர் அதற்காக எந்தப் பயனும் அடைந்ததில்லை. அவர் சன்மானமாகப் பெற்றுக் கொண்டிருப்பது மாநில ஒய்வூதியம் மட்டுமே. (இவர்களை போன்றவர்கள் இருந்தால் ரஷ்யா ஏன்? உயராது). இவருடைய படைப்புகளுக்கு தனி வணிகச் சின்னங்களை (branded logo) உருவாக்கி, ஜெர்மன் நிறுவனம், அவற்றை தயாரிப்புகளின் மேல் பொறித்து வெளியிடுகின்றன. அதில் ஒன்று ஏ கே 74.

(ஆதாரம் தேவநேயப்பாவணர் நூலக்ம் மற்றும் அவரின் வாழ்க்கை வரலாறு இணையத்தளம்)

No comments: