Pages

Friday 25 December, 2009

பேசும் கலை வளர்ப்போம்- 3









 பேசும் கலை வளர்ப்போம் 
3

  தமிழை, இயல்-இசை-கூத்து என மூன்றாகப் பிரித்துள்ளனர்.
நமது முன்னோர். எண்ணிலடங்கா ஆண்டுகட்கு முன்பு, 
மனிதர்கள் நிர்வாணமாகத் திரிந்து கொண்டிருந்து, 
பின்னர் இலை தழைகளைக் கட்டிக்கொண்டு, 
இடுப்புக்குக் கீழே மட்டும் உறுப்புகளை மறைத்துக் கொண்டிருந்த 
அந்தக் காலத்தில் இயல் என்பது முதலாவதாகவும், 
இசையென்பது இரண்டாவதாகவும், கூத்து என்பது
மூன்றாவதாகவும் அமைந்திருக்க  முடியாது. சொற்களை 
அடிப்படையாகக் கொண்டது இயல்! ஒலியை 
அடிப்படையாகக் கொண்டது இசை! 
அசைவுகளை அடிப்படையாகக் கொண்டது கூத்து!..

     மனிதன், தொடக்க காலத்தில் மொழியறிவே 
இல்லாதவனாகத்தானிருந்தான். கல்லையோ மரத்தையோ, 
மலையையோ, ந்தியையோ கண்டபோது அவற்றுக்கெல்லாம் 
அவன் பெயர் எதுவும் வைக்கவில்லை. அதனால் 
சொற்கள் தோன்றிட வேண்டிய அவசியமே இல்லை. 
சைகைகள் வாயிலாகத்தான் மனிதர்கள் ஒருவருக்கொருவர் 
எதையும் உணர்த்திடத் தலைப்பட்டனர். கைகளை 
அசைத்து, தலைகளை ஆட்டி ஊமைகளைப் போலத்தான் 
அவர்கள் வாழ்க்கையை நடத்தினர். 

     அதன் பிற்கு தொலைவில் இருப்பவரை அழைப்பதற்கு 
ஒருவிதமான ஒலியையும், அருகில் இருப்பவரைத் தம் பக்கம் 
திரும்பச் செய்வதற்கு ஒருவிதமான ஒலியையும் எழுப்பினர். 
''ஏ'' ''ஓ''  ''ஈ'' இப்படி ஒலிக்குறிப்புகள் வாயிலாகவே 
ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டனர். மூன்றாவது 
கட்டமாகத்தான் மனித சமூதாயம் தான் வாழ்ந்த 
அந்தந்தப் பகுதிகளுக்கேற்ப சொற்களைப் 
பயன்படுத்த தொடங்கியிருக்கிறது!

    இயல், இசை, கூத்து என்பதில் இப்போது ''இயல்'' 
முதல்வரிசையில் இருந்தாலுங்கூட, மனிதன் 
தோன்றி வளர்ந்து பல மாறுதல்களைக் பெற்றிடாத 
தொடக்க காலத்தில் அசைவுகள்-சைகைகள் மூலம் 
வாழ்க்கையை நகர்த்தியதால் கூத்து என்பதுதான் அப்போது 
முதலிடத்தை வகித்திருக்கிறது. ஒலியை அடிப்படையாகக் 
கொண்ட இசை, அப்போதும் சரி-இப்போதும் சரி; 
நடு இடத்திலேயே இருக்கிறது, மூன்றாவது இடத்தில்
இருந்த இயல், சொற்களின் அடிப்படையில் இயங்குவதால்-
அந்தச் சொற்களின் இசைக்கும் தேவைப்பட்டு, 
அதே போல கூத்துக்கும் தேவைப்பட்டு, 
முதல் இடத்தில் வந்து உட்கார்ந்துகொண்டது.

   அந்த சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதன்
மூலமே எழுத்துக்கலையையும், பேச்சுக்கலையையும் 
திறமையாகக் கையாள முடியும். சொற்களைத் 
தேர்ந்தெடுப்பது என்றால் அகராதியை வைத்துக் 
கொண்டு செற்களை மனப்பாடம் செய்து, அவற்றை
நமது பேச்சில் எப்படியெப்படிக் கதிய வைப்பது 
என்று முயற்சி மேற்கொள்வது அல்ல!

  நிறைய நூல்களைப் படிப்பதாலும், நாளேடுகள், 
கிழமை ஏடுகள், திங்கள் ஏடுகளைப் படிப்பதாலும்
புதிய புதிய சொற்கள் நமக்கு ப் புதிய சொற்கள் நமக்கப் 
பழகிப் போய்விடுகின்றன. நாம் பேசும் போது அவைகள், 
தானாகவே வலிய வந்து விழவேண்டும். வாக்கியத்துக்கு
வாக்கியம் பொருத்தமான சொற்களை மேடையில் 
ஏறி நின்றுகொண்டு தேடக்கூடாது. ஓரளவு நாமே ஒரு 
அகராதியாக விளங்கிட வேண்டும். பேரகராதியாக
விளங்க முடியாவிட்டாலும் நிறைய
சொற்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


    சங்க இலக்கிய நூல் ஒன்றுக்கு உரையெழுதக்கூடிய 
அளவுக்குச் சொற்களைப் புரிந்து வைத்துக் கொள்ள 
வேண்டிய அவசியம் பேச்சாளருக்குத் தேவையில்லை! 
அதற்காக அத்தனை சொற்களையும் தெரிந்து வைத்துக் 
கொள்ள வேண்டாமென்று நான் கூறவும் மாட்டேன். 
அவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டால் அவர்கள்
மேலும் ஆற்றல் மிக்க பேச்சாளர்காளாக ஒளிவிட முடிய்ம். 
அதுமட்டுமின்றி வளர்ந்து வரும் அறிவுலகத்தில் 
நாள் தோறும் புதிய புதிய சொற்கள் பிறந்து 
கொண்டேயிருக்கின்றன. அவற்றையேல்லாம் அறிந்து 
வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு பேச்சாளனின் கடமையாகும்.  

    முன்பெல்லாம்  அவர்கள் எவ்வளவு பெரிய 
பேச்சாளர்களாக இருந்தாலும், தலைவர்களாக 
இருந்தாலும் மேடையில் ஏறியதும் சில நிமிடங்கள் 
பீடிகை போட்டுவிட்டுத்தான் பேசுவார்கள்.


    ''"அடியேன் பேசப்போகும் விஷயத்தில் குற்றம்
குறைகள் இருக்கலாம். அப்படி இருக்குமேயானால்
சபையோர்களகிய நீங்கள், எப்படிப் பாலையும்,
தண்ணீரையும் கலந்துவைத்தால் அன்னப்பட்சியானது 
பாலை மட்டும் பருகிவிட்டு, தண்ணீரை விட்டு 
விடுகிறதோ அதைப்போல எனது பேச்சில் உள்ள 
நிறைகளை மட்டும் எடுத்துக் கொண்டு குறைகளை
விட்டுவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.""


    இதுபோலத்தான் பழங்காலத்துப் பேச்சுக்கள் 
அமையும். நான் தொடக்கத்தில் மேடையில் 
பேசும்போது, இதே பீடிகையை வேறொரு உவமை 
கூறிப் பேசியிருக்கிறேன்.


   ''"அவையோர்களே! சர்க்கரையையும் மணலையும் 
கலந்து, எப்படி எறும்பானது மணலைவிடுத்துச் 
சர்க்கரையை மட்டும் தின்றிடுமோ அதைப்போலவும்-
இரும்புத் தூளையும் மரத்தூளையும் கலந்து வைத்தால், 
எப்படிக் காந்தமானது இரும்புத்தூளை மட்டும் இழுத்துக் 
கொள்ளுமோ அதைப் போலவும்-என் பேச்சில்
குறைகளைத் தள்ளிவிட்டு, நிறைகளை 
ஏற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.""


 இப்படி அன்னத்தையும் பாலையும் மாற்றி ஏதோ 
புதுமை செய்துவிட்டதாக நான் 
எண்ணிக்கொண்டிருந்த காலம் அது!.


  அப்போதும் கூட இளைஞர்களாக இருக்கும் 
பேச்சாளர்கள் தாங்கள் பேசுவதற்கு மேடையில் 
ஏறியதும் தலைவருக்கும் அவையோருக்கும் வணக்கம் 
தெரிவித்துவிட்டு,
''அறிவிலும் அனுபவித்திலும் 
முதிர்ச்சி அடையாத நான் பேசுவதிலும் குற்றம் 
குறைகள் இருந்தால் மன்னித்துவிட வேண்டுகிறேன்'' 
என்று பேச்சைத் தொடங்கினால், அந்த இளைஞரிடம் 
அவையோருக்கு ஒரு அன்பும் பாசமும் நிச்சயம் ஏற்படும். 


மனப்பாடம் செய்து கொண்டு மேடையேறுகிற பல 
இளைஞர்கள், பாடம் செய்ததைப் பரபரப்புடன்
ஒப்புவிக்கும் போது இடையில் சிறு தடங்கள் 
ஏற்பட்டாலும் திகைத்துப்போய் நின்று, மீண்டும் 
மனப்பாடம் செய்ததைத் தொடக்கத்திலிருந்து கூற 
முனைவார்கள்! அவர்களுடைய மூளையில் 
பெரிய விஷயங்களை ஏற்றாமல்-நாட்டு நடப்பில் 
அவர்களுக்குத் தெரிந்திருக்கிற விஷயங்களை 
மட்டுமே பதிய வைக்க வேண்டும். அப்பொழுதுதான், 
தாங்கள் என்ன பேசுகிறோம் என்பது அவர்களுக்கே புரியும்.


""ஏதென்சு நகரத்து அறிவுக் கிழவன் சாக்ரடீசைப் போல்
-பொதுவுடைமைப் பூங்காவுக்குக் கருத்து விதையிட்ட
காரல் மார்க்சைப்போல்-இருளில் ஒளி கண்ட 
இங்கர்சாலைப் போல்-தன்மானச் சிங்கம் 
தந்தை பெரியார் விளங்கினார்.""


இப்படி எழுதி கொடுத்ததை மனப்பாடம் செய்து
மேடையில் பேசுகிற இளம் பேச்சாளருக்கு, சாக்ரடீஸ்
என்றால் என்றால் யார்? என்று தெரிந்திருக்க 
வேண்டுமல்லாவா? மார்க்ஸ் பற்றியும் இங்கர்சால்
பற்றியும் அந்த இளம் பேச்சாளர் உணர்ந்திருக்க 
வேண்டுமல்லாவா?


அதனால் பெரியார் விழாவில் பேசுகின்ற இளம்
பேச்சாளருக்கு, எதைக் கற்றுத் தந்தால் மனத்தில்
பதியுமோ? அதை மட்டும் 
கற்றுத்தர வேண்டும்.


""பெரியார், சாதிகள் ஒழிய வேண்டுமென்று 
பாடு பட்டவர்! பிர்மாவின் முகத்திலே ஒரு சாதியும்,
தோளிலே ஒரு சாதியும், தொடையிலே ஒரு சாதியும், 
காலிலே ஒரு சாதியுமாக மனிதர்கள் பிறந்தார்கள் ,
என்பதைப் பெரியார் மறுத்து எல்லோரும் 
ஒரே குலம்தான்-மனிதகுலம்தான்"" 
என்று முழங்கினார்.


இப்படி எளிய முறையில் எளிய நடையில் இளம் 
பேச்சாளர் பயிற்சி பெற்றால்தான், அவர் உதடுகள் 
உச்சரிக்கிற வார்த்தைகளுக்கும் அவரது 
உள்ளத்திற்கும் சம்பந்தம் இருக்க முடியும். அப்படித் 
தொடர்பு இருந்தால்தான் உணர்ச்சியோடு அந்தக்
கருத்துக்களைச் சொல்ல முடியும்.


வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் 
என்னை அவரது தொகுதிப் பாராட்டு விழாவுக்கு 
அழைத்துச் சென்றிருந்தார். முதல் நிகழ்ச்சியில் 
பேசும் போது அவர் குறிப்பிட்டார். ...

""தொகுதி மக்களே! 
தேர்தல் நேரத்தில் உங்களுக்கு ஒரு பெரிய வாக்குறுதி!
கொடுத்திருந்தேன்!. அதாவது! என்னை ஜெயிக்க வைத்தால்,
கலைஞரை அழைத்து வருவதாக! இப்போது 
அவரை அழைத்துவந்து வாக்குறுதியை 
நிறைவேற்றி விட்டேன்"" என்று!


அடுத்து நான் பேசும்போது,
""என்னை அழைத்து வருவது என்பதற்காக அளிக்கப்பட்ட
வாக்குறுதி அப்படியொன்றும் பெரிதல்ல! மலிவான 
வாக்குறுதிதான்! நான் எப்போதும் மக்களைச் சந்தித்துக் 
கொண்டே இருப்பவன்"" 
எனக் குறிப்பிட்டேன்.


பிறகு அதே தொகுதியில் இன்னொரு இடத்தில் 
கூட்டம்! அந்தச் சட்டமன்ற உறுப்பினர் அங்கேயும் 
என்னை வரவேற்றுப் பேசினார். என்ன பேசினார், 
தெரியுமா?


""தொகுதி மக்களே! தேர்தல் நேரத்தில் உங்களுக்கு
மலிவான வாக்குறுதி கொடுத்திருந்தன். அதுதான், 
என்னை ஜெயிக்க வைத்தால், கலைஞரை 
அழைத்து வருவேன் என்ற வாக்குறுதி!""


இப்படிச் சொன்னதும் என்னருகே இருந்தவர்கள் 
திடுக்கிட்டனர். நான் சிரித்துக் கொண்டேயிருந்தேன். 
நான் அந்தத் தொகுதியில் முதல் கூட்டத்தில் அடக்க 
உணர்வோடு பயன்படுத்திய அந்தச் சொல்லைத்தான், 
தானும் குறிப்பிடவேண்டுமென்று அந்த உறுப்பினர் 
கருதிக் கொண்டதால் ஏற்பட்ட விளைவு அது!


'மலிவு' என்ற சொல்லுக்குக்கூடப் பொருள் புரியாத நிலை! 
மனத்தில் நினைத்தது வேறு! 
உதட்டில் வெளிப்பட்டது வேறு!


இதிலிருந்து , சொற்களை நிறைய அறிந்திருப்பதும்-
உள்ளத்திற்கும் உச்சரிக்கப்படும் சொற்களுக்கும் 
தொடர்பு இருக்கவேண்டுமென்பதும் பேச்சாளர்களுக்கு 
முக்கியமான தேவைகள் எனபது 
உணரப்படுகிறதல்லவா?


----கலைஞர் மு. கருணாநிதி


இன்னும் வரும்- 4


No comments: