Pages

Sunday 20 December, 2009

தமிழ்நாடு மனிதவுரிமை ஆணையம் என்ன செய்யும்?


 மாநில மனித உரிமை ஆணையம் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. தெரிந்தாலும் அதில் எப்படி புகார் செய்வது என்பது பற்றி தெளிவாக குறிப்பிட வில்லை. இணையத்திலும் ஆங்கிலத்திலேயே உள்ளன. மக்களுக்கு எளிதில் எட்டக்கூடியவைகளை இன்னும் அவர்கள் மொழியில் வழங்காமல் இருந்தால். அவை இருந்தும் எட்டாக்கனி மாதிரி தான்.


           
மாநில மனிதவுரிமை ஆணைய அலுவலகம், 
143 பி எஸ் குமாரசாமி ராஜா (கிரின்வேஸ் சாலை) சாலை,.சென்னை 28

        
அதன் வரையறுக்கப்பட்ட செயற்பாடுகள்                                      

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 17, 1997 ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் பிரிவு-21 இன் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993, இன்படி கட்டமைக்கப்பட்டது. இதன்படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இவ்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் பின்வரும் செயற் பணிகள் அனைத்தையும் அல்லது அவற்றுள் எதனையும் புரிதல் வேண்டும்[2][1]
  
(அ) தாமே முற்பட்டோ அல்லது பாதிக்கப்பட்டவரால் அல்லது நபர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் பேரில்;-

மனித உரிமைகளின் மீறுகைக்கான அல்லது அதில் தலையீட்டு குறைத்தலுக்கான; அல்லது


அரசு பணியாளர் ஒருவரால் அத்தகைய மீறுகையைத் தடுப்பதில் காணப்பட்ட கவனமற்ற தன்மைக்கான முறையீட்டினை விசாரித்தல் வேண்டும்.


(ஆ) நீதிமன்றம் ஒன்றின் முன்னர் முடிவுறா நிலையிலுள்ள மனித உரிமை மீறலுக்கான குற்றச்சாட்டு எதனையும் உள்ளடக்கியுள்ள நடவடிக்கை எதிலும் மாநில மனித உரிமைகள் ஆணையர் அத்தகைய நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தலையிடலாம்.


(இ) அணுகுமுறை, சீர்திருத்தம் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை அல்லது நிலையம் எதிலும் எங்கே நபர்கள் காவலில் வைக்கப்படுள்ளார்களோ அல்லது அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களோ அங்கே இருக்கின்றவர்களின் வாழ்க்கை நிலையினை கவனமாக ஆராய்வதற்கும் அதில் பரிந்துரைகளை (சிபாரிசுகளை) செய்வதற்கும் மாநில அரசாங்கத்திற்கு தகவல் அளித்துவிட்டு மாநில மனித உரிமை ஆணையம் அதனைப் பார்வையிடலாம்.

(ஈ) மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அல்லது அப்போதைக்கு அமலில் உள்ள சட்டத்தின் கீழ் மாநில மனித உரிமைகளின் பாதுகாப்பிற்காக வகை செய்யப்படுள்ள நடைமுறைகளை மறு ஆய்வு செய்யலாம். அவற்றைத் திறம்படச் செயற்படுத்துதற்கான நடைமுறைகளைப் பரிந்துரை செய்யலாம்.


 (உ) வன்முறைச் செயல்கள் (தீவிரவாதம்) உள்ளடங்களாக மனித உரிமைகள் நுகரப்படுவதை தடுத்து நிறுத்துகின்ற விடயங்கள் மறு ஆய்வு செய்தல் மற்றும் தீர்வழிக்கான உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்யலாம்.

 (ஊ) மனித உரிமைகள் மீதான உடன்படிக்கைகள், பிற பன்னாட்டு முறையாவணங்களைக் கவனமாக ஆராயவும் அவை திறம்பட செயற்படுதலுக்குப் பரிந்துரை செய்யலாம்.

 (எ) மனித உரிமைகள் பற்றிய துறையியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அதனை மேம்படுத்தவும் பல கள ஆய்வுகளை மேற்கொள்ளும் பணியினை ஆணையமே மேற்கொள்ளலாம்.

 (ஏ) மனித உரிமைகள் பாதுகாப்புக் குறித்த கல்வியை, விழிப்புணர்வை சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர்களுக்கிடையில் பரப்பவும், மக்கள் தொடர்பு சாதனங்கள், கருத்தரங்கங்கள், ஊடகங்கள், பிரசுரங்கள் வாயிலாக மக்கள் அறிய ஆணையம் வழிகள் ஏற்படுத்தலாம்.
  
(ஐ)மனித உரிமை போன்ற துறைகளில் பணிபுரிந்து வரும் அரசு சாரா நிறுவனங்கள், அமைப்புகளின் மனித உரிமை பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிக்கின்றது.

 (ஒ) மனித உரிமை மேம்பாட்டிற்குத் தேவையானதென்று கருதுகின்ற இன்னபிற பணிகளையும் மாநில மனித உரிமை ஆணையம் ஆற்றலாம்.


  • புகார் மனுவுக்கு கட்டணம் கிடையாது.
  • புகாரில் முழுமையான விவரத்தை தெரிவித்தல் வேண்டும்.
  • ஆணையம் புகார் சம்பந்தமான கூடுதல் தகவல்களை கேட்டுப் பெறலாம். புகார்களை பிரமாணப் பத்திரம் (அபிடாவிட்) மூலம் அளிக்குமறு சொல்லலாம்.
  •  தந்தி மற்றும் தொலை நகல் மூலம் அனுப்பும் புகார்களை சற்று எச்சரிக்கையுடன் ஆணையம் ஏற்றுக்கொள்கின்றது.
  •  புகார் மனு கீழ்கண்ட விவரங்கள் அடங்கியவனவாக இருத்தல் வேண்டும்;-
        புகார் மனுவில் குறிப்பிடவேண்டியவை

  1.  பெயர்
  2.  இருப்பிட முகவரி
  3. புகார் எழுந்த நிகழ்விடம் மற்றும் முகவரி
  4. .நாள் மற்றும் நிகழ்வின் காலம்
  5. மனித உரிமை மீறல்களின் விரிவான/சுறுக்கமான விவரங்கள்
  6. எந்த பொது ஊழியர் குறித்து புகார் அல்லது துறையினர் குறித்து புகார்.
  7. நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளனவா/தீர்ப்பாயம்/வேறு பிற ஆணையங்களில் நிலுவையில் உள்ளனவா?
  8. .இடர்/ துயர்/பதிலீடு குறித்து வேண்டுவன
 ஏற்றுக்கொள்ளப்படாத புகார்கள்

  • தெளிவற்ற புகார்.
  •  தெளிவற்ற பெயர் இல்லாத புனைப் பெயரில் கொடுக்கப்பட்ட புகார்.  
  • மிகச் சிறிய அளவிலான புகார்.
  • பொது ஊழியருக்கு எதிரானல்லாத குற்றச்சாட்டு.
  • சொத்துரிமைகள், ஒப்பந்த கடப்பாடுகள், உரிமையியல் சார்ந்த பிரச்சினைகள்.
  • பணி விடயங்கள் (சர்விஸ் மேட்டர்) சம்பந்தமானப் புகார்.
  • மனித உரிமைகள் மீறுதல் எதனையும் கொண்டிராத குற்றச்சாட்டுகள்.  
  • தொழில் அல்லது தொழில் தகராறு சம்பந்தமானப் புகார்.
  • ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட புகார்.
மாநில மனிதவுரிமை ஆணைய இணையதளம்   http://www.shrc.tn.nic.in/


சட்ட நூல் ஆதாரம்- மனிதவுரிமைகள் பாதுகாப்பு சட்டம்-புலமை வெங்கடாசலம்

    No comments: