இந்த சாதனைத் தமிழர் கல்லூரியில் பயின்ற பொழுது, வாழ்க்கையில் ஏதாவது சாதனை படைக்கவேண்டும் என்ற உத்வேகத்தோடு தேசிய மாணவர்படையில் சேர்ந்திருக்கின்றார். அதை மனதிற்கொண்டே கடும் பயிற்சியை சிரத்தையுடன் மேற்கொண்டிருக்கின்றார். இவரின் சிறந்த பயிற்சியை கண்டு இவரின் ஆசிரியர்கள் இந்தியாவின் ராணுவ மலையேற்ற பிரிவில் சேர்ந்து சாதனை புரிய ஊக்குவித்தனர். இவரின் பெற்றோகளும் இவரின் சாதனை முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். தேசிய மாணவர் படை பிரிவில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட இவர், இந்திய ராணுவத்தின் சியாச்சின் மலையேற்றப்பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டார். மகனின் சாதனை ஆர்வத்தை பாராட்டி பெற்றோர்களும் முழுமனதுடன் அவரை வழியனுப்பி வைத்தனர்.
சியாச்சின் பனிமலையில் பல பயிற்சிகளை முடித்த இவர், பின்னர் பல கட்ட மலேயேற்றப் பயிற்சிகளை நேபாள குளுமனாலியில் தொடங்கி முறையாக அனைத்தையும் ஏனைய மலையேற்ற குழு மாணவர்களுடன் செய்து முடித்தார். அனைத்து பயிற்சிகளையும் முடித்தவுடன் சண்முகவடிவேலு தனது 26 (மொத்தம் 27 பேர்) மலையேற்ற சகாக்களுடன் மலையேறினார். இப்பயிற்சியின் பொழுது நேபாள நண்பர் மணிராஜ் என்பவரும் இவருக்கு மிக நெருக்கமாக அறிமுகமானார். அந்த நண்பரே இவருக்கு பயிற்சியின் பொழுது பல உதவிகளை செய்திருக்கின்றார்
ஆகஸ்டு 17, 1997 அன்று 27 பேர் கொண்ட மலையேற்றக் குழுவினருடன் மலையேறத்தொடங்கிய இக்குழு வழியில் பனிப்புயலில் சிக்கியது. இவர் உயிர் நண்பரான (நேபாளத்துக்காரர்) மணிராஜ் மற்றும் ஒரு சிலர் இப்புயலில் சிக்கி உயிரிழந்தனர். தன்கண்முன்னே நிகழ்ந்த இந்த உயிரிழப்புகளை கண்டும், விடாமுயற்சியுடன் 14 நாட்கள் பயணத்திற்கு பின் எவரெஸ்டு சிகரத்தின் உச்சியை ஆகஸ்டு 31, 1997 அன்று மீதமுள்ள குழுவினருடன் சென்றடைநதார். வெற்றிக் கொடியையும் நாட்டினார்.
கொடியேற்றிய பெருமையோடு மலையிறங்கத்தொடங்கிய இக்குழுவினர் , மலையேற்றத்தின் பொழுது எவ்வளவு சிக்கல்களை சந்தித்தனரோ, அதே போன்றதோரு சிக்கல்களையும், ஆபத்துக்களையும் மலையிறக்கத்தின் போதும் சந்தித்தனர். பனிப்புயலில் சிக்கி மேலும் ஆறு பேர்களின் உயிர்களை (பனிச்சரிவினால்) இழந்து செப்டம்பர் 12, 1997 அன்று இந்த தமிழருடன் சேர்த்து 17 பேராக நிலத்தை உயிருக்கு போராடிய நிலையில் அடைந்தனர். கீழிறங்கிய அனைவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கேயே பல நாள் சிகிச்சை பெற்று தேறிய பின்னர் சிகரத்தை அடைந்த சாதனைத் தமிழர் என்ற பெருமையுடன் வீடு திரும்பினார், இந்த தமிழர். அங்கு நிலவிய கடுங்குளிர் (பனிக்கட்டி) சீதோஷ்ண நிலையால் தனது தலைமுடியையும் இழந்திருக்கின்றார் இந்த வீரர்.
இந்த இடுகையின் நோக்கம் அவரை பாராட்டுவது மட்டுல்ல. சாதனை படைத்தவரின் நிலைமையை விளக்குவது தான். சாதனை படைத்தவர்களுக்கு இந்த நாடு (இந்தியா) குறைந்த பட்ச அங்கீகாரத்தை கூட வழங்கவில்லை என்பதே வேதனைக்குரிய விஷயம். இது தமிழர் படைத்த சாதனை என்பதாலா? அல்லது அவர் ஏழை என்பதாலா? சாதனைக்கு ஏழை என்பதே தகுதிக் குறைவா? சாதனை படைப்பதற்கு வேறு ஏதாவது கூடுதல் ஜாதி தகுதி ஏதாவது வேண்டுமா? (இதற்கு கூட இடஒதுக்கீடு அமல் படுத்த வேண்டும் போலிருக்கின்றது) என்ன காரணத்திற்காக அவர் கவனிக்கப்படவில்லை?.
சும்மாவே அந்த சக்ரா, இந்த சக்ரா என்று வந்தவர் போனவருக்கெல்லாம் கவுரவத்தையும், பட்டத்தையும் கொடுக்கும் நம் நாடு இவருடைய தியாகத்தையும் கணக்கில் எடுத்திருக்கலாமே? அவர் இன்று ஒரு சிறிய தனியார் நிறுவனத்தில் கொல்லர் (blacksmith) தொழிலை 5000 ரூபாய் சொற்ப சம்பளத்தில் கால் ஊனமுற்ற நிலையில் பணி புரிந்துகொண்டிருக்கின்றார். (ஊனம் அந்த சாதனையினால் கிடைத்த பலன் தான்).
தினமும் 1400 டிகிரி நெருப்பில் அருகிலேயே வேகின்ற வேலைதான். இரும்புருக்கும் வேலை. இதற்காக அவர் வருந்தவில்லை. தன்னை எந்த விதத்திலாவது இந்த நாடு அங்கீகரித்திருக்கலாம் என்றே தனது வருத்தத்தை பதிவு செய்கின்றார். ஏன் இனிவரும் மாணவர்களுக்கு மலையேற்றத் துறையில் பயிற்சி அளிப்பவராக கூட தமிழக அரசு பள்ளிகளில், கல்லூரிகளில் நியமித்திருக்கலாம். அதன் மூலம் பல ஏழைமாணவர்களுக்கு மலையேற்றத்தை என்னால் பயிற்றுவிக்க முடியும் என தனது ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றார் இந்த தமிழர்.
இதையெல்லாம் முன்பே பல முறை அரசுக்கு தெரிவித்திருக்கின்றார். ஆனால் எதிர்பார்த்த பலன் அவருக்கு இன்னும் கிட்டவில்லை. ஆனால் அதற்காக போராடி வாழ்க்கையை வீணடித்து கொள்ளாமல், தனது குடும்ப நிலையையும் கருத்தில் கொண்டு தனது பணியை மேற்கொண்டுவருகின்றார் இந்த தமிழர். அவருடன் அந்த தனியார் நிறுவனத்தில் உடன் பணிபுரிபவர்கள், அவரின் சாதனையை மதித்து அவருக்கு தரும் உற்சாகத்தையே அவருக்கு கிடைத்த பெரிய விருதாக நினைத்து வாழ்கின்றார் இந்த வீரர்.
நாடு வாழ்த்தாவிட்டால் என்ன? நாங்கள் இருக்கிறோம் வாழ்த்துவதற்கு என வாழ்த்துவோம் இந்த தமிழரை? இனியாவது இந்த நாடு உணர்ந்து அவருக்கொரு அங்கீகாரத்தை அளிக்கட்டும். அவரின் ஏழைமையை கருத்தில் கொண்டாவது அவருக்கொரு நல்லதொரு வாழ்வை வழங்கட்டும். இதுதான் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழரின் துயர நிலை என்று வரலாற்றில் இனி எழுதாமல் இருக்கட்டும். சாதனை படைத்தவர்கள் வேதனையடையாமல் இருக்கட்டும். இவருக்கு இந்த நிலை என்றால் யார்? சாதனை செய்ய முன்வருவர்?
வாழ்க நீவிர் வளமுடன். வாழ்க உமது விரதீரச்செயல்!
அவரை பற்றிய தனியார் தொலைக்காட்சி செய்தி தொகுப்பு Tweet
No comments:
Post a Comment